
நிம்மதி, நீண்ட ஆயுள் தரும் நாராயணீயம் கிரந்தத்தை எழுதி உதயமானது இன்று நாராயணீய தினம் உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமத் நாராயணனைப் போற்றி நாராயணனால் எழுதப்பெற்று நாராயணணே பெயர் சூட்டிய கிரந்தம் நாராயணீயம். மேல்பத்தூர் நாராயணபட்டதிரி என்னும் சமஸ்கிருத பண்டிதன் இந்த கிரந்தத்தை எழுதினார். ஸ்ரீமத் பாகவத சாரம்சமான இந்த காப்பியத்தில் ஸ்ரீமந் நாராயணணின் அவதார லீலைகள் வர்ணித்து பக்தியோகம், ஏனயோகம் கூறி பரமதத்துவம் வர்ணணை செய்கிறார். நூறு நாட்கள் குருவாயூரில் பஜனம் இருந்து 1036 ஸ்லோகங்கள் முடிந்தவுடன் இந்த காவியத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென்று பட்டதிரி கேட்க குருவாயுரப்பனே இந்த காவியத்துக்கு “நாராயணீயம்’ என்ற பெயர் சூட்டியதாக ஐதீகம்.
நாராயண பட்டதிரி 1560ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பொன்னானி தாலுக்கில் பாரதபுழை நதிக்கு வடக்கில் பிரசித்தி பெற்ற திருநாவாயா கோயிலுக்கு அருகில் நம்பூதிரி குலத்தில் மேல்பத்தூர் இல்லம் என்று பெயருடைய வீட்டில் பிறந்தார். முறைப்படி உபநயனம் நடந்தவுடன் தன் தகப்பனார் மாத்ருதத்தரிடமிருந்து நான்கு வேதங்களும், மாதாவாச்சாரியரிடம் சாஸ்திரங்களும், தமது தமயனார் தாமோதரனிடம் தற்க சாஸ்திரமும் கற்றார். அச்சுத பிஷாரடியை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் சமஸ்கிருத இலக்கணம் கற்றார்.
நாராயண பட்டதிரியின் குருபக்தி மிகவும் பிரசித்தி பெற்றது. அச்சுத பிஷாரடி வாத நோயால் கை, கால்கள் முடங்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி வேதனைப்பட்டார். தன்னுடைய குருவின் இந்த நிலை நாராயண பட்டதிரிக்கு பொறுக்கவில்லை. “கர்மவிபக தானம்’ பெற்று தன்னுடைய குருவின் ரோகத்தை தானே ஏற்றுக் கொண்டார். குருவான அச்சுத பிஷாரடியின் ரோகம் மாறியது. சிஷ்யனான நாராயண பட்டதிரியை அந்த ரோகம் வந்தடைந்தது. நாராயண பட்டதிரி வாத நோயால் மிகவும் அவதிப்பட்டார்.
நாராயண பட்டதிரிக்கு ரோக முக்தி கிடைக்க öன்ன வேண்டும் என்று குருவும், ஜோசியர்களும், வைத்தியர்களும் ஆலோசித்ததில் குருவாயூர் சென்று பஜனம் இருந்தால் நோய் மாறும் என்று தீர்மானம் ஆயிற்று. குருவாயுரப்பனை பஜனம் செய்வது என்று பட்டதிரியும் தீர்மானித்தார்.
பகவத் லீலைகள் வர்ணிக்க வேண்டும். எங்கே தொடங்கி எப்படி வர்ணிப்பது என ஆலோசனை கேட்டு பக்தரும், பண்டிதரும், கவிஞரும் ஆன துங்சத்து ராமானுஜன் எழுத்தச்சனுக்கு பட்டதிரி செய்தி அனுப்பினார். “மச்சம் தொட்டு உண்’ என செய்தி வந்தது. மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்க சொல்கிறார் என்று பட்டதிரிக்கு புரிந்தது. பகவானை தனக்குள் அனுபவித்து காவியம் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு தசகம் (பத்து பாசுரங்கள்) பாட அதை குருவாயூரப்பனே தலையசைத்து மோதித்ததாக கூறப்படுகிறது.
88 நாட்கள் பஜனம் செய்து இருந்து 88 தகசம் முடிந்து விட்டன. ஆனால் பட்டதிரியின் ஆரோக்கிய நிலையில் ஒரு மாற்றமும் இல்லை. நாளை திரும்பி போய்விடலாம் என்று நினைத்து உறங்கிய பட்டதிரியின் சொப்பனத்தில் பகவான் ஒரு குழந்தை வேடத்தில் வந்து நாளை தொடங்கும் திருவிழா முடிந்து போகலாமே என்று சொல்ல பட்டத்திரி மறுநாளும் கோயிலுக்கு வந்து பஜனம் தொடங்கினார்.
