நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும்
இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதாங்கோவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மாசி மாத மகா சிவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5 நாட்கள் நடைபெறும் விழாவில் நாள் தோறும் சிறப்பு பூஜைகள், அம்பாள் வீதியுலா நடைபெற்றது. நிறைவு நாள், மஹா சிவராத்திரி நாளான நேற்று இரவு சிவன் ஒரு அலகாகவும், சக்தி ஒரு அலகாகவும் கருதி அவ்வூர் மக்கள் அதிகாலை 3 மணிக்கு பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் காலை 4.30 மணியளவில் இரண்டு அலகுகளையும் இரண்டு பானைகளின் கழுத்தில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அலகுகள் நிறுத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வை காண உள்ளுர் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அலகு நிறுத்துதல் என்பது கயிலாயத்தில் சிவனும் சக்தியும் பிரிந்த நிலையில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே சக்தியை சந்திப்பதாக சிவன் சக்திக்கு வரம் வழங்கியதாக ஐதீகம். இந்நிகழ்வையே, ஒரு அலகை சக்தியாகவும் , மற்றொரு அலகை சிவனாகவும் பாவித்து இரண்டு அலகுகளையும் சேர்த்து அலகு நிறுத்தல் நிகழ்ச்சியை பல தலைமுறைகளாக நடத்தி வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதே போல கீழப்பாவூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் ,ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ தலைசாய்த்த முப்பிடாதி அம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் இதே போன்று அலகு நிறுத்தி வழிபாடு நடைபெற்றது