spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!

கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!

- Advertisement -
murugar shasti
murugar shasti

கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய!

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும்.

ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.

இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.

சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

கந்த விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர். கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள்

முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.

ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார்.

அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. .

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை ஆறு உட்பகைகள் : அவா, கோபம், மயக்கம், கஞ்சத்தனம், செருக்கு, பொறாமை
(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும்.

ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சந்நிதி, கதிரமலை(கதிர்காமம்), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி.

இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை

அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகாசரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச்சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பதுநன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe