October 20, 2021, 6:29 pm
More

  ARTICLE - SECTIONS

  இது தான் கஜேந்திர மோட்சக் கதை…!

  gajendramokcha - 1

  இந்த கதைக்கு “அறிமுகம்” தேவை இருக்காது என நினைக்கிறேன்.

  குழந்தைகள் கூட முதலையிடம் சிக்கிய யானையின் கதையான இந்த கஜேந்திர மோக்ஷம் பற்றி அறிந்து இருக்கக்கூடும். இது மிகவும் சிறிய மற்றும் எளிய கதைதான்.

  இனி கதையைப் பார்ப்போம்.

  கஜேந்திரன் என்ற மிகவும் வலிமை பொருந்திய யானை ஒன்று, ஒரு காட்டில் தன் யானை கூட்டங்களுடன் வசித்து வந்தது.

  யானை கூட்டத்துக்கே தலைவன் ஆன அந்த யானை மிகவும் சந்தோசமாக, தன் புஜ பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தது.

  ஒரு நாள், தன் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளுடன் களியாட்டம் போட்டு கொண்டே ரம்மியமான ஒரு குளத்தின் அருகே வந்தது.

  அந்தி சாயும் நேரம். மலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த குளத்தை சுற்றியும் இருந்த பூத்து குழுங்கிய சோலைகள் கஜேந்திரனின் மனதை பறித்தன.

  அருகில் இருந்த அழகான பெண் யானைகளுடன் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்த படி விளையாடி மகிழ்ந்தது.

  அப்போது, அந்த குளத்தில் பூத்து இருந்த அழகான தாமரை பூ கஜேந்திரனின் கண்ணில் பட்டது. அதை பறித்து கொண்டு வந்து விட்டால், மற்ற பெண் யானைகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்தது. உடனே குளத்தில் காலை வைத்து, இறங்க ஆரம்பித்தது.

  காத்து கொண்டு இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலை பிடித்து விட்டது.

  முதலில் இந்த சின்ன முதலை, என்னை என்ன செய்து விடும் என்று மிகவும் அலட்சியமாக நினைத்தான் கஜேந்திரன். பின்பு மெல்லமாக, முதலையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்தான்.

  நிலைமையின் மோசத்தை அறிந்த கஜேந்திரன், மிகவும் முயற்சியுடன் போராட ஆரம்பித்தான். கூடவே இருந்த யானைகளால் எந்த உதவியும் கஜேந்திரனுக்கு செய்ய இயலவில்லை.

  போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டம், தேவர்களின் நாட்கணக்கில் 100 வருடங்களுக்கும் மேலாக நீடித்தது.

  தேவர்களின் 1 நாள் என்பது, நம்முடைய நாட்கணக்கில் 1 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இறுதியில் நம்மால் எதையுமே செய்ய இயலாது என கஜேந்திரன் உணர்ந்தான்.

  அவன், இறைவனை நோக்கி

  “உன் உருவம் எப்படி பட்டது என எனக்கு தெரியாது, உண்மையில் இந்த லோகங்கள் அனைத்திற்கும் உரியவன் ஆன இறைவனே நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆராதிக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்றுக இறைவா!”

  என இறைவனிடம் சரண் அடைந்தது.

  இதனை கண்ட காக்கும் கடவுளான விஷ்ணு பெருமாள், உடனடியாக தன் கருட வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.

  கருடனின் வேகம் போதாத படியால், தானே கருடனையும் தூக்கி கொண்டு அந்த குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். தன் சக்ராயுதத்தை வீசி, முதலையின் பிடியில் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார்.

  இவ்வாறாக இந்த கஜேந்திர மோக்ஷம் கதை நிறைவு பெறுகிறது.

  இந்த கதையை கேட்டவுடன் ஒரு சில சந்தேகங்கள் அனைவருக்கும் வரும்.

  அவைகள்…
  கஜேந்திரனுக்கும், முதலைக்கும் இடையில் 100 தேவ வருடங்கள் போராட்டம் நடந்ததாக ஸ்ரீ மத் பாகவதம் குறிப்பிடுகிறது.

  உண்மையில் ஒரு யானையோ அல்லது முதலையோ அத்தனை காலம் வாழ முடியுமா?

  கஜேந்திரன், முதலையிடம் சிக்கியவுடனேயே, பெருமாள் வந்து காத்து இருக்கலாம்.

