― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்மனதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? ஆச்சார்யாள் பதில்!

மனதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? ஆச்சார்யாள் பதில்!

- Advertisement -

சிஷ்யன் : பல ஜனங்கள் தமது மனம் பத்துத் திசைகளில் ஓடுவதால் தியானம் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள். எல்லோரும் நன்கு தியானம் எப்படிச் செய்வது என்பது பற்றி ஆச்சார்யாள் எந்த உபதேசத்தைத் தருவார்கள்?

ஆச்சார்யாள் : தியானமென்பது ஒரு ரஹஸ்யம். குருவானவர், சிஷ்யரின் தகுதியை மனதில் வைத்தே இவ்வித உபதேசத்தை அருள்வார். மனதை அடக்குவது கடினமானாலும் அதை அடக்கி விடலாம்.

சி: சில மக்கள் மனதை அடக்குவது சாத்யமேயில்லை என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட கூற்று பற்றி ஆசார்யாள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள்?

ஆ : மனதை அடக்குவது இயலாது எனக் கூறும் ஆசாமியிடம் நூறு ரூபா நோட்டுகள் அடங்கிய கட்டு ஒன்றைக் கொடு. அக்கட்டில் எல்லளவு நோட்டுகள் இருக்கின்றன என்று தவறு வராமல் அவனை எண்ணச் சொல், அவன் அவ்வேலையை முடித்த பிறகு ‘எண்ணும்போது உன் மனம் எல்லாத் திசைகளிலும் அலைந்ததா?’ என்று கேட்டுப்பார் ‘அலையவில்லை’ என்ற பதிலே கிடைக்கும். தன் சம்பளத்தை வாங்க எண்ணும்போது ஒருவனின் மனம் அலைந்து கொண்டிருக்குமா? இல்லையே. இதற்குக் காரணம் என்ன? இக்காரியத்தில் ஒருவிதமான தவறும் ஏற்படக்கூடாது என்கிற எண்ணம்தான், இவ்விதமான பாவனை தியானம் செய்வதிலும் இருந்தால் மனம் எதற்காக அலையப் போகிறது? கீதையில் அர்ஜுனன், மனதின் அலையும் தன்மை குறித்து

சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

(கிருஷ்ணா ! மனம் மிகவும் சஞ்சலம் வாய்ந்ததாக இருக்கிறதே. அது பலமுடையதாகவும் இருக்கிறதே. காற்றை அடக்குவதைக் காட்டிலும் கடினமாயுள்ளதே) என்று கேட்டிருக்கிறான். அதற்கு கிருஷ்ணபரமாத்மா

அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்திக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய
வைராக்யேன சக்ருஹ்யதே

(சந்தேகமில்லை . குந்தியின் மகனே! இம்மனதை அடக்குவது கடினம் தான், ஆனால், அதை அப்யாஸம் மூலமாகவும், வைராக்யம் மூலமாகவும் அடக்கலாம்) என்று பதிலளித்திருக்கிறார்.

சி: அப்யாஸம் என்றால் இங்கு என்ன பொருள்?

ஆ: மனதை அடக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதே அப்யாஸம் என்று கூறப்பட்டது

சி: இங்கு வைராக்யம் என்ற சொல் எக்கருத்துடன் கூறப்பட்டுள்ளது?

எப்போது ஒருவனுக்கு லௌகீக மற்றும் ஸ்வர்க இன்பங்களில் பற்றுதலே இல்லையோ அப்போது அவனுக்கு வைராக்யமிருக்கிறது என்று சொல்லலாம். வைராக்யம் ஆன்மீக வாழ்விற்கு ஓர் அஸ்திவாரம் போலிருக்கிறது.

சி: வைராக்யத்தை எப்படி உண்டாக்குவது?

