
கொங்கு சீமையில்
தொழில் நகரமாக விளங்கும் கோவையில் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தும்,பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.
கோவை மாநகரின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.
கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், வெகுவிமரிசையாக நடப்பது சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் 20ம் தேதி கிராம சாந்தி விழா நடந்தது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெற்றது.

கடந்த 22-ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். பின்னர் நேற்று மாலை கோவில் வளாகத்தில் கோனியம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்ட திருத்தேரானது ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைந்தது.