
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏப்5ஆம் தேதி இரவு ஸ்ரீஆண்டாள் ரெங்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திவ்யதேசமாகும். துளசிசெடிக்கு கீழ் அவதரித்த ஆண்டாள் இங்கு கோவில் கொண்டுள்ள வடபெருங்கோவிலுடையான் மீது தீராத பக்தி கொண்டு அவருக்கு சூட இருந்த மலர்மாலையை தான் சூடி அழகுபார்த்து மார்கழி நோன்பிருந்தார். ஆண்டாள் திருப்பாவை பாடல்கள்பாடி ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனை பங்குனிமாதம் உத்திரம் நாளில் முத்துப்பந்தலின் கீழ் கைத்தலம் பற்றினார்.
இந்த விழா ஆண்டாள் திருக்கல்யாணம் என ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னதி முன்பு நடைபெறும்.

இந்த ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நடக்கும் நாள்களில் காலை இரவு வேளைகளில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆண்டாள் திருக்கல் யாணம் வரும் ஏப் 5ஆம் தேதி நடை பெறுகிறது. காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரெங்கமன்னாரும், திருத்தேரில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்கள்.
தொடர்ந்து காலை 10மணிக்கு ஆண்டாள் கோட்டைத்தலைவாசல் சென்று மரியாதை பெறும் நிகழ்ச்சியும், மாலை 3மணிக்கு ரெங்கமன்னார் வீதிஉலாவும் இரவு 7மணிக்கு ஆண்டாள் சன்னதி முன்புள்ள பிரமாண்டமான பந்தலில் ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்படுகிறது.
திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் எம்.கே.முத்துராஜா, மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர்.