- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தாம்ரபரணீ மகாபுஷ்கரம்: தென்னகத்தின் கும்பமேளா!

தாம்ரபரணீ மகாபுஷ்கரம்: தென்னகத்தின் கும்பமேளா!

தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் அக்டோபர் 11 ம்தேதி முதல் 22 ம்தேதி வரை கொண்டாடப் படுகிறது.

புஷ்கரம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12 X 12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா.

பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.

நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ராசி….     நதி

மேஷம் – கங்கை
ரிஷபம் – நர்மதை
மிதுனம் – சரஸ்வதி
கடகம் – யமுனை
சிம்மம் – கோதாவரி
கன்னி – கிருஷ்ணா
துலாம் – காவிரி
விருச்சிகம் – தாமிரபரணி
தனுசு – சிந்து
மகரம் – துங்கபத்ரா
கும்பம் – பிரம்மநதி
மீனம் – பிரணீதா

குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.

ALSO READ:  மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

நதிகள் எல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு மரபு வழி நம்பிக்கை. இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

ஈசனால் உருவாக்கப்பட்டது தாமிரபரணி :

சிவ பெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அங்கு பேசப்படும் பாஷை தனக்குத் தெரியாதே. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார்.

உடனே, தம் அருகே அவரை அமர வைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழியானது, அகத்தியர் காலத்துக்கும் முன்னரே இங்கே வழக்கில் பேச்சு மொழியாக இருந்தது என்பது தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).

ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர்.

அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.

ALSO READ:  முட்டாள்தனமான முதலாளித்துவம்!

தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.

143 படித்துறைகள்

அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டி ருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

விருச்சிக ராசியில் குருப்பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம்.

23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விவரம் வருமாறு:-

தேதி (கிழமை) ராசி

1. 12.10.2018 (வெள்ளி) விருச்சிகம்
2. 13.10.2018 (சனி) தனுசு
3. 14.10.2018 (ஞாயிறு) மகரம்
4. 15.10.2018 (திங்கள்) கும்பம்
5. 16.10.2018 (செவ்வாய்) மீனம்
6. 17.10.2018 (புதன்) மேஷம்
7. 18.10.2018 (வியாழன்) ரிஷபம்
8. 19.10.2018 (வெள்ளி) மிதுனம்
9. 20.10.2018 (சனி) கடகம்
10. 21.10.2018 (ஞாயிறு) சிம்மம்
11. 22.10.2018 (திங்கள்) கன்னி
12. 23.10.2018 (செவ்வாய்) துலாம்

ALSO READ:  முதல் முறையாக கரும்பு பயிரிட்டு அசத்திய விவசாயி; பொங்கலுக்கு விளைச்சல் அமோகம்!

ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.

தானம் கொடுத்தல்

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ பரம தர்மம் எனப்படும். நல்ல பசுவைத் தானம் செய்வதால் மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிரார்த்தம் (திதி) கொடுத்தல்

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version