கலியன் ஆட்சி செய்ததால் நமது புண்ணிய பூமியில் ஏற்பட்ட மற்றும் நடக்க இருக்கும் மற்றங்கள் முன்பே அகிலத்திரட்டில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே உள்ள பாடலை படியுங்கள்.
அகிலம் படல் வரிகள் 8(215-220)
215. பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
216. சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
217. சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
218. பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
219. நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
220. தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள்
விளக்கம்: 8(215-220)
பூமியில் ஒருதிசையில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவர். இறைவனைப் போற்றும் வேதக் கருத்துக்கள் மறைந்து நாத்திக வேதங்கள் உருவாகும். சாதிகளின் கட்டுப்பாடு நிலை மாறிவரும். ஆண்களுக்கு வயதில் மூத்த அல்லது பருவநிலை முடிந்த மனைவியை திருமணம் செய்து வைப்பார்கள். உலகில் மனைவிக்குக் கணவனைவிட அதிக அதிகாரம் உண்டாகும். நீசக்குலத்தினர் அதிகமாகிப் பூமியில் கழிவுப் பொருளுக்குக்கூட தண்டவரி கேட்பார்கள்.
அகிலம் படல் வரிகள் 8(221-229)
221. வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
222. நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
223. சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
224. இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
225. தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
226. நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
227. பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்
228. நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
229. சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
விளக்கம்: 8(221-229)
வானத்திலிருந்து இடிகள் ஒவ்வொரு வருடமும் பூமியைத் தாக்கும். அதிக நேரம் மலையும் பூமியும் இடி சத்தத்தை எதிரொலித்து முழங்கும். அந்திப்பொழுது மிகவும் காலம் கடந்துவரும். சீமை நாட்டிலும் தென் சோழ நாட்டிலும் அழகான பயிர்கள் எல்லாம் அழிந்துவரும். இலைகள் கருகும், குரான் பைபிள் ஆகிய இரு வேதங்களும் பொய் என நிரூபிக்கப்படும். தலையில் தொப்பி வைக்கும் மதம் அழிந்துவிடும். சில நட்சத்திரம் உதிரும், நடக்கின்ற வழி குறுகி வரும். பொய்த்தன்மை உள்ள பூசாரிகள் கோயிலில் பெருகுவர். நவ்வா துலுக்கர் நாடுகளுக்குள் யுத்தம் முதலியவற்றால் அழிவர் உயரினங்களை தின்று தீர்ந்து வறுமையில் வாடுவர். பொய் ஏசு ஏசுவை வணங்குபவர் அழிவர்.சிவாலயங்கள் தேய்வுற்றுச் சுவர்கள் இடியும்.
அகிலம் படல் வரிகள் 8(230-239)
230. கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
231. இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
232. மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
233. மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும்
234. காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும்
235. மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
236. தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார்
237. மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும்
238. கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை
239. காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும்
விளக்கம்.: 8(230-239)
கிணறுகள் பாழாகும். பூமியின் அடிப்பகுதி நீர் ஊற்றுப் பொய்த்துப் போகும். இவ்வுலகில் மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கம் இல்லாம் ஏங்குவர். மக்களுக்கு அதிக அலைச்சல் உண்டாகும். பகையை உண்டாக்கும் துரோகிகள் உலகில் அதிகமாக இருப்பார்கள். அதிக பொருள் வேண்டும் என்னும் ஆசையினால் பெரிய சண்டைகள் உண்டாகும். காம ஆசை வெறியால் அதிகமான பழி பாவங்கள் உண்டாகும். தாய் மகள் வைப்பாட்டியாக வைக்க நினைப்பான். தந்தையைப் புதல்வர்கள் வேலை வாங்குவர்.
ஆடு மாடுகளின் வயிற்றில் மனிதர் உருவில் கன்று தோன்றும், வஞ்சனை அதிக அளவில் பெருகிச் சிலர் பிறரைக் கொலை செய்வர். கோவில்களில் காணிக்கை வாங்குவதும், அரசு கைக்கூலி வாங்குவதும் அதிகம் ஆகும்.
அகிலம் படல் வரிகள் 8(240-249)
240. மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும்
241. நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும்
242. மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்
243. பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல்
244. கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார்
245. கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார்
246. வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது
247. தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்
248. ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும்
249. வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார்
விளக்கம்: 8(240-249)
மாணிக்கம், தங்கம், வைரம், ஆகியவை பயன்படுத்துவது குறைந்து வரும். இப்பரந்த உலகில் பேய்கள் இருப்பதான எண்ணம் பெருகித் துன்பம் வரும். உலகில் விவசாயம் மழையின்றி அழிவு நிலை எய்தும்.
