சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். பெரும்பாலானோர், தலையில் இருமுடி ஏந்திச் செல்வது வழக்கம். அந்த இருமுடி பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய் மற்றும் வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள், இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும்.
ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், ஐய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், நடப்பு சபரிமலை சீசனில் ஜனவரி 20-ம் தேதிவரை விமானத்தில் தேங்காய்களை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக பயணிகள் அமரும் பகுதியில் குறிப்பிட்ட எடை அளவு கொண்ட கைப்பையை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அப்படி தேங்காய்களை கொண்ட கைப்பையை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எக்ஸ்ரே பரிசோதனை, வெடிகுண்டு கண்டறியும் டிடெக்டர் பரிசோதனை, வழக்கமான பரிசோதனை ஆகியவற்றுக்கு பிறகுதான் தேங்காய்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.