- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (37): இல்லறமும் துறவறமும்!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (37): இல்லறமும் துறவறமும்!

சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டின் பலன்களும் வேறு வேறானவை என்று நினைப்பவர்களை கீதாசாரியன் இவ்வாறு விமர்சிக்கிறான்,

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் -37

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன் 

கார்ஹஸ்த்ய சன்யாச பரீக்ஷா ந்யாய:

கார்ஹஸ்த்யம் – இல்லறம், சன்யாசம் – துறவறம், பரீட்சா – ஒப்பீடு.

இல்லறம் என்பது திருமணம் செய்து கொண்டு தம்பதிகள் இருவரும் இல்லற தர்மத்தைக் கடைப்பிடிப்பது. துறவறம் என்பது திருமணத்திலிருந்து விலகி, நிலையான இருப்பிடம் இன்றி சஞ்சரித்தபடி சமுதாயத்திற்கு ஞானத்தை போதித்து, தனிப்பட்ட ஆசைகள் இன்றி செயல் புரிவது. இந்த இரு புனிதமான ஆசிரமங்களில் எது உயர்ந்தது எது குறைவானது என்று விவாதிப்பது வீண் என்பது இந்த நியாயம் அளிக்கும் செய்தி. இவை பரஸ்பரம் ஒன்றுக்கொன்று கௌரவம் அளித்துப் பெறுபவை.

சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டின் பலன்களும் வேறு வேறானவை என்று நினைப்பவர்களை கீதாசாரியன் இவ்வாறு விமர்சிக்கிறான்,

சாங்க்ய யோகௌ ப்ருதக்பால: ப்ரவதந்தி ந பண்டிதா: |
ஏகமப்யாஸ்தித சம்யக் உபயோர்விந்ததே பலம் ||

(பகவத்கீதை 5/4)

பொருள் – சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டும் வேறு வேறு பலன்களை அளிக்கும் என்று எண்ணுபவர் முழுமையான அறிவு இல்லாதவர். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நியமத்தோடு கடைப்பிடிப்பவர் இந்த இரண்டின் பலனான பரமாத்மாவை அடைவார்.

கர்ம, சன்யாச யோகத்தில் கிருஷ்ண பரமாத்மா கூறிய விஷயங்களே இந்த நியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.

சன்யாச ஆசிரமத்தில் இருப்பவர் இல்லற ஆசிரமத்தை உயர்வாகப் பேசுவார். இல்லறத்தில் இருப்பவர் துறவறத்தில் இருப்பவரை கௌரவிப்பார். அவர் பாதங்களில் விழுந்து வணங்குவார். ஏன்?

மனு ஸ்மிருதியில் இந்த ஆசிரமங்களின் விளக்கத்தைப் பார்க்கலாம் –

ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தஸ்ச வானப்ரஸ்தோ யதிஸ்ததா |
ஏதே க்ருஹஸ்த ப்ரபவாஸ்சத்வார: ப்ருதகாஸ்ரமா: ||

(மனுஸ்ம்ருதி- 6/87)

பொருள் – பிரம்மச்சாரி, இல்லறம், வானபிரஸ்தம், துறவறம் இந்த நான்கும் வேறு வேறு ஆசிரமங்கள். இவர்கள் அனைவருக்கும் ஆதாரம் இல்லறத்தான். துறவறத்தில் இருப்பவருக்கும் பிரம்மச்சாரியாக வாழ்பவருக்கும் உணவளிக்கும் பொறுப்பு இல்லறத்தாருக்கு உள்ளது. 

மனு மகரிஷி இல்லறத்தின் உயர்வை இவ்வாறு குறிப்பிடுகிறார் –

யதாவாயும் சமாஸ்ரித்ய வர்தந்தே சர்வஜந்தவ:|
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே சர்வ ஆஸ்ரமா:||

(மனுஸ்ம்ருதி- 3/77)

பொருள் – அனைத்து உயிர்களும் காற்றை ஆதாரமாகக் கொண்டு வாழ்வது போல் அனைத்து ஆசிரமங்களும் இல்லறத்தானை அண்டி வாழ்கின்றன.

இல்லறத்தானே தினமும் மூன்று ஆசிரமத்தில் இருப்பவரையும் போஷிக்கிறான் அதனால் இல்லறத்தான் உத்தமமான ஆசிரமத்தில் இருக்கிறான். இல்லறத்தான் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான தர்மங்களில் அதிதிக்கு உபசாரசம் செய்வதும் ஒன்று. ஒரு இடத்தில் தங்காமல் அலைபவரை அதிதி என்பர்.

