ஆடி மாதம் இன்று பிறந்தது. சூரிய வட்டத்தில் சூரியனுக்கு தென்புறமாக பூமி பயணிக்கும் ஆறு மாத தட்சிணாயன காலம் இன்று தொடங்குகிறது. சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் மட்டுமே திறந்திருக்கும். இவ்வாறு இரு வாசல்களைக் கொண்ட கும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் வைதீக விமானத்தின் அருகே உத்தராயன வாசல் மகர சங்கராந்தியின் போதும், தட்சிணாயன வாசல் ஆடிப் பதினெட்டின் போதும் திறக்கப்படுகின்றன. இங்கு முதலில் பெருமாள் வெளியே எழுந்தருளியதும், மகாலக்ஷ்மியை திருக்கல்யாணம் புரிந்ததும் தட்சிணாயன வாசல் வழியாகத்தான் என்கிறது ஸ்தல புராணம். இதுபோல் திருச்சி அருகே திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலிலும் இரு வாசல்கள் உள்ளன இங்கு தட்சிணாயன வாசல் இன்று திறக்கப்பட்டது.