பஜனம் தொடங்கி 99 நாட்கள் ஆயிற்று. 99 தசகங்களும் முடிந்து விட்டன. 100வது நாள் பகவானின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஏங்கி கண்ணீர் மல்க பட்டதிரி நமஸ்காரம் பண்ணி எழுந்தவுடன் பகவான் அவருக்கு நேரில் தரிசனம் தருகிறார். “அக்ரே பசயாமி’ என்று தொடங்கி பகவானின் ஒவ்வொரு அங்கங்களாக பட்டதிரி வர்ணிக்கிறார். நூறாவது தசகமான கேசாதிபாத வர்ணனை முடியவும் பட்டதிரி நோயிலிருந்து பூர்ணமாக குணமடைந்தார்.
நாராயண பட்டதிரி ஏறக்குறைய பெரிதும், சிறிதுமாக நாற்பது நூல்கள் இயற்றினார் என்றாலும் “ஸ்ரீமந் நாராயணீயமே’ முதன்மையானதாக கொண்டாடப்படுகிறது. “ஸ்ரீமத் பாகவத’ ஸாராம்சம்தான் நாராயணீயம். பக்தியாலே எப்படி முக்தி கூடும் என்பதை 94வது தசகத்திலிருந்து 97வது தசகம் வரை பட்டதிரி வலியுறுத்துகிறார்.
நாராயண பட்டதிரி நாராயணீயம் நிறைவு செய்து குருவாயூரப்பன் அவருக்கு தரிசனம் கொடுத்த நாளான கார்த்திகை 28 ஒவ்வொரு ஆண்டும் நாராயணீய தினமாக குருவாயூரிலும், நாராயண பக்தர்கள் இருக்கும் மற்ற நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது. நாராயணீயம் ஒவ்வொரு ஸ்லோகமும் பகவானை ஸ்மரிக்கும்படி அமைந்திருப்பதால் நாராயணீயம் படித்தாலோ படிப்பதை கேட்டாலோ பகவத் ஸ்மரணையால் கிடைக்கக்கூடிய புண்ணிய பலன் நமக்கு சுலபமாக கிடைக்கிறது.
தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்வது பிரச்னைகள் நிறைந்த இந்த கலியுகத்தில் நமது இன்னல்களை முறியடிச்சு மன அழுத்தம் குறைத்து, நமக்கு நிம்மதியும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
கலியுகத்தில் நமது இன்னல்களை முறியடித்து மன அழுத்தத்தை குறைத்து நமக்கு நிம்மதியும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் தரும் திவ்விய ஒளஷதம் நாராயணீயம். இன்று உலகெங்கும் நாராயண பக்தர்கள் நாராயணீய தினமாக இன்று கொண்டாடி வருகிறார்கள்.
நாராயணீயம் எழுதிய பட்டத்ரியின்
பக்திக்கு மெச்சி பகவானே அவருடைய
ஸ்லோகங்களுக்கு தலையாட்டி ஆமோதித்த கதை எல்லோருக்கும் தெரியும்.அவர் எழுதும்,போது பகவான் எத்தனை
வடிவங்களில் வந்து அவரோடு விளையாடினான் என்பதை”இந்தப் படம்” சுட்டிக்
காட்டுகிறது.
எத்தனை சுட்டித்தனம் ஒருவனைத் தவிர மற்ற எல்லா,கண்ணனும் விஷமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின்,மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.எத்தனை
“பாக்யசாலி பட்டத்ரி அவரைச் சுற்றி எத்தனை
“கண்ணன்கள்”ஒருவன் ஊஞ்சலாடு
கிறான்.ஒருவன் தூணிலேறி பறவையைப் பிடிக்கத் தாவுகிறான்.ஒருவன் விளக்கின் தீபத்தை தொட முயற்சிக்கிறான்.ஒருவன் மேடை மீது ஏறுகிறான்.ஒருவன் தாழங்குடையை பிடித்து விளையாடு
கிறான்.ஒருவன் மட்டும் மிக சமத்தாக பட்டத்ரி அருகில் சென்று அவர், எழுதுவதை உன்னிப்பாக கவனிக்கிறான் ஒவ்வொரு நிலையிலும் அவன் அழகைக் காண
ஆயிரம் கண் போதாது.