ஆ: வைராக்யம் பலவிதமான வழிகளில் ஏற்படலாம். ஒருவனின் மிகப் பிடித்தமான உறவினர் யாராவது இறந்துவிட்டால், அவனுக்கு இந்த உலகத்தில் இனி ஒன்றுமே வேண்டாம் என்று அச்சமயத்தில் தோன்றலாம். ஆனால், இதுபோன்ற வைராக்யம் நிலைத்து நிற்காது. அது நிலைத்திருக்க வேண்டுமானால், அது விவேகத்திலிருந்து வந்திருக்க வேண்டும். எது ஸத் எது அஸத் என்கிற விமர்சைதான் விவேகம் எனப்படும். அந்த விவேகம் மூலமாக ஏற்படும் வைராக்யம் நிலைத்து நிற்கும். ஸத்-அஸத் விவேகம் மூலமாக வைராக்யம் ஏற்படுவது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆகவே ‘எந்தப் பொருளிலிருந்தும் எனக்கு இன்பமே கிடையாது’ என்று எண்ணுவது சுலபமே. இதுவும் ஒருவகையான விவேகமாகும். இந்த விவேகம் மூலமாகவும் ஒருவன் வைராக்யத்தை வளர்த்துக் கொள்ளலாம்

சி: பொருட்களிலிருந்து இன்பமே கிடைப்பதில்லை என்று எவ்வாறு கூற முடியும்? ஒரு பொருளைச் சாப்பிட்டாலோ, ஒரு போகத்தை அனுபவித்தாலோ இன்பம் கிடைக்கிறதே!

ஆ: இல்லை. நன்கு ஆராய்ந்தால் பொருட்களிலிருந்து இன்பம் கிடைப்ப தில்லை என்பது புலனாகும். ஒரு பொருள் மற்றொரு பொருளுக்குக் காரணமாக இருக்க வேண்டுமென்றால் அங்கு அன்வயவ்யதிரேகங்கள் இருக்க வேண்டும். காரணம் உள்ளபோது காரியம் உண்டாவது அன்வயம். காரணம் இல்லாதபோது காரியமும் இல்லாதிருப்பது வ்யதிரேகம். உதாரணத்திற்கு மண்தான் பானைக்குக் காரணமென்று சொல்கிறோம், மண்ணிருந்தால் பானை இருக்கும். இது அன்வயம். மண் இல்லாமல் பானை ஏற்படுத்த முடியாது. இது வ்யதிரேகமாகும், காரிய காரணங்களிருக்க வேண்டுமென்று சொன்னால், அன்வய வ்யதிரேகங்கள் அவசியமிருக்க வேண்டும், பொருட்கள் காரணமாகவும், இன்பம் காரியமாகவும் இருக்க வேண்டுமென்று சொன்னால், இரண்டிற்குமிடையே அன்வய – வ்யதிரேகங்கள் இருக்க வேண்டும் ஆனால் அவை இல்லை. ஆகவே பொருட்கள் இன்பத்திற்கு காரணமில்லை என்றே தெளிவாகிறது.

சி : ஆசார்யாள் இதற்கொரு உதாரணம் தந்து விளக்குவார்களா?

ஆ : ஒருவன் ஒரு மிட்டாய் சாப்பிடுகிறானென்று வைத்துக் கொள்வோம் இப்போது, மிட்டாய் அவனது இன்பத்திற்குக் காரணமா என்று ஆராய்வோம். மிட்டாய் அவனிடம் இருந்தாலும், அவனுக்கு அதுவிருப்பமில் லாவிட்டாலோ, வியாதி போன்றவைகளின் போதோ, அவனுக்கு அம்மிட்டாய் இன்பம் தருவதில்லை. ஆகவே மிட்டாய் இருக்கும்போதும் இன்பம் தராமலிருக்கிறது. அதேபோல் மிட்டாய் இல்லாத நேரங்களில் மற்றொரு அனுபவமிருந்தால் அவன், அதன் காரணமாக இன்பத்தை அனுபவிக்கிறான். ஆகவே மிட்டாயை இன்பத்திற்குக் காரணம் என்று சொல்ல முடியாது

சி ஒரு பொருள் இல்லாத சமயத்தில், அவனுக்கு மற்றொரு பொருளால் இன்பம் கிடைக்கிறது. ஆகவே ஒரே ஒரு பொருள் மட்டும் தனியாகக் காரணமாகாவிட்டாலும், எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பார்த்தோமானால் அவை ஏன் அவனது இன்பத்திற்குக் காரணமாகக் கூடாது?

