― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்மயில் வாகனன்.. மனமோகனன்!

மயில் வாகனன்.. மனமோகனன்!

- Advertisement -
murugar 1

முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.

சூரனுடன் நடந்த போர்க்களத்தில் இந்திரன், மயில் வடிவம்கொண்டு முருகனைத் தாங்கினான். போரின் இறுதியில் முருகன் மருத மரமாக நின்ற சூரனை இரண்டாகப் பிளந்தார். அது, மயிலாகவும் சேவற் கொடியாகவும் ஆனது. அவற்றை முருகன் ஏற்றுக்கொண்டான். அது முதல் அவனுக்கு நிலைத்த வாகனமாக மயில் இருந்துவருகிறது.

வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விழா, `மயூர வாகன சேவை’ என்று சிறப்புடன் போற்றப்படுகிறது. ஆலயங்களில் மரத்தால் செய்யப்பட்டு, பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பெற்ற மயில் வாகனங்கள் உள்ளன.

பெரிய ஆலயங்களில் வெள்ளி, தங்கத் தகடு போர்த்தப்பட்டு கலையழகுடன் விளங்கும் மயில் வாகனங்களும் உள்ளன. சென்னை கந்தக்கோட்டத்திலுள்ள தங்க மயில்வாகனம் சிறந்த கலைப் படைப்பாகத் திகழ்கிறது.

முருகனுக்கு மயில்வாகனம் அமைந்திருப்பது போலவே, அவருடன் தனித்தனியே எழுந்தருளும் வள்ளி, தெய்வானை ஆகிய தேவியரும் மயில்வாகனங்களில் வலம்வருகின்றனர். பிரணவம் மற்றும் மந்திரங்கள் முதலானவை மயிலாக விளங்கி முருகனைத் தாங்கும் அபூர்வத் தகவல்களைக் காணலாம்.

மந்திர மயில்

சுப்பிரமணியப் பெருமான் மந்திரங்களின் நாயகன், மந்திரங்களின் வடிவானவன். எனவே, அவன் ஏறிவரும் மயிலும் மந்திரங்களின் ஆதாரமான பிரணவத்தின் வடிவமாக விளங்குகிறது. மயில் தோகையை விரித்து நிற்பது ஓங்காரமாகத் தோன்றுகிறது. அதன்மீது மந்திர ரகசியங்களின் தலைவனாகக் குகன் எழுந்தருள்கின்றான். இந்த நிலையில் அவன் பாலகனாகக் (இளையவனாக) காட்சியளிக்கிறான். அருணகிரிநாதர், `ஆன தனிமந்திர ரூப மயில்’ என்று மயிலை, மந்திரத்தின் வடிவமாகப் போற்றுகிறார்.

murugar

இக்காட்சியே `குக ரகசியம், தகராலய ரகசியம்’ எனப்படும். பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் அவன் காட்சியளித்தான். இவ்வடிவம் தவத்திரு சுவாமிகளாலும் அவருடைய அன்பர்களாலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பல வகைகளிலும் மந்திர மயில் திகழ்கிறது.

இரண்டாவது நிலையில் விரித்த தோகை யினையுடைய மயிலின் மீது முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை நாயகியருடன் எழுந்தருள் கிறான்.

மூன்றாவது வகையில் விரித்த தோகையை உடைய மயில்மீது ஆறுமுகனாகப் பெருமான் வள்ளி, தெய்வானை நாயகியருடன் எழுந்தருள்வதாகும். இதுவே மிகச்சக்தி வாய்ந்த முருகனின் திருவுருவமாகக் கொள்ளப்படுகிறது. இதை வழிபடுவதற்கு மிகுந்த சீலமும் பயபக்தியும் வேண்டுமென்பதால், இத்தகைய திருவுருவங்களை வழிபடுவோரும் மிகக் குறைவே.

ஆலயங்களின் முகப்பில் இத்தகைய சுதை வடிவங்களை அமைக்கும் வழக்கம் இருந்தது. பின்னாளில் அதுவும் கைவிடப்பட்டு, முருகனை மயில்மீது அமைத்து, இரு பெரும் தேவியரை இருபுறமும் நிற்கும்படியாக அமைக்கின்றனர்.