ALSO READ:  பிராமணர்களின் உரிமைக் குரல்!

“அதிதி கச்சதி இதி அதிதி: ந வித்வதீ திதி: யஸ்ய ஸ: அதிதி:” – யாருக்கு இரண்டாவது  திதி இல்லையோ அவரே அதிதி எனபப்டுவார் என்பது அதிதி என்ற சொல்லின் விளக்கம்.

துறவி என்பவர் யார்? ஒரு இடத்தில் நிலையாகத் தங்காமல் கிராமம் கிராமமாக அலைபவர் பரிவ்ராஜகர். துறவறம் பூணுவதற்கான முதல் தகுதி இக லோக மற்றும்  பரலோக சுகங்களின் மீது கொள்ளும் திடமான வைராக்கியம். துறவிக்கு வீடு என்று ஒன்று இருக்காது ஆனால் நிலையான புத்தி இருக்கும். பொருட்களை சேர்த்து வைப்பதின் மீது ஆசை இல்லாமல், பரபிரம்மத்தின் மீது மனதை நிலை நிறுத்துவார். வெறும் பிச்சை எடுத்து வாழ்பவர் சந்நியாசி. தனியாக வாழ்ந்து பிச்சைக்காக மட்டுமே கிராமத்தில் நுழைவார்.

இவ்விதமாக புலனடக்கம், சுயநலமற்ற பணி என்பவை இல்லறம், துறவறம் என்ற இந்த இரண்டு ஆசிரமங்களுக்கும் மூல சூத்திரங்கள். இதில் எந்த ஆசிரமம் உயர்ந்தது? முக்திக்கு எது வழி வகுக்கும்? என்ற கேள்வி இந்த நியாயத்தின் முக்கியமான வாதம்.

சம்சாரத்தில் இருந்தபடியே தாமரை இலை மீது தண்ணீர் போல இருந்துகொண்டு இல்லற தர்மத்தை கடைப்பிடிப்பதில் ஆதரிசமாக இருந்து முக்தியைப் பெற்றவர்கள் பாரதிய வரலாற்றிலும் இலக்கியத்திலும் அநேகம் பேர் உள்ளனர். அதே போல் துறவறத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான வழிகாட்டுதல் புரிந்து உய்வடைந்தவர் பலர்.

ராஜ தர்மத்தைக் கடைப்பிடித்த ஞானியாகவும் ராஜ ரிஷியாகவும் பெயர் பெற்ற ஜனக மகாராஜா புராணங்களில் பிரசித்தமானவர். தன் அரசாட்சியில் குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு புறம் யோசித்தபடி, ஞானிகளுக்குக் கூட ஞான போதனை செய்யும் சாமர்த்தியம் கொண்ட இல்லறத்தார் ஜனகர்.

சிறு வயதிலேயே சன்யாசம் ஏற்ற ஜகத்குரு ஆதி சங்கரர் தாய்க்கு கௌரவமளித்து, தாய்க்கு அளித்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவளுக்கு இறுதிக் கிரியை செய்தார். “நிரக்னி” (அக்னியை விட்டவன்) என்பது சந்நியாச தர்மம் ஆனாலும் கூட தாய்க்காக அதனை மீறினார். அதனால் சிலர் அவரை எதிர்த்தனர். பகிஷ்காரம் செய்தனர். காரியத்தைக் கடமையாக நிறைவேற்றிய உதாரணங்கள் எத்தனையோ உள்ளன.

நவீன பாரதத்தில் தன் உபன்யாசங்கள், எழுத்துக்கள் மூலம் உலகையே அசைத்த சுவாமி விவேகானந்தர் துறவறத்தில் இருந்து கொண்டு எத்தனையோ இல்லறத்தாருக்கு வழிகாட்டியாக விளங்கி அவர்களை கடமை வீரர்களாகச் செய்தார். அவர்களில் ராக்பெல்லர், மைசூர் மகாராஜா, க்ஷேத்ரீய மகாராஜ் போன்றோர் தத்தம் ஆசிரம தர்மங்களைக் கடைப்பிடித்தபடியே அனைவரின் போற்றுதல்களையும் பெற்றனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (RSS) பிரசாரக் என்ற (வெள்ளை ஆடை அணிந்த சந்நியாசி என்று சுவாமி சின்மயானந்தா புகழ்வார்) அமைப்பு உள்ளது. அவர்கள் திருமணம் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் சந்நியாசிகளைப் போலவே “காம்யானாம் கர்மணான்யாஸம்” என்பதற்கேற்ப சமுதாய நலனுக்காக பணி புரிவார்கள். பிரசாரக் எதனால் உயர்ந்தவர்? இல்லறத்தானாக இருக்கும் கார்யகர்த்தா எந்த விதத்தில் தாழ்ந்தவர்? என்று கேட்பது வீண் வாதம் என்பது இந்த நியாயம் எடுத்துரைக்கும் நியாயம்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

