spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அசைக்க முடியாத அனுமன்! கர்வம் அகன்ற பீமன்!

அசைக்க முடியாத அனுமன்! கர்வம் அகன்ற பீமன்!

- Advertisement -
hanuman 1 1
hanuman 1 1

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த பொழுது ஒரு நாள் வடக்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் அடிக்கப்பட்டு ஒரு மிகவும் நறுமணம் வாய்ந்த மலர் பாஞ்சாலியிடம் வந்து விழுகிறது.

அந்த மலரைக் கையில் எடுத்து திரெளபதி அதன் அழகினாலும் வாசனையினாலும் பரவசம் ஆகிறாள்.

அவள் பீமனிடம் சென்று இந்த வகையைச் சேர்ந்த இன்னும் சிலமலர்களை பறித்துகொண்டு வருமாறு வேண்டுகிறாள்.

பீமனும் அவ்வாறே சென்று அந்த மலரின் வாசனையைக் காற்றில் நுகர்ந்து கொண்டே அந்த திசையில் வெகு தூரம் தனியாகச் செல்கிறான்

இமயமலையின் தாழ்வரையில் ஒரு பெரிய வாழைமர சோலையை அடைகிறான்.

சோலையின் நடுவில் வழியை அடைத்துக் கொண்டு ஒரு குரங்கு தனிமையாகப் படுத்திருப்பதைக் கண்ட பீமன் தன்னையும் அறியாமல் ஒரு பெரிய சத்தம் போடுகிறான்.

அந்தக் குரங்கு தன் கண்களைச் சிறிது திறந்து அலட்சியமாகப் பீமனைப் பார்த்து,

“எனக்கு உடம்பு சரியாக இல்லை. படுத்திருக்கிறேன். நீ ஏன் என்னை எழுப்புகிறாய்?

hanuman 2 1
hanuman 2 1

மனிதர்கள் பிராணிகளிடம் கருணை காட்டுவது முறை. உன்னைப் போன்ற புத்திமான்கள் மிருகங்களை இம்சிக்கலாகாது.

நீ யார்? எங்கே போக வந்திருக்கிறாய்? இமயமலையில் இதற்கு மேல் செல்ல முடியாது. இது தேவலோகத்திற்குச் செல்லும் பாதை. மனிதர்கள் இதைத் தாண்டிப்போக முடியது.

உன் வரவு நல்வரவு ஆகுக. நீ இங்கே பழங்களைப் புசித்து விட்டுத் திரும்பு. நான் சொல்வதைக் கேள்” என்கிறது.

பீமனுக்குக் கோபம் பொங்குகிறது.

“நீ யார்? இவ்வளவு பேசுகிறாய்! நான் ஷத்திரியன். குரு வம்சத்தில் பிறந்த வீரன். குந்தி தேவியின் மகன். வாயு புத்திரன்.! என்னைத் தடுக்காதே. வழியை விட்டு விலகு!” என்கிறான்

வானரம் இந்தப்பேச்சைக் கேட்டு கொஞ்சம் புன்சிரிப்புச் செய்தது.

“நான் ஒரு குரங்கு. இந்த வழியில் செல்வாயானால் நீ நாசத்தை அடைவாய்” என்கிறது.

பீமசேனன்,

“வானரமே! நான் நாசமடைந்தாலும் சரி. ஏதானாலும் சரி. உன்னை நான் கேட்கவில்லை. எனக்குக் கோபம் உண்டாக்க வேண்டாம்” என்கிறான்.

“எனக்கு எழுந்திருக்க சக்தியில்லை. கிழக்குரங்கு. அவசியம் போகவேண்டும் என நினைத்தால் என்னைத் தாண்டிச்செல்வாயாக” என்கிறது வானரம்.

“பிராணியைத் தாண்டிச் செல்லலாகாது என்பது சாஸ்திரம். ஆகையால் நான் உன்னைத் தாண்டிச் செல்லவில்லை.

இல்லாவிடில் அனுமன் சமுத்திரத்த்தை தாண்டியது போல் உன்னையும் மலையையும் ஒரே பாச்சலாய்த் தாவிச்சென்றிருப்பேன்” என்கிறான் பீமன்.

மானிடனே! கடலைத்தாண்டிய அந்த அனுமன் யார்? உனக்குத் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்” என்கிறது வானரம்.

