இன்று ஐப்பசி 15,நவம்பர் 1 -11-2022 சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி .
கோபாஷ்டமி அல்லது கோஷ்டாஷ்டமி என்று அழைக்கப்படும் திருநாள் பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் இன்று (1-11-2022) வந்துள்ளது.
மத்ஸ்ய புராணம் குறிப்பிடும் இந்த கோஷ்டாஷ்டமி நாள் பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள். பண்டைய இந்தியாவில் கால்நடைகளே செல்வங்களாக இருந்து வந்துள்ளன. அதிலும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என உணவுப் பொருட்களை வழங்கி நமக்கு வாழ்வருளும் மாடுகளை போற்றிப் பாதுகாப்பது நமக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது.
கோபாஷ்டமி தினத்தில் பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். புல், கீரைகள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை உணவாக அளித்து நீர் கொடுத்து பசுக்களின் பசியை தணிக்க வேண்டும்.
பசுவில் சகல தெய்வங்களும் உறைகின்றன என்பது புராணங்கள் கூறும் செய்தி. எனவே பசுவை வணங்கி அதன் அருளைப் பெற்றால் சகல தேவர்களின் அருளையும் பெறலாம் என்பது இந்த கோபாஷ்டமி நாளின் தத்துவம்.
கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே இந்த கோஷ்டாஷ்டமி கொண்டாடப்பட்டுள்ள தாக புராணங்கள் கூறுகின்றன. பசுக்களை வைத்து இருப்போர் கொண்டாடக் கூடிய பண்டிகை இது. இல்லாதவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று அங்கிருக்கும் கோசாலைகளில் உள்ள பசுக்களை வணங்கி ஆசி பெறலாம். சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி நாள் இன்று