RSS ஐச் சேர்ந்த பிரசாரக் ஸ்ரீ மோரோபந்த் பிங்களேஜி இல்லறத்தில் இருந்துகொண்டு சமுதாய சேவை செய்தார். அவரை சமுதாயம் உயர்வாக மதிக்கிறது. அவர் சன்னியாசிகளை விட இல்லறத்தாரே உயர்ந்தவர் என்று கூறுவதற்கு ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுவார். அவர் ஒரு முறை ரயிலில் பயணித்த போது உடன் பயணம் செய்த ஒருவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேட்டார். உத்தியோகம் என்று எதுவுமில்லை. சமுதாயப் பணி செய்கிறேன் என்று பதில் கூறினார். அப்படியா என்று கேட்டு சும்மா இருந்த அந்தப் பயணி அருகில் இருந்த இன்னொரு சங்க சாலக் ஸ்ரீ பிடே என்பவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். பிடே இல்லற வாழ்க்கை வாழ்பவர். அவர்,   நான் ஒரு வக்கீல். வாராவாரம் சனி ஞாயிறுகளில் தவறாமல் பயணித்து பல சேவைப் பணிகளைச் செய்வேன் என்றார். அதற்கு அந்தப் பயணி மகிழ்ச்சியடைந்து அவரை கர்மயோகி என்று மெச்சினாராம்.

இல்லற தர்மம், சந்நியாச தர்மம் பரீக்ஷா நியாயம் என்ற இந்த நியாயத்தைப் பற்றி  புகழ்பெற்ற கதை ஒன்றை ஆச்சார்ய ரவ்வா ஸ்ரீஹரி அவர்கள் மேற்கோள் காட்டுவது வழக்கம்.. ஒரு ராஜ்ஜியத்தில் விஸ்வத்வஜன் என்ற ஜிஞ்ஞாசி (ஞானத்தில் விருப்பமுள்ளவன்) மகாராஜாவாக இருந்தான். இல்லற தர்மம், துறவற தர்மம் இரண்டையும் பற்றி பல நூல்களைப் படித்தாலும் அவனுடைய சந்தேகங்கள் தீரவில்லை. அவனுடைய ராஜசபைக்கு வந்த அறிஞர்களிடமும் துறவிகளிடமும்  இல்லற தர்மம் பெரியதா? சந்நியாசம் பெரியதா? முக்திக்கு எது வழிகாட்டும் என்று கேட்டு வந்தான்.

ஒரு நாள்  விஸ்வத்வஜனின் அரச சபைக்கு சிறந்த அறிவாளியான துறவி ஒருவர் வந்தார். அவரிடம்  நீண்ட காலமாகத் தன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான் மன்னன்.

அதற்குத் துறவி, அரசே, எந்த ஆசிரமமாக இருந்தாலும் கடைப்பிடிப்பவருக்கேற்ப கைவல்யம் கிடைக்கும். தத்தம் ஆசிரம தர்மங்களைக் கடைப்பிடிக்காதவருக்கு எதுவும் கிடைக்காது என்றார்.

ராஜா சந்தேகத்துடன் பார்த்ததைக் கண்ட  துறவி, தான் கூறியதை நிரூபிக்க விரும்பி, மன்னனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வேறு ஒரு ராஜ்யத்திற்குச் சென்றார். அங்கிருந்த அழகிய இளவரசியின் சுயம்வரத்திற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து மன்மதனைப் போன்ற இளவரசர்கள் வந்தனர். ஆனால் இளவரசி அவர்கள் யாரையும் விரும்பாமல் இளம் சந்நியாசி ஒருவரை விரும்பி அவரது கழுத்தில் மாலையை அணிவித்தாள். ஆனால், அந்த இளம் துறவி அந்தப் பூவை தரையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். இளவரசி ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள்.

