தென்காசி நெல்லை குமரி திருச்சி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்லாயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் கடல் அருவி ஆறுகளில் புனித நீராடி “சாமியே சரணம் ஐயப்பா” என்ற கோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.கார்த்திகை முதல் நாள் இன்று தொடங்கியது. இன்று முதல் 60 நாட்கள் வரை ஐயப்பன் விரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்துவார்கள் விரதமிருந்து பகவானை வணங்கி ஐயனை தரிசனம் செய்ய செல்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அவர்கள் ஒரு மண்டலம் 41நாள் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்புபூஜைகள் நடத்துவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தமிழகத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் சங்கிலி துறையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சங்கிலி துறையில் உள்ள 16 கால் மண்டபத்தில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்தனர். இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், நாகர்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும், தக்கலை, குழித்துறை, திருவட்டார், குலசேகரம் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சுவாமி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வடகிழக்கு பருவமழை காரணமாக மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் கார்த்திகை முதல் நாள் என்பதாலும், சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டதாலும், காலை முதலே அருவிகளில் பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் அருவியில் நீராடி விட்டு குற்றால நாதர் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர். அதிகாலை முதலே குற்றால நாதர் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து அருவிக்கரை பகுதிகளில் புதிய கடைகள் அமைக்கும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தென்காசி பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதல் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து வருகின்றனர் திருச்சி எம் ஜி ஆர் சிலை அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலேயே குவிந்திருந்தனர். ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், மாணிக்கவிநாயகர் கோயில் என பல்வேறு கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம், கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் சித்தாபுரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர். திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி விட்டு விரதத்தொடங்கினார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் பாளை பொதிகைநகரில் உள்ள ஐயப்பன்கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துரை முருகன் கோவில், டவுன் ஈசானவிநாயகர் கோவில், தொண்டர் நயினார் சுவாமி கோவில், நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், தச்சநல்லூர் சிவன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதைமுன்னிட்டு கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகமே ஐயப்ப பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் ஒலித்தது.