  ஆனால், இத்தனை காலங்கள் பொறுமையாக இருந்து விட்டு பின்பு அவசர அவசரமாக வந்து காத்தது, ஏன்?

  இந்த இரண்டு சந்தேகங்கள் அனைவருக்கும் எழக்கூடும்.

  அதற்கு அருமையான விளக்கத்தை அறியலாம்.

  இந்த கதையிலும், ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மற்றொரு பொருளுக்கும் உவமை ஆகவே அமைக்கப்பட்டுள்ளன.

  கஜேந்திரன் – பிறவி

  மற்ற யானைகள் – நாம் அல்லாத பிறர் (மற்ற ஜீவன்களின் பிறவிகள்)

  முதலை – காலம்

  கருடன் – வேதம்

  அதாவது, ஒவ்வொரு பிறவி காணும் போதும் கஜேந்திரன் போல, நாம் நம் புஜ பலத்தை நம்பிக்கொண்டு, நாமே எல்லா செயல்களுக்கும் காரணம் என்ற மனப்பாங்குடன், “அகங்காரம்” கொண்டு செயல் படுகிறோம்.

  காலம் என்னும் முதலை, நம்மை பிடித்து “மரணம்” என்னும் நிகழ்ச்சியை (காலை பிடித்தல்) நிகழ்த்தி விடுகிறது.

  எனினும், பல பிறவிகளில் நாம் காலத்தை வெல்லும், இறுமாப்புடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம்.

  இதுவே “100 தேவ வருடங்களுக்கும் மேலாக” என்ற கருத்தின் மையம் ஆகும்.

  அதாவது பல லட்சம் பிறவிகள் எடுத்தும் நாம் காலத்துடன் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

  எத்தனை யானைகளுக்கு (மக்களுக்கு) தலைவன் என்ற போதும், அவர்கள் நம் மரணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடுகிறது.

  என்று நாம், “நம்மால் இனி எதையும் சாதிப்பது முடியாது” என்று இறைவனிடம் சரண் அடைகிறோமோ அன்று தான், இறைவன் நமக்கு தென் படுகிறான்.

  அதாவது, நம் அகங்காரம் என்னும் திரை நம்மை விட்டு விலகும் போது மட்டுமே இறைவன் நமக்கு தென்படுகிறான்.

  இறைவன் தென் படுவது என்பது நம் ஆத்மாவின் சுய தரிசனம் என்றும் பொருள் கொள்ளலாம்.

  மேலும் வேதங்களின் (நல்ல நெறி முறைகள்) சாட்சி கொண்டே இறைவன் நம்மை முதலை என்னும் காலத்தின் பிடியில் இருந்து ரட்சிக்கிறான்.

  இவ்வாறு கஜேந்திர மோக்ஷம் கதையும் உள்ளூடாக பல உள் கருத்துகளை கொண்டு உள்ளது.

  கதைகள் சிலவற்றை கேட்கும் போதே, அவைகளின் உள்கருத்துகள் நமக்கு விளங்கி விடும். ஆனால், சில கதைகளை கேட்கும் போது வேடிக்கையாகவும், நம்ப முடியாமலும் இருக்கலாம்.

  ஆனால் அவ்வாறான புராண கதைகள் கூட, உள்ளூர ஏதோ மற்றொன்றை உருவகமாக சொல்ல நினைத்து அமைக்க பட்டு இருக்கலாம்.

  உதாரணத்திற்க்கு, மகா பாரத கதையில் பஞ்ச பாண்டவர்கள் 5 பேர் தான். ஆனால் கௌரவர்கள் 100 பேர். கடைசியில் பாண்டவர்களே வென்றார்கள். உண்மையில் இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.

  நல்ல பண்புகள், உண்மையில் கெட்ட பண்புகளை விட எண்ணிக்கையில் குறைவு தான். ஆனாலும் இறைவன் நல்ல பண்புகளுக்கு மட்டுமே துணை செய்து கடைசியில் அவைகளுக்கு வெற்றியை கொடுப்பான்.

  இவ்வாறு, கதைகளை அதன் உள்நோக்கம் என்ன என்று அலச முயன்றால் பல அறிய தத்துவங்கள் நமக்கு கிடைக்கலாம்.

  இனி வெறுமனே, புராண கதைகளைப் படிக்காமல் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை அறிய முயலுங்கள்.

  ஓம் தத் சத்!! ஓம் தத் சத்!! ஓம் தத் சத்!!

  – பகிர்வு: – க.சுதர்ஷன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-