என் மகளைத் மணம் புரிந்து கொண்டால் உனக்கு பாதி ராஜ்ஜியம் தருகிறேன் என்றான் மன்னன். அந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்திய அந்த இளம் துறவி அங்கிருந்து சென்று விட்டார். மன்னரும் இளவரசியும் மறறோரும் அவரைப் பின்தொடர்வதை அறிந்த துறவி அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்து மறைந்தார்.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

இக்காட்சியைக் கண்ட விஸ்வத்வஜ மஹாராஜா வியப்படைந்தான். அழகும் செல்வமும் மிகுந்த இளவரசியை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய இளம் துறவியின் வைராக்கியத்தை எண்ணி மனம் மகிழ்ந்தான். மீண்டும் விஸ்வத்வஜன் குரு சன்யாசியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். இரவு நேரம் நெருங்கியதும் இருவரும் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தனர்.

மன்னன் குளிரால் நடுங்குவதை அந்த மரத்தில் மனைவி குழந்தைகளுடன் வசித்த ஒரு ஆண் பறவை கண்டது. இவர்கள் நம் விருந்தாளிகள். இவர்களுக்குத் தேவையான வசதி செய்து தருவது இல்லறத்தாரான நம் கடமை  என்றெண்ணி ஒரு தீக்குச்சியை எடுத்து வந்து மரத்தின் கீழே போட்டது. அந்த நெருப்புக் குச்சியின் உதவியால் தீ மூட்டி இருவரும் குளிரைப் போக்கிக் கொண்டனர். வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று மரத்தின் மேலிருந்த பறவைகள் தீர்மானித்தன. என் மாமிசத்தை உண்டு சாப்பிட்டு அதிதிகள் திருப்தி அடையட்டும் என்று ஆண் பறவை நெருப்பில் விழுந்தது. இரண்டு பேருக்கும் என் கணவனின் இறைச்சியால் திருப்தி ஏற்படாது. நானும் விருந்தாக நெருப்பில் விழுவேன் என்று பெண் பறவையும் தீயில் குதித்தது. பின்னர் பறவைக் குஞ்சுகளும் தம் பெற்றோரின் வழியைப் பின்பற்றி அதிதிக்கு விருந்தோம்பல் செய்வதற்காக உயிரைத் தியாகம் செய்தன. 

துறவி, விஸ்வத்வஜனுடன் இந்த இரண்டு சம்பவங்களையும் குறித்து விரிவாக அலசினார். ஒரு இளம் துறவி அழகிய இளம் பெண்ணோடு கூட அரசாட்சியையும் துரும்பென உதறித் தள்ளினார். துறவறத்தின் மீது சற்றேனும் சலனம் இருந்தால் கூட அவர் அவ்விதம் செய்திருக்க மாட்டார் என்று கூறி சந்நியாசி புலனடக்கத்தைப் புகழ்ந்து பேசினார்.

இரண்டாவது கதையில் இல்லறத்தானின் கடமையை நிறைவேற்றுவதற்காக பறவையின்   குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் உயிரைத் தியாகம் செய்தது வியப்பளித்தது. .

இல்லறத்தாராக இருந்தாலும் சரி துறவியாக இருந்தாலும் சரி ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் முக்திக்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் கதைகளை விஸ்வத்வஜன் கேட்டான். அவனுடைய ஐயங்கள் தீர்ந்தன. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தான்.

இந்த நீதிக் கதைகள் பகவத்கீதையின் கர்ம சந்நியாச யோகத்தில் உரையாசிரியர்களால் விரிவாகக் கூறப்படுகின்றன.

யோகசித்திகள் எவ்வாறு கிடைக்கும் என்று குறிப்பிடும் மேற்கோள்களில் கௌசிகருக்கு அகத் தூண்டலை அளித்த ஒரு இல்லத்தரசி மற்றும் தர்ம வியாதரின் கதை நாமறிந்ததே.

மனைவியின் தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானம் பெற்றாள் இல்லத்தரசி. பித்ரு தர்மத்தைக் கடைப்பிடித்து பெற்றோருக்குச் சேவை செய்து ஞானம் பெற்றார் தர்மவியாதர். அந்த இருவரையும் பார்த்து துறவறத்தில் இருந்த கௌசிகர் திகைத்தார் அல்லவா.

முடிவாக, இந்த நியாயம் கூறும் கருத்து ஒன்றுதான்.

ஸ்வேஸ்வே கர்மண்யாபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:| பொருள் – தத்தம் கடமைகளை சரியாகச் செய்பவன் இறைவனின் அருளைப் பெறுகிறான்.  எது பெரியது என்ற விவாதம் பொருளற்றது, பயனற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version