அச்சகங்கள் வண்ணப்படங்களை அச்சிடத் தொடங்கிய காலங்களில், மந்திர மயிலில் ஆறுமுகன் இருபெரும் தேவியருடன் காட்சியளிக்கும் வண்ணப்படங்கள் அச்சிடப் பட்டன. பின்னாளில் அத்தகைய வழக்கம் ஏனோ கைவிடப்பட்டுவிட்டது. இப்படங்களிலும் மயிலின் தலை வள்ளியம்மையை நோக்கியிருப்பது மோட்ச சாதனங்களைக் கொடுக்கும் என்றும், தெய்வானையை நோக்கியிருப்பது சுக போகங்களை அளிக்கும் என்றும், நேராக இருப்பது இக பர சுகங்களை அளிப்பதென்றும் கூறுவர்.

mayil vaganam

மணி மயில்

மணி என்பது ரச மணியையும் உடலில்பட்ட அளவில் நோய் தீர்க்கும் ஔஷத மணியையும் குறிக்கிறது. மணி நாதம்’ என்றும் பொருள்படும். நாதமயமான ஓசையை வகைப்படுத்தி அதன் மூலம் பல செயல்களைச் செய்யும் முறைகளை விளக்கும் நிகழ்ச்சியைப் பரிபாஷைச் சொல்லால் மணி’ எனக் குறித்தனர் என்பர். மணி மயிலை, `நாத மயில்’ எனவும் அழைப்பர்.

இந்த மயில் பார்வைக்குக் கிட்டாத மயில். மந்திர உபதேசத்தின்போது முருகன் இந்த மயில் மீதிருந்து உபதேசம் செய்கிறான். இம்மூர்த்தியை தியானிப்பது மட்டுமே வழக்கம். சிலையாக அமைப்பதில்லை.

சக்தி மயில்

மற்றுமோர் வகையில் மணி என்பது மனோன்மணியாகிய பராசக்தியைக் குறிக்கும். பராசக்தியே மயில் வடிவம் தாங்கி குமரனுடன் ஆடி மகிழ்கிறாள். மயிலாகி இறைவனைப் பூசிப்பதும், குமரனோடு விளையாடுவதும் அன்னையின் கருணையைக் குறிக்கும். இதனால் இறைவிக்கு, `மயிலம்மை’ என்பது பெயராயிற்று. இம்மயில் முருகனைவிடச் சற்றுப் பெரியதாக விளங்க, முருகன் இளையவனாக அருகில் இருந்து அதை ஆரத்தழுவி மகிழ்வான்.

ஔஷத மயில்

ஔஷதம் என்பதற்கு, `நோய்களைத் தீர்க்கும் மருந்து’ என்பது பொருள். மயில் தோகையை மருந்தாக நாட்டுப்புற வைத்தியர்கள் பயன் படுத்துவதை இப்போதும் காணலாம்.

நாம் இங்கு சொல்லப்போவது பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும். பவரோக வைத்தியநாதனாகிய முருகப் பெருமான், இம்மயில்மீது அருவமாக எழுந்தருள்கிறான். அவன் இருப்பதைக் குறிக்க வேல் மட்டுமே விளங்கும். தவத்திரு பாம்பன் சுவாமிகளுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, மயிலும் வேலும் தோன்றி அந்நோயை நீக்கியது இங்கு எண்ணத்தக்கதாகும். அந்த நிகழ்ச்சியை அவர் `அசோக சாலவாசம்’ எனும் நூலில் விவரித்துள்ளார். அவருக்கு இரண்டு பொன் மயில்கள் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.

பல அடியார்களின் வாழ்வில், மயில் தன் தோகையால் வீசுவதுபோன்ற தோற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவருடைய நோய் தீர்ந்த வரலாறுகள் உள்ளன. எனவே, இந்த மயில் `ஔஷத மயில்’ எனப்பட்டது. இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல் மட்டுமே தோன்றும்.

இந்திர மயில்

சூரனுடன் முருகன் போர் நிகழ்த்தியபோது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் துரத்திச் செல்ல முருகன் எண்ணியபோது, இந்திரன் அழகிய மயிலாகி, அவரைத் தாங்கினான். முருகன் அவன்மீது ஏறி அசுரனைத் தொடர்ந்து சென்று வென்றார். இவ்வாறு அமைந்த மயில், `இந்திர மயில்’ எனப்படும்.

silver

அசுர மயில்

முருகனிடம் பலவாறு போரிட்டு ஓய்ந்த சூரபத்மன், இறுதியில் கடலின் நடுவில் ஒரு மருத மரமாகி நின்றான். அம்மரத்தை முருகன் தன் வடிவேலாயுதத்தால் இரண்டு கூறாகப் பிளந்தான். அவற்றுள் ஒன்று மயிலாகவும் மற்றது சேவலாகவும் மாறின. பின்னர், மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் ஏற்றான். அன்று முதல் சூரனே மயிலாகிப் பெருமானைத் தாங்குவதாக ஐதீகம். இந்த வகை மயில், `அசுர மயில்’ எனப்படும்.

