கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்ட நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வருகிற ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது காலை 7மணிக்கு உஜ பூஜை தொடர்ந்து நெய் அபிஷேகம் அஷ்டாபிஷேகம் லட்சார்ச்சனை பகலில் களபபூஜை ஐயப்பனின் விக்ரகத்தில் களபாபிஷேம் உச்சிபூஜை இரவு மலர் அபிஷேகம் படிபூஜை அந்தாள் பூஜை நடத்தி ஹரிவராஸனம் பாடி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.
ஹரிஹரபுத்திரன் மணிகண்டனுக்கு கோவில் கட்டியவர் மன்னர் ராஜசேகரன். அதற்கான பொருத்தமான இடத்தை தானே தேர்வு செய்தார் மணிகண்டன். மணிகண்டன் தன்னுடைய அம்பை எடுத்து வில்லை எறிந்தார். அது ஒரு இடத்தில் சென்று தைத்தது. அந்த இடம் ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரை நோக்கி சபரி என்கிற பெண் துறவி தவமிருந்த இடமாகும். அந்த இடம் தான் சபரிமலை. சபரிமலையில் தனக்கு கோயில் கட்டும்படி மன்னர் ராஜசேகரனிடம் கூறிய மணிகண்டன் உடனடியாக மாயமானார்.
அகஸ்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி மன்னர் ராஜசேகரன் கோயில் கட்டும் பணியை முடித்தார். சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். பரசுராமர் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி பிரதிஷ்டை செய்தாக தல வரலாறு கூறுகிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்த தினமான வைகாசி ஹஸ்தம் நாள் பிரதிஷ்டை தினமாக கொண்டாடப்படுகிறது.


