இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டி ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரம் திருநாள்..

FB IMG 1659346302287 - Dhinasari Tamil

ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் ஸ்பெஷல்

இன்றோ திருவாடிப்பூரம்
எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்
குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; ஆடி மாதம், திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள்.பொரியாழ்வார், ‘கோதை‘ என பெயரிட்டு வளர்த்தார்.
‘கோதை’-எனில் நல்ல வாக்கு தருபவள் என்று பொருள்
ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார்.
சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார்.

சின்னஞ்சிறு பெண் ஆண்டாள். அச்சிறுமிக்கு வடபத்ரசாயி மேல் அளவு கடந்த பக்தி.
அதுவே கள்ளம் கபடமற்ற மோகமாக மாறியது. முதலில் கண்ணனுக்கு உரித்தான பூமாலை தொடுத்தாள்.
தொடுத்த மாலையின் நீள அகலத்தையும், அழகையும் வசீகரத்தையும் கண்ணால் கணிக்க எண்ணினாள்.
நேரான பார்வையில் காண்பதைவிட நிலைக் கண்ணாடியில் கண்டால் கணிப்பு சிறப்பாக இருக்கும் என்று எண்ணினாள்.
இவ்வாறு அளக்கப்பட்ட மாலையே ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு தினந்தோறும் சாற்றப்பட்டது.
இதனை ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை பெரியாழ்வார் ஒரு நாள் கண்டுபிடித்துவிட்டார். இது மகளின் அறிவீனம் என்று எண்ணினாலும் போற்றி வளர்த்த பொன் மகளான ஆண்டாளைக் கடிந்துகொள்ளாமல், ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை வடபத்ரசாயிக்குச் சாற்றாமல் விட்டுவிட்டார். இதனை அறியாத ஆண்டாள் இரவில் அயர்ந்து தூங்க, பெரியாழ்வாரோ தூக்கம் பிடிக்காமல் புரண்டு, புரண்டு படுத்திருந்தார்.
அவர் விடியற்காலையில் கண் அசர கனவில் வந்த வடபத்ரசாயி தனக்கு இன்று மலர் மாலை சாற்றாத காரணம் கேட்டார்.
ஆண்டாள் அறியாமல் செய்த தவறை மன வேதனையுடன் எடுத்துக் கூறினார் பெரியாழ்வார்.

ஆண்டாள் சூடிக் களைந்த அம்மலர் மாலையையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார் வடபத்ரசாயி.
இதனைக் கேட்டு பெரியாழ்வார் நெக்குருகினார்.
இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.பெரியாழ்வாரும், கோதைக்குகந்த மணாளன் நம்பேருமானே‘ என எண்ணினார். ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார்.
அதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார்.

ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்’ என்ற பெரியாழ்வாரின் பாடலுக்கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.
ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கி ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள்.

பெரியாழ்வார், இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயாய் இருந்து, தாரை வார்த்துக் கொடுத்த மாமனும் ஆவார்.
பெருமாள் அருகில் கருடாழ்வார்
பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.
ஆண்டாள் தேர்ந்தெடுத்ததோ ஸ்ரீரங்கத்து அரங்கனை. அதற்கான காலம் கனியக் காத்திருந்தாள்.
அதற்காகவே நோன்பிருந்தாள்.

அதுவே பாவை நோன்பு எனப்படுகிறது
என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள். மேலும் ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.
இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.
இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.


மார்கழி மாதத்தில் உள்ள முப்பது நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்படும் முப்பது பாடல்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை.
இவற்றை இயற்றியவள் ஆண்டாள். இந்தப் பாசுரங்களில் கண்ணனைத் துதிப்பதுடன் பாவை நோன்பின் விதிகளையும் ஆண்டாள் குறிப்பிட்டிருக்கிறாள். விடியற்காலையில் குளிக்க வேண்டும், நெய் உண்ணக் கூடாது, பால் உண்ணக் கூடாது, பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் அவசியம் உணவிடுதல் வேண்டும், கோரிய பலனைப் பெற அகமகிழ்ந்து விரதம் இருத்தல் வேண்டும்.

ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்ததால், அந்நாட்களுக்கே மனோரதத்தில் சென்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரங்களில் அந்நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறாள்.

மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலேயே, கண்ணனே நாராயணன் என்று அறுதியிட்டுக் கூறிவிடுகிறாள்.
அவனே விரத பலனை அளிப்பவன் என்றும் குறிப்பிட்டுவிடுகிறாள்.

கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபனே ஆயர்பாடித் தலைவன். அவனோ சாதுவானவன். ஆனால் இப்பாசுரத்திலோ கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் என்கிறாள். கண்ணன் மீது கொண்ட பாசத்தால், குழந்தையின் அருகில் ஈ, எறும்பு வந்தால்கூட, அதனைக் கொல்ல ஈட்டியைத் தூக்குவானாம் நந்தகோபன். அதனால் கூர்வேல் கொடுந்தொழிலன். ஏராந்த கண்ணி யசோதை என்கிறாள் ஆண்டாள்.

குழந்தைக் கண்ணன் தொடர்ந்து செய்யும் லீலா விநோதங்களைக் கண்டு ஆச்சரியத்தால் கண்களை விரியத் திறக்கிறாளாம் யசோதா.
அப்படி ஏறிட்டபடியே நிலை கொண்டுவிட்டதாம் அவளது கண்கள். அதனால் ஏராந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கண்ணன். அவன் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம், போல் முகத்தான் என்கிறாள் அடுத்த வரிகளில். தனது பக்தர்களின் எதிரிகளிடம் கதிர் அதாவது சூரியன் போல் சுடு முகத்தைக் காட்டுபவன். தனது பக்தர்களிடம் மதியம் அதாவது நிலவு போல குளிர் முகத்தைக் காட்டுபவன். அவனே கண்ணன். அவன்தான் நாராயணன். விரத பலனைத் (பறை) தரப் பாத்திரமானவன்.
தனது பக்திப் பயணத்தின் லட்சியக் குறிக்கோளை நோன்பு தொடங்கும் ஆரம்பப் பாசுரத்திலேயே அறிவித்துவிட்டாள் ஆண்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,914FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version