கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது நீர் நிலைகளை அசுத்தம் செய்வது போல் ஆகாதா? கணபதிக்கு ஒன்பது நாள் பூஜை செய்யும் நவராத்திரி முறை கிடையாது என்றும் பால கங்காதர திலகர்தான் இதனை ஆரம்பித்து வைத்தார் என்றும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?
பதில்:- பிள்ளையார் சதுர்த்தி அன்று களிமண் திருவுருவத்தை பூஜை செய்து விட்டு மீண்டும் நீரில் கரைத்து விடுகிறோம். இதிலிருந்தே நம் விக்ரக வழிபாட்டில் உள்ள சிறந்த தத்துவம் விளங்குகிறது. விக்ரகத்தில் மட்டுமே தெய்வம் உள்ளது என்று இந்துக்கள் நினைப்பதில்லை. வீட்டில் தினமும் வழிபடும் பித்தளை, வெள்ளி, தங்கச் சிலைகளை நீரில் கரைப்பதில்லை.
ஆனால் வினாயகர், தேவி முதலிய திருவுருவங்களை அந்தந்த பண்டிகைகளில் பிரத்யேகமாக களி மண்ணால் செய்து அவற்றை மந்திரத்தால் புனிதமாக்கி, ஆவாஹனம் முதலியவற்றைக் கடைபிடித்து வழிபடுகிறோம். விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள இறை தத்துவத்தை அவ்விதம் மையப்படுத்தி வணங்கிவிட்டு பின் நியமப்படி பூஜைகள் செய்து முடித்தபின், மீண்டும் ‘உத்வாஸனம்” எனப்படும் ‘தெய்வத்தை யதாஸ்தானத்திற்கு அனுப்பும்’ விசர்ஜனம் என்ற செயலைச் செய்கிறோம்.
அதாவது வழிபடப்பட்ட மகா சக்தியை நம் அந்தரங்கத்தில் இருத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அந்த கடவுளின் சக்தி நம்மை காத்தருளுகிறது.
அந்த விக்ரகத்தை எப்போதும் வீட்டிலேயே வைத்துக் கொண்டோம் என்றால் தினமும் அதனைத் தகுந்த விதத்தில் சாந்தப்படுத்துவது சாத்தியப்படாது. அவ்வாறு உத்வாஸனம் செய்த பின் அந்த விக்ரகம் வெறும் மண்ணே! அதனை மீண்டும் ஜல தத்துவத்தில் கரையச் செய்ய வேண்டும். பிருத்வீ தத்துவத்தை ஜல தத்துவத்தில் லயம் செய்விக்கும் ஒரு வித யோகமயமான செயல்தான் இது.
ஆனால் நீரில் கரையாத விதத்தில் சிலைகளைச் செய்யும்படி சாஸ்திரம் கூறவில்லை. நீரில் கரையக் கூடிய மண்ணால் சிலைகளைச் செய்து அதனை இலைகளால் அர்ச்சனை செய்வது சம்பிரதாயம்.
மகானுபாவர் பால கங்காதர திலக் சமுதாயமாகச் சேர்ந்து குழுவாக கணபதி பூஜையை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் ஒன்பது நாட்கள் செய்யும் கணபதி நவராத்திரி அவருடைய கற்பனை அல்ல. காணபத்யம் என்னும் சம்பிரதாயத்தில் ஒன்பது நாள் பூஜை உள்ளது. தேவீ நவராத்திரி, ஸ்ரீராம நவமி நவராத்திரி போலவே கணபதி நவராத்திரியில் கணபதி உபாசகர்களுக்கு தீட்சைகள் உண்டு. மகாராஷ்டிராவில் காணபத்யம் அதிகம் வழக்கத்தில் உள்ளதால் அங்கு அதிக அளவில் இந்த நவராத்திரியைக் காண முடிகிறது. கணபதி பக்தர்கள், உபாசகர்கள் எங்கிருந்தாலும் சாஸ்திர விதிப்படி நவராத்திரியைக் கொண்டாடலாம்.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)