ஏழு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்குப் பிள்ளை பிறக்கும். பெண்கள் கொங்கைகூடும் உறவு இல்லாமலே (செயற்கை முறையில்) குழந்தைகள் பெற்று வாழ்வர். தம்மோடு பிறந்தவர்களைக் கொடுமை பொருந்திய பகைவர்களாக எண்ணுவார்கள். வானத்தில் மேகம் இடித்து முழங்கும். ஆனால் மழை பொழியாது. எதிர்பாராது கொடுக்கும் தானம் நடைபெறாது. சாத்திரத்தின் நீதி வழிகள் பொய்யாகும்.
கீழான புத்தி உள்ளோருடைய வாழ்வு உயர்ந்தோங்கி வரும். வீண் வாழ்க்கை வாழ்வார் பெருகி, வீடுபேறு அடையும் வழிகளைத் தவறு என்று கெடுத்து பேசுவர்.
அகிலம் படல் வரிகள் 8(250-259)
250. தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார்
251. பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும்
252. மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார்
253. கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும்
254. கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய்
255. நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார்
256. கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
257. வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
258. துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
259. ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும்
விளக்கம்: 8(250-259)
சிவஞானத்தை அடையக் கூறும் வேதங்கள் முழுவதையும் புறக்கணிப்பர். உண்மை வேதகருத்துக்களை விரும்பாது இகழ்ந்து பேசுவர். பொய்யான வேத கரு்த்துக்களைக் கூறும் நூல்கள் இவ்வுலகில் அதிக அளவு உண்டாகும். திருடர்கள் பெருகுவர். கறியுப்பின் விலை மலியும்.
கொள்ளை நோயால் அதிகமானோர் இறப்பர். சிலர் தன் தவற்றினால் நாணமுற்றோ, நஞ்சு தின்றோ இறப்பர். சிலர் கிணற்றில் விழுந்து இறப்பர். சிலர் தன்னைத்தானே கீறிக் கொண்டு சாவார். சிலர் வயிரத்தை நன்றாகப் பொடித்து உண்டு இறப்பர். சிலர் துன்பம் பொறுக்க முடியாமல் நீர் நிலையில் விழுந்து இறப்பர். ஈக்களும் எறும்புகளும் பெருகும்.
அகிலம் படல் வரிகள் 8(260-269)
260. காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
261. சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
262. ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
263. கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
264. சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
265. கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
266. நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
267. கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
268. சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
269. சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
விளக்கம்: 8(260-269)
பகைமை பெருகும். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்கள் மக்கள் புழக்கத்தில் பெருகி வரும். சன்னியாசிகள் தவநிலை தவறி அலைந்து திரிவர். ஒன்றாவது சாதி என்று கூறப்படும் பிராமணர்கள், உலையில் அகப்பட்ட மெழுகு போல் துன்புற்று அலைவர்.
கட்டுப்பாடற்றுப் பெண்களின் கற்பு நிலை தவறும். சட்டம் ஒழுங்கு அழியும். வாக்குறுதி சத்தியங்கள் நம்பிகை அற்று போகும். பலர் கூடும் சந்தி அம்பலம் கவனிப்பாரற்று இடியும். ஒற்றுமை சீர்குலையும், குடும்பம் பகை கொண்டு அலையும்.
நாட்டை ஆளும் அரசு நாட்டை இரண்டு மூன்று, நான்கு, என்று பல பிரிவாக்கி அரசாண்டு வரும். கோட்டைச் சுவர்கள் அழிந்து, பாதுகாப்புக்குக் குச்சிகளால் ஆன மதில் சுவர்கள் அமைப்பர். இவ்வுலகில் உள்ள சீவசெந்துகள் எல்லாம் உணவு இல்லாது துன்புற்று அழியும். சாவுகள் அதிகமாகும். சூறாவளியால் அழிவு உண்டாகும்.
அகிலம் படல் வரிகள் 8(270-275)
270. அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
271. முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
272. இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
273. செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
274. நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
275. நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
விளக்கம்: 8(270-275)
தீயினாலும் தண்ணீராலும் உலகில் பல நாடுகள் அழிவுறும், இவ்வுலகில் மக்களிடயே வாந்தி நோய் அதிகமாகக் காணப்படும்.
இவற்றைப் போன்று இன்னும் பலவிதமான அடையாளங்கள் உள்ளன. அவற்றை இப்போது சொல்லித் தீரா. எனவே பின்னால் உனக்கு இன்னும் விளக்கமாகக் கூறிடுவேன். நீ கேட்தற்காக இத்தனை அடையாளங்களையும் சேர்த்து உன்னிடம் மகிழ்சியுடன் உரைத்தேன்
ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் காணும் கலிகால நிகழ்வுகள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
LEAVE A REPLY
Popular Categories
221 to 229 இதில௠எஙà¯à®•à¯‡ பொய௠à®à®šà¯ வநà¯à®¤à®¾à®°à¯. நலà¯à®² விளகà¯à®•à®®à¯.