ஆன்ம மயில்

சிவாலயங்களில் கருவறைக்கு நேரே கொடி மரத்தினை யொட்டி அமையும் நந்தியை ஆன்ம நந்தி’ என்பது போலவே முருகனின் ஆலயங்களில் கொடி மரத்துக்கு அருகே அமையும் மயிலை ஆன்ம மயில்’ என்கின்றனர்.

பக்தர்களின் ஆன்மா மயிலாகச் சித்திரிக்கப்படுகிறது. முருகன் எனும் கருணை மழை பொழிவது கண்டு ஆன்மா மயிலாகி நடனமிடுகிறது. புற அழகு நான் என்னும் கர்வத்தாலும், குலச்செருக்கு, கல்விச்செருக்கு என்னும் செருக்குகளாலும் களித்திருக்கின்ற ஆன்மா, இறைவனை உணர்ந்த பின்னர் அடங்கி, ஒடுங்கி நிற்பதையே இம்மயில் சுட்டுகிறது.

வேத மயில்

(கணேசர் முருகனுக்கு அருளிய மயில்)

சிவபெருமானுக்கு வேதம் எவ்வாறு விடை வாகனமாக இருக்கின்றதோ அவ்வாறே முருகனுக்கும் வேதம் மயிலாகத் திகழ்கிறது. மேலும், விநாயகப் பெருமானுக்காக வேத வேள்வியிலிருந்து வெளிப்பட்ட மயில், பின்னாளில் முருகனுக்கு அவரால் தரப்பட்டதை விநாயக புராணத்தால் அறிய முடிகிறது.

ஒரு கல்பத்தில் கமலாசுரன், சங்காசுரன் என்பவர்கள் வாழ்ந்து வந்தனர். கமலாசுரன் ஆணைப்படி சங்காசுரன் பிரம்ம தேவனிடமிருந்து படைப்புத் தொழிலுக்கு மூலக் காரணமான வேதத்தைப் பிடுங்கிக்கொண்டு கடலில் ஒளிந்துகொண்டான். அனைவரும் விநாயகரைச் சரணடைந்தனர். விநாயகர் வேதத்தை மீண்டும் படைத்து, பிரம்மதேவருக்கு அளித்ததுடன் படைப்புத் தொழிலைத் தொடர்ந்து செய்ய அருள்பாலித்தார்.

இதையறிந்த கமலாசுரன் விநாயகர்மீது படையெடுத்து வந்தான். அதை அறிந்த கார்க்கியர் என்ற முனிவர் ஒரு வேள்வி இயற்றினார். அதிலிருந்து ஓர் அழகிய பொன் மயில் தோன்றியது. அதை அவர் விநாயகருக்கு வாகனமாக அளித்தார்.

murugar ganapathi

விநாயகர் அதன் மீதேறிச் சென்று கமலாசுரனைக் கொன்றார். அதன்பின்னர் அந்த மயில் வாகனத்தைத் தன் தம்பிக்கு அளித்தார் என்று விநாயக புராணம் கூறுகிறது. வேத வேள்வியில் இருந்து தோன்றியதால், இதற்கு `வேத மயில்’ என்பது பெயராயிற்று.

இப்படி புராணங்களில் பல்வேறு மயில்கள் முருகனுக்கு வாகனமாகக் கூறப்பட்டுள்ளன.

பகை கடிதல்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மயில் வாகனத்திடம் அதன் சிறப்புகளைக் கூறி போற்றி, `உனது இறைவனாகிய முருகப்பெருமானை என் முன்னே கொண்டுவந்து சேர்ப்பாயாக’ என்று வேண்டும்வகையில் இந்நூலை அருளிச் செய்துள்ளார்

இதிலுள்ள பாடல்கள் அனைத்தின் இறுதியிலும் எனது எதிரே உன் இறைவனைக் கொண்டு வருக’ என்று வேண்டுதல் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் அருணகிரிநாதப் பெருமான் முருகனைக் கம்பத்தில் தோன்றும்படி வேண்டும் வேளையில் மயிலைப் போற்றி அவனை அழைத்து வருமாறு பாடிய வரலாறும் இங்கே நினைக்கத்தக்க தாகும். மயில் வாகனமே இறைவனை பக்தனிடம் கொண்டுவந்து சேர்ப்பதாக பெரியோர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version