
முன்னோர்கள் வழிபாடுகளுக்கு மிக சிறந்த காலம் மகாளயபட்சம் ஆகும் என வேத காலத்தில் இருந்தே கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம் ஆகும்.இன்று துவங்குகிறது. இன்று செப்டம்பர் 11ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை மகாளய பட்சம் இருக்கும்.
இதில் செப்டம்பர் 25ம் தேதி மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழியாக வேதத்தில் சொல்லப்படுகிறது. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது என்கிறது வேதமும் இதிகாச புராணமும்.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். மேலும், மகாளய பட்ச காலத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கன்னியாகுமரி, கோடியக்கரை, காவிரி ஆறு போன்ற புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம், வாழையடி வாழையாக தழைத்தோங்குவதோடு, பித்ருக்களின் ஆசியால் மன நிம்மதியும், வாழ்க்கையில் வளமும் வந்து சேரும்.
அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், சில குறிப்பிட்ட திதிகளில் மட்டுமாவது செய்ய வேண்டும்.
மகாளய பட்சம் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பல உள்ளது.
தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து, அவர்களை நினைவு கூற வேண்டும்.
தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் பூஜைக்கான விளக்கை ஏற்றி வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.
பித்ரு ஸ்துதி பாராயணம் செய்வது நன்மை தரும்
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவர் தொடர்ந்து பித்ரு ஸ்துதி உரையை ஜபிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், ஒரு நபர் பித்ரு தோஷத்திலிருந்து விடுதலை பெறுவார் என வேதம் கூறுகிறது. மேலும் பித்ரு தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.