108 திவ்யதேசங்களில் எட்டுக் கைகளுடனும், அவற்றில் 8 ஆயுதங்களுடனுமான
திருக்கோலத்தில் எம்பெருமானை அட்டபுயக்கரம் என்ற தலத்தில் தரிசிக்கலாம்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து
சுமார் 2 கி.மீ. தூரத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது. மூலவர்: ஆதிகேசவப் பெருமாள்/ கஜேந்திரவரதன். மேற்கு நோக்கி நின்ற
திருக்கோலம். தாயார்: அலர்மேல் மங்கை/ பத்மாஸனி தாயாராக அருள் பாலிக்கின்றனர்.
கஜேந்திர மோட்சம் இங்கே நடந்ததாக கூறுகின்றனர்.
திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்ற தலம். வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக் கட்டினான் என்று அறிய முடிகிறது.
‘மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண்முடி மாலை வயிரமேகன் தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி அட்ட புயகரத்து ஆதி தன்னை’ என்ற திருமங்கையாழ்வாரின் பாடலாலும் இதை உணரலாம்.