கேள்வி:- நடராஜரின் பாதத்தின் கீழ் ஒரு அசுரன் காணப்படுகிறான். அவன் பெயர் என்ன? இதன் உட்பொருள் என்ன? தட்சிணா மூர்த்திக்கும் நடராஜ மூர்த்திக்கும் என்ன தொடர்பு?
பதில்:- நடராஜரின் வலது பாதத்தின் கீழ் உள்ள ராட்சசன் அபஸ்மாரன். இவனுக்கு வேறு சில பெயர்களும் புராணங்களில் காணப்படுகின்றன. கதையின்படி, சிவன் ஆதி பிக்ஷுவாக தாருகாவனத்தில் பிரவேசித்த போது, அவரைப் பற்றி அறியாத சில மந்திரவாதிகள் அவரை வசப்படுத்தி பலியிடுவதற்கு அபிசார ஹோமம் செய்ய முற்பட்டார்கள்.
அந்த சமயத்தில் அக்னி ஹோமத்திலிருந்து அவர்கள் ஸ்ருஷ்டித்த மரணசக்திகள் அக்னியாக, டமருவாக, புலியாக, அபஸ்மார அசுரனாக ஆவிர்பவித்து சிவன் மீது ஏவப்பட்டன. சிவன் அக்னியையும் டமருவையும் கரங்களில் தரித்து, அவற்றை அடக்கினார். வியாக்ராசுரனான புலியை வதைத்து அந்த புலியின் தோலை வஸ்திரமாக அணிந்தார். அபஸ்மார அசுரனைத் தன் பாதத்தின் கீழே மிதித்து நிருத்தியம் செய்தார்.
இந்த கதையில் அகங்கார சக்திகளை பரமேஸ்வரன் அடக்கிய அழகே குறியீடுகளாகக் காணப்படுகின்றன. அபஸ்மாரன் புத்தியைத் தாக்கும் ‘அபஸ்ம்ருதி’ எனப்படும் அசுர சக்தி. இதன் மூலம் புத்தியின் சக்தி குலைகிறது. இந்த அசுர சக்தியை மிதித்து புத்தியை ஞான சைதன்யமாகச் செய்யும் ஞான சொரூபமே சிவன். டமரு, சப்த சக்திக்கும், அக்னி, காந்தி சக்திக்கும் குறியீடுகள்.
தட்சிணாமூர்த்தி ஞான மயமான சிவ மூர்த்தி. தட்சிணாமூர்த்தியின் மற்றொரு சொரூபமே நடராஜர். நடராஜரை சிதம்பர தட்சிணாமூர்த்தி என்று மந்திர சாஸ்திரம் போற்றுகிறது.
***
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)