
கவி வணக்கம்
மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந் துயர்கூ விளம்
மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட
மணிமுடி தனிற்பொ றுத்தே
சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர்சூ டவே
சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா
தேவதே வா!தெ ரிந்தே
கலைவலா ருரைக்குநன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகு மென்புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்
கடன் ஆகும் அடல்நா கமும்
அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
கொல்லும் பாம்பும் அலைமிகுந்த கங்கையும் நல்ல பிறையும் அணிந்த தூயவனே!, அருமை தேவனே!,
மலர்ந்த கொன்றை, பசிய குவளை,
மெல்லிய முல்லை, மல்லிகை மருக்கொழுந்து, உயர்ந்த வில்வம், மற்றும் வேறும் உள்ள மணமலர், பச்சிலைகள் (ஆகியவற்றை) சில (அடியார்கள்) அணிவிக்க, நவமணிகள் இழைத்த முடியில் ஏற்று, சிலர் எருக்கமலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, மனம் வைத்து அவற்றையும் ஏற்று அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!, கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்லபாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, திருவுள்ளம் களித்தருளுவது உன் கடமை ஆகும்.
அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும்
முற்றிற்று.