“ராம பத்தினியைத் தேடுவதற்காக நூறு யோசனை அகலமுள்ள கடலைத் தாண்டியவனும், எனக்கு அண்ணனுமான ஹனுமானை உனக்குத் தெரியாதா?

பலத்திலும் நான் அவனுக்குச் சமானமாவேன். ஒரு காரியமாக நான் இங்கே வந்திருக்கிறேன். வழியை விடு. எழுந்திரு.

hanuman
hanuman

நான் சொன்னதைக் கேளாயாகில் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்” என்று பீமன் வானரத்தை அதட்டுகிறான்.

“வீரனே!! கோபம் தணிவாயாக. முதுமையால் எனக்கு எழுந்திருக்கச் சக்தி இல்லை.

என்னைத் தாண்டிச்செல்வதில் உனக்கு ஆட்சேபணை இருந்தால் என்மேல் கருணை கொண்டு இந்த வாலை நகர்த்தி விட்டுச் செல்வாயக” என்கிறது வானரம்.

தன்னுடைய புஜபலத்தில் கர்வங்கொண்ட பீமன், இவ்வாறு சொல்லப்பட்டவுடன்,

‘இந்தக் குரங்கை வாலைப் பிடித்து இழுத்து அப்புறம் தள்ளலாம்” என்று எண்ணி அதன் வாலைப் பிடிக்கிறான். வாலை அசைப்பதற்கே முடியவில்லை!பீமன் வியப்படைகிறான்.

இரு கைகளையும் கொண்டு இழுத்துப் பார்க்கிறான். புருவங்கள் நெறித்து, விழி பிதுங்கி உடல் வியர்த்தது. வாலைத் தூக்கக் கூட முடியவில்லை. வெட்கப்பட்டுத் தலை குனிந்து நிற்கிறான்.

“நீ யார்? என்னைப் பொறுக்கவேண்டும். நீர் சித்தரா? தேவரா? கந்தர்வரா? நீர் யார்? சிஷ்யன் கேட்கிறேன். சரணம்” என்கிறான் பீமன்.

பலவானைக் கண்டால் பீமனுக்கு உடனே பக்தி.

பாண்டவ வீரனே! சர்வலோகங்களுக்கும் பிராண ஆதாரமான வாயுவின் மகன் அனுமன் நான்தான்.

தம்பி பீமா!

யக்ஷரும் ராக்ஷதர்களும் இருக்கும்
இந்த வழியில் நீ சென்றால் ஆபத்துக்கு ஆளாவாய் என்று உன்னை நான் தடுத்தேன். இது தேவலோகம் போகும் வழி. இதில் மனிதர்கள் செல்ல முடியாது.

நீ தேடி வந்த செளகந்திகச் செடி இருக்கும் நீரோடையும் மடுவும் அதோ பார்” என்கிறான் ஹனுமான்.

பீமன் அனுமனை வணங்கி முன்பு கடல் தாண்டிய பொழுது எடுத்த விஸ்வரூபத்தை தான் காண விரும்புவதாகக் கூறுகிறான்.

அனுமனும் அவ்வாறே தன் விஸ்வரூபத்தைக் காட்டுகிறான்.

பீமன் அனுமனிடம் போர் நடக்கும் பொழுது தன் தம்பியாகிய அர்ஜுனனின் தேரின் கொடியாக விளங்கி அர்ஜுனனுக்கு வெற்றி வாகை சூட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறான்.

பீமன் அனுமனைத் தழுவிக் கொண்டு தேடி வந்த செளகந்திக மலருடன் அனுமனிடம் விடை பெற்றுத் திரும்பிச் செல்கிறான்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நம்பி சன்னிதியின் கோபுரத்தின் உட்புறம் இடது பக்கத்தில், பீமனும் ஹனுமானும் சந்திக்கும் நிகழ்வு ஒரு சிற்பமாக கல்லில் வடிக்கப்பட்டு இருக்கிறது.

அனுமனை ஒரு சாதாரண குரங்கு போன்று செதுக்கியிருப்பதும் அதன் நீண்ட வால் வழியை மறைத்திருப்பது போல் அமைந்திருப்பதும் பீமன் தன் கதையால் அந்த வாலை நகர்த்த முயற்சிப்பதையும் அழகாகக் காட்டும் அற்புதமான் சிற்பம் அது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe