spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வாழ்க்கையை வளமாக்கும் ஆன்மீக ரகசியங்கள்!

வாழ்க்கையை வளமாக்கும் ஆன்மீக ரகசியங்கள்!

- Advertisement -

ஹிந்துத்துவம் என்பது ஒரு மதமல்ல; வாழ்க்கை முறை. வாழ்க்கையை வாழும் கலையைச் சொல்லித் தரும் ஆன்மிக வாழ்க்கை முறை. மற்ற சில மதங்களைப் போல் அல்லாமல், ஹிந்து மதம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மதத்தையும் பிற்காலத்தில்தான் மதம் என்ற வரையறைக்குள் கொண்டுவந்தார்கள். ஆனால், பழங்காலத்திலிருந்தே இதற்கு தர்மம் என்றுதான் பெயர். ஹிந்து தர்மம் என்பதே சரியானது. பழங்காலத்திலிருந்து வந்த தர்மம் என்பதால், இதற்கு சனாதன தர்மம் என்று பெயர்.

சனாதானம் என்றால் என்ன? பழமையானது என்று ஒரு பொருள். மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளபடி, சனாதன என்பதற்கு, ‘தீயால் எரிக்கப்படாத, ஆயுதத்தால் வெட்டுப்படாத, தண்ணீரால் அழிக்க முடியாத, காற்றால் கரைக்க முடியாத ஒன்று, உயிருள்ளதும் உயிரற்றதுமான பொருள்களில் ஊடுறுவிப் பரந்து இருப்பது’ என்பதாகும்

தர்மம் என்பதற்கு, வாழ்க்கை வழிமுறை என்பது அர்த்தம். அந்த வாழ்க்கை வழிமுறையானது, எல்லாவித ஆசார அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கியதாகும்.

சனாதன தர்மம் & மேம்போக்காக வளர்ந்த மார்க்கமல்ல. அது அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஆன்மிக மார்க்கம். நாம் பழமையான சனாதன தர்ம இலக்கியங்களைப் பார்த்தோமானால், அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று கைகோத்து வந்திருப்பதை உணரலாம். இதை நாம் சரியாக உணர்ந்துகொள்ள வேண்டுமானால், யஜூர் வேதத்தின் 40 வது மண்டலமான ஈசாவாஸ்ய உபநிஷத்தை நாட வேண்டும்.

ஈசாவாஸ்ய உபநிஷதம் அறிவியல் கலந்த ஆன்மிகத்தைப் பேசுகிறது. நமக்கு அறிவியல் அறிவு வேண்டும். எதற்காக? நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் கடினமான சூழ்நிலைகளையும் களைவதற்காக. நமக்கு ஆன்மிக அறிவு வேண்டும். எதற்காக? ஆன்ம சாதனையின் மூலம் அழியாத நிலையை அடைவதற்காக.
ஆசாரம் என்றாலோ அனுஷ்டானம் என்றாலோ இளைய தலைமுறை உள்ளிட்ட சிலர் எள்ளி நகையாடுவதை இன்று நாம் காண்கிறோம். ஆனால், ஆசாரம் என்றாலே, அதன் ஒவ்வொரு செயலிலும் அதனுடன் ஆன்மிகமும் கூடவே கலந்துள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆன்மிகம் கலக்காத எந்தச் செயலும் சனாதன தர்மத்தில் இருக்காது. ஆன்மிகச் செயல்களின் அடிப்படையிலேயே சனாதன தர்மமும் ஜீவிக்கிறது என்பதை உணரலாம்.

பொதுவாக, ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் ஆன்மிகச் செயல்களின் அடிப்படை அம்சங்களைப் பார்த்து, அவையே மதம் என்பதாக எண்ணுகின்றனர். ஆன்ம சாதனையை போதிக்கும் ஆன்மிகச் செயல்கள் என்பதே, சனாதன தர்மமாகிய ஹிந்து தர்மத்தில் வேறானதாக எண்ணப்படுகிறது. ஆக, ஆன்மிகம் வேறு; மதம் வேறு என்பதை ஹிந்து தர்மத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

காரணம் மதம் என்பது, ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டதாகவோ, அல்லது அதன் தோற்றத்துக்கான ஏதோ ஒன்று இருப்பதாகவோ திகழவேண்டும். ஆனால், ஹிந்து தர்மத்தைப் பொறுத்தவரை, அது, தோற்றம் என்பதையே அறியாதது. ஹிந்து தர்மத்தை எந்தவொரு தனி நபரும் தோற்றுவிக்கவில்லை, எந்தவொரு இறை தூதரும் ஹிந்து தர்மத்துக்கு காரணன் என்று உரிமை கொண்டாட முடியாது. ஆனால், ஹிந்து தர்மத்தின் அடிப்படை அம்சமான ஆசாரம் என்பது மட்டும், ஒவ்வொரு ஹிந்துவின் நித்திய வாழ்க்கை முறையில் ஏதோவொரு செயலில் கலந்தே இருக்கும். ஆன்மிகம் கலந்த வாழ்க்கைதான் ஒரு ஹிந்துவின் சாதாரண வாழ்க்கை.

ஆசார அனுஷ்டானம் என்ற ஒரு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் தன்மையானது, ஒவ்வொருவரின் தகவினைப் பொறுத்து அமையும். தங்கள் சுய அனுபவங்களின் அடிப்படையில் ஆசாரத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான தன்மையாக சிலவற்றை எடுத்துக்கொள்ள முடியாது. ஆசான் அல்லது குருமார் யாரேனும் சொல்லும் முறைகளை ஒருவர் குருட்டாம்போக்கில் ஏற்று பின்பற்ற முடியாது. முதலில் அந்த ஒழுங்குமுறைக்கான விளக்கங்களைப் பெற்று, தெளிவாக்கிக்கொண்டு, அதன்பிறகே கடைப்பிடித்தல் ஹிந்து தர்மத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஏன் என்ற கேள்வியைக் கேட்டு அறியும் அறிவை வளர்க்கத் தூண்டுவது சனாதன தர்மம்.

ஆசார அனுஷ்டானங்கள் அனைத்துமே, சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிகளை உள்ளடக்கியவையே!

ஆசார்யாத் பாதம் ஆததே பாதம் சிஷ்ய ஸ்வமேதயா
பாதம் ச ப்ரஹ்மசாரிப்யா சேஷம் கால க்ரமேன ச

இந்த அறிவுரை, ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான அறிவுரையாகும்.
அதாவது, ஒரு மனிதன், தன்னுடைய ஆசார்யரிடமிருந்து (ஆசிரியரிடமிருந்து) கால் பகுதி அறிவையே பெறுகிறான். தன்னையே சுயவிமர்சனம் செய்து, தன் சுய அனுபவத்தால் இன்னொரு கால் பகுதி அறிவைப் பெறுகிறான். தான் பெற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, விவாதம் செய்து மற்றொரு கால் பகுதி அறிவைப் பெறுகிறான். பின்னர் தன் வாழ்நாளில் கற்றவைகளில் இருந்தும் மற்ற ஆசார்யர்களின் வாழ்விலிருந்தும் தேவையானவற்றை சேர்த்தும் நீக்கியும் பிழை சரிசெய்து திருத்தியும் மாற்றங்களை ஏற்படுத்தி, கடைசி கால் பங்கு அறிவைப் பெற்று முழு அறிவு பெற்ற மனிதனாகிறான்.

ஆசாராத் லபதே ஹி அயு: ஆசாராத் தனமக்ஷயம்
ஆசாராத் லபதே சுப்ரஜா: ஆசாரோ அஹன்த்ய லக்ஷணம்

ஆசாரங்கள், உடல் ரீதியான மற்றும் மன ரீதியான  ஆரோக்கியத்துக்கும், நீண்ட கால ஆரோக்கிய வாழ்வுக்கும் உகந்தவையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆசாரங்கள், அறிவுக்கும் நன்நம்பிக்கைக்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆசாரங்கள், பலமான குடும்ப அமைப்புக்கும் சமூக ஒட்டுறவுக்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், தனிநபர் குணநலன் மிளிர்வதோடு, சிறந்த நோக்கமும் தார்மீக வெளிப்பாடும் கைவரப் பெறும். இவை தர்ம சாஸ்திரம் சொல்லும் ரகசியங்கள்.

உடல் ஆரோக்கியம் பெற, உள்ளம் மேம்பட, குடும்ப உறவு வலுப்பட, சமூகம் பயன்பெற, தேசிய ஒற்றுமை ஓங்க இந்த வகை ஆசார அனுஷ்டானங்களை மேற்கொள்வது நம் இந்தியத் திருநாட்டில் முக்கியத் தேவை. ஒவ்வொரு வகை செயலும் ஏன் செய்யப்படுகின்றன, அவற்றுக்கான தேவை என்ன போன்றவற்றை அறிவியல் ரீதியாக அறிந்துகொண்டு, நம் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த இவற்றைக் கடைப்பிடித்தல் அவசியம்…

  • கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe