― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்காக்க காத்திருப்பவர் கரங்களை ஏற்க மறுக்கும் மனித மனங்கள்! பிழை எங்கே?

காக்க காத்திருப்பவர் கரங்களை ஏற்க மறுக்கும் மனித மனங்கள்! பிழை எங்கே?

- Advertisement -
well

காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான்.

இவனை காப்பாற்ற ஆளில்லை..

“யாராவது என்னை தூக்கி விடுங்கள்…கஷ்டம் தாங்க முடியவில்லை.. காப்பாற்றுங்கள்” என்று கூவி கூவி கதறினான்..

இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார்.

வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, “அடடா! கீழே விழுந்து விட்டாயா!! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்” என்றார்.

முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, “இதோ! இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள்! நான் உன்னை தூக்கி விடுகிறேன்” என்றார்.

இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்..

“ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்” என்றார் வந்தவர்.

“அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?” என்றான் விழுந்தவன்.

“கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்” என்றார் வந்தவர்.

“கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?” என்றான் விழுந்தவன்.

“கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)” என்றார் வந்தவர்.

“இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?” என்றான் விழுந்தவன்.

“தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்.” என்று வந்தவர் சொல்ல,

“தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?” என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,

“நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் (அச்யுத). கவலையே படாதே!” என்று வந்தவர் சொல்ல,

well

“அது சரி.. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?” என்று விழுந்தவன் கேட்க,

“நான் திடமானவன் (த்ருட). நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி” என்றார் வந்தவர்.

“அதெல்லாம் முடியாது.. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்பீர்கள்” என்றான் விழுந்தவன்.

“நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம்.. நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் ஸ்வபாவம். என் ஸ்வபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, தக்ஷிணை எனக்கு தேவையே இல்லை” என்றார் வந்தவர்.

“தக்ஷிணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றியதால், ‘நான் தான் உன்னை காப்பாற்றினேன். நான் தான் காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை’ என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்றான் விழுந்தவன்.

“வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு (கைவல்யம்). காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்” என்றார் வந்தவர்.

“நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது..
ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, ‘ஏண்டா.. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?’ என்று நீங்கள் அடித்து விட்டால்?.. அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் – நம்மாழ்வார்). என்னை விடுங்கள்.” என்றான் விழுந்தவன்..

“நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், ‘பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன், பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்’ என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது?”
என்றார் வந்தவர்.

இப்படி காப்பாற்றுபவர் வந்தும்,
காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும்,
போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு,
காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு,
பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.

வந்தவர் – பகவான் நாராயணன்.
விழுந்தவன் – ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு – பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு – பக்தி என்ற கயிறு போட்டார்.

முடிச்சு – பக்தி என்ற கயிற்றில் “ஹரே” என்ற நரசிம்ம நாமத்தையும், “ராம’ என்ற ராம நாமத்தையும், “கிருஷ்ண’ என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுக்களாக போட்டு பிடித்து கொள்ள சொன்னார்.

ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல் (அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், கிருஷ்ண பரமாத்மாவை பார்த்து, பீஷ்மர் “த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:” என்று இந்த அனுபவத்தில் பகவானுக்கு பெயர் சூட்டுகிறார்.

திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர் (ஸங்கர்ஷண), திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)

கீதோபதேசம் செய்த போதே, கிருஷ்ண பரமாத்மா இதை சொன்னார் என்று பார்க்கிறோம்..

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्

  • bhagavad gita
    தேஷாம் அஹம் சமுத்தர்தா
    ம்ருத்யு சம்சார சாகராத்
  • பகவத் கீதா
    Sree krishna says “Paartha! I swiftly pullout them from the ocean of birth and death”
    “பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்” என்று சொல்கிறார்.
sri krishna

நான் நிச்சயம் காப்பாற்றுவேன்..என் நாமத்தை நம்பிக்கையோடு பிடி என்று பகவான் பக்தி என்ற கயிறை போட்டாலும், சந்தேக புத்தி உள்ள ஜீவன், அங்கேயே இருக்கிறேன் என்று அசட்டு தனம் செய்வதை தான், நம்மாழ்வார் பதிலாக மதுரகவிக்கு சொல்கிறார் என்று பார்க்கிறோம்.

ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பிய மதுரகவி, திருக்குருகூர் வந்து நம்மாழ்வாரைச் சந்தித்து,
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”
என்ற கேட்டார்.

அதற்கு நம்மாழ்வார்,
“அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலளித்தார்.

நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி,
“இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ஆத்ம குரு’ என்று உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார்.

பகவான் போட்ட பக்தி என்ற கயிறை பிடித்துக் கொள்ளாதவரை, நமக்கு விமோசனம் இல்லை என்று உணர்த்துகிறது “த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:” என்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version