
இன்று கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம். 108 வைணவத் திருத்தலங்களில் முதலாவது திவ்யதேசம் ஸ்ரீரங்கம், 2-வது திவ்யதேசம் உறையூர். இவை இரண்டுமே திருச்சி மாநகருக்குள் உள்ளன. உறையூரில் கமலவல்லி நாச்சியார் சமேத கஸ்தூரி ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார்.
இங்கு கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் திருப்பாணாழ்வார் அவதரித்தார். நம்பாடுவான் போலவே பாணர் குலத்தில் பிறந்த இவரும், ஸ்ரீரங்கத்துக்குள் செல்லாமல் நகருக்கு வெளியே நின்றபடி பெருமாள் குறித்து யாழ் இசைத்தபடி பாடுவார். எம்பெருமானின் திருவுள்ளம் கனிந்து, இவர் முதன்முறையாக ஸ்ரீரங்கநாத பெருமானை தரிசித்தபோது, பெருமாளின் திருமேனி அழகை திருவடி முதல் திருமுகமண்டலம் வரை வர்ணித்து ‘அமலனாதிபிரான்’ என்ற 10 பாடல்களைப் பாடினார்.
திருவரங்கனுக்கே சேவை செய்து, அவருடனேயே ஐக்கியமானார். ‘திருவரங்கனின் திருவடியில் இருக்கும் திருப்பாணாழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்’ என்று தனது சீடர்களுக்கு சுவாமி ஆளவந்தார் அறிவுறுத்தினார். அந்தளவுக்கு திருப்பாணாழ்வாரின் வைபவம் சிறப்பு வாய்ந்தது.