ஆ : இதுவும் சரிவராது. ஆழ்ந்த உறக்கத்தின்போது ஒவ்வொருவனும் நன்கு சந்தோஷத்தை அனுபவிக்கிறான். உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நான் இன்பத்துடன் நன்கு உறங்கினேன், எனக்கு அப்போது ஒன்றும்தெரியவில்லை’ என்கிறான். ஆழ்ந்த உறக்கத்தின் போது ஒருவிதமான பொருளும் இருப்பதில்லை. ஆயினும், ஒருவனுக்கு இன்பம் இருக்கி மது. ஆகவே எல்லாப் பொருட்களையும் ஒருசேரக் காரணங்கள் என்றும் கூற முடியாது. ஒரு பொருள் இல்லாவிட்டாலும் இன்பம் தர மற்றொரு பொருள் உள்ளது என்றும் கூற முடியாது.

சி: பொருட்கள் இன்பத்திற்குக் காரணமில்லை என்றாலும் ஒரு பொருள் கிடைக்கும் போது மனிதனுக்கு எவ்வாறு இன்பம் கிடைக்கிறது?

ஆ: – மனவமைதியினால்தான் கிடைக்கிறது. ஒரு பொருளை ஒருவன் விரும்பும்போது அவன் மனதில் ஆசைகள் இருப்பதால், அவன் மனம் அமைதியாய் இருப்பதில்லை. ஆகவே, அத்தருணத்தில் அது இன்பமாகவும் இருப்பதில்லை. வேண்டிய பொருள் கிடைத்தவுடன் அந்த ஆசை அடங்குகிறது. ஆதலால் மனம் அமைதி பெறுகிறது. அந்த அமைதியினால்தான் அவன் இன்பம் அனுபவிக்கிறான். இவ்வாறு நடந்து முடிந்தவுடன் அவனுக்கு மேலும் ஓர் ஆசையேற்பட்டு அவனது இன்பம் போய் விடுகிறது. அது கிடைத்தவுடன் மனவமைதி பிறகு இன்பம் என இதுபோய்க் கொண்டிருக்கிறது. சாமான்யமாக மனிதன் இரண்டு ஆசைகளுக்கு நடுவே இடைவெளி இருக்கிறது என்பதைக் கவனிப்பதில்லை ஆதலால் அந்த இன்பம் மனவமைதியினால்தான் ஏற்படுகிறது, என்று அவன் தெரிந்து கொள்வதில்லை. மேலும், பொருட்கள்தான் இன்பத்திற்குக் காரணம் என்று தவறான எண்ணத்திற்கு வேறு ஆளாகிறான்.

சி: ஒருவன் இன்பமானது மனவமைதியினால்தான் கிடைக்கும், பொருட்களினால் அல்ல’ என்று தெரிந்து கொண்டால், அதன் மூலம் வைராக்யம் பெறலாமா?

ஆ: ஆம், பெறலாம். “பொருட்களிலிருந்து இன்பமில்லை. அவை சிறந்தவையுமில்லை’ என்று எண்ணிக் கொண்டு போனால் ஒருவன் நிச்சயமாக வைராக்யம் பெறலாம். உதாரணத்திற்குப் பண ஆசையுள்ள ஒருவன் பணத்தைச் சம்பாதிப்பதற்குச் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்.

அதை வைத்துக் காப்பாற்றுவதும் கடினம். முடிவில், அதனாலேயுத் துன்பம்’ என்று எண்ணிக்கொள்ள வேண்டும். பெண்களின் மீது ஏற்படும் காமத்தைத் தவிர்க்க ‘இவளது உடல், வெறும் ரத்தமும், மாமிசமுக நிறைந்தது’ என்று கருதலாம். இதிலிருந்து அந்த மாதிரி ஆசைகளைத் தவிர்த்து மனவமைதி பெறலாம். இம்மாதிரி நல்ல எண்ணங்கள் மூலம் வைராக்யமானது ஏற்பட்டு நிலைத்து நிற்கும். வைராக்யமுள்ள மனம் தான் தியானம் செய்வதற்கு ஏற்றது. வைராக்யமுள்ளவன் முயற்சிகள் செய்து, தியானத்தின் உத்தம நிலையையும் அடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version