உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடத்தி கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற பிப்ரவரி 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.
மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
மருதமலையில் தைப்பூச திருவிழா..
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வேதபாராயண முறைப்படி துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனால் இன்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பாலசுப்பிரமணியம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர்.அதனைத்தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில், சேவல் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. திருத்தேருக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் பிப்ரவரி 4ம் தேதி, காலை, 7:00 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், பகல், 12:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தலும் தொடர்ந்து தோரோட்டம் நடக்கிறது.
கழுகுமலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா..
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதிஉலா நடக்கிறது. 5-ந்தேதி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை மோகன்பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று பின்னர் நிலையை வந்தடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழா..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவாக பிப் 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தி. கோவில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் இன்னிசை கச்சேரிகள் சமய சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது . 9-ம்திருவிழாவான பிப் 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும். 10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது.