ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் எனப்படுகிறது என ஜோதிட ரீதியான கணிப்பு கூறுகிறது.
இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும் .
அங்கு சுவாமி நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படும். மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்துதான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படும். சுவாமி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை சந்தனு மண்டபம் வந்தடைவார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி, மாலையில் மூலஸ்தானம் சென்றடைவார். இந்த துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் திருமஞ்சனம் தங்க பாத்திரத்தில் நடைபெறும். இம்மாதம் முழுவதும் காவிரியில் துலா ஸ்நானம் செய்ய பக்தர்கள் திரள்வார்கள்.
