
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று சனிக்கிழமை அதிகாலை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.43 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம், தவத்திரு. திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
