
கெடுவன
மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,
மூதரண் இலாத நகரும்,
மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை
மோனையில் லாத கவியும்
காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல
கரையிலா நிறையே ரியும்,
கசடறக் கற்காத வித்தையும், உபதேச
காரணன் இலாத தெளிவும்,
கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத
கோதையர்செய் கூத்தாட் டமும்,
குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று
கோடுயர்ந் தோங்கு தருவும்,
ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, அருமை தேவனே!, முதியவர் ஒருவர் இல்லாத கன்னியின் இல்வாழ்க்கையும், பழைமையான காவல் இல்லாத பட்டினமும், கூறப்பட்ட பல அதிகாரிகள் கூடும் இடமும், இலக்கணத்தில் வரும்
எதுகையும் மோனையும் சேராத செய்யுளும், காவல் பொருந்தியிராத ஒரு பூங்காவும், நல்ல கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும், குற்றமின்றிக் கல்லாத கல்வியும், கசடுஅறக் கற்காத
வித்தையும் கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும்,
கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத
விறலியர் ஆடும் கூத்தும், குளிர்ந்த நீர் நிறைந்து வரத்தக்க ஆற்றோரத்திலே இருந்து வளரும் நீண்ட உயர்ந்த
கொம்புகளையுடைய மரமும், சுள்ளாணி இல்லாத தேரும், இவை யாவும் ஒரேதன்மையுடையன (கெடுவன) ஆகும்.
எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.