கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்று பேறு பெற்றான்.
கார்த்திகை சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார் நாம் தொட்டதெல்லாம் துலங்கும்.
பொதுவாகவே பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். இன்றைய தினம் சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவார பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.
சோமவார பிரதோஷ தினமான இன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
சந்திரனை தலையில் சூடி சோமசுந்தரனாக காட்சி அளிப்பவர் சிவபெருமான். கார்த்திகை சோமவார விரதம் இருந்து சங்காபிஷேகம் தரிசனம் செய்தால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கார்த்திகை சோமவாரம் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்குத் தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும்.
இன்று கார்த்திகை முதல் சோமவாரம் தேய்பிறை பிரதோஷ நாளாகவும் வருகிறது. எனவே இன்றைய தினம் மறக்காமல் சிவ ஆலயம் சென்று நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் காண்பது சிறப்பாகும்.