Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தாம்ரபர்ணீ புஷ்கரம் – பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா..?

தாம்ரபர்ணீ புஷ்கரம் – பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா..?

ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்:

பிரம்மாவை எண்ணி தியானம் செய்தார் பிரஹஸ்பதி என்கிற வியாழகுரு.
அவர் எதிரில் போய் பிரம்மா நிற்க, பிரம்ம கமண்டலம் தனக்கு வேண்டும்என்று யாசித்தார் அந்தப் பெருங்கிரஹத்தார். தியானம், தவம் ஆகியவற்றை முறையாகச் செய்து முறையாக யாசித்தால், கேட்டதைக் கொடுப்பதில் என்ன தடை?
அதுவும் மண்ணால் ஆன கமண்டலம்தானே, கொடுத்துவிட்டால் போயிற்று!

வியாழ குருவோ, கோள்களில் மிக நல்லவர் என்று பெயர் வாங்கியவரும் கூட; ஆகவே அவருக்குத் தருவதில் தவறில்லை என்று கருதிய பிரம்மா, கமண்டலத்தைக் கொடுத்து விட்டார்.

தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து பிரம்மா நீட்ட, பெற்றுக் கொள்வதற்கு வியாழன் முயல… கமண்டலமோ கைவிட்டு அகல மறுத்தது. மண் கமண்டலம் ஏன் மறுக்கிறது?

கமண்டலத்திற்கு உள்ளே… ஒருவர் அமர்ந்திருக்கிறார். தன்னையேசுருக்கிக்கொண்டு, கமண்டலத்தின் வளைவு நெளிவுகளுக்குள் சுருண்டுபுரண்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தாம், தாமும் நகர மறுத்துகமண்டலத்தையும் கட்டிவிட்டார். யார் அவர்????

வருணதேவனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் “புஷ்கரன்” என்று பெயர். (“புஷ்கரன்’ – புஷ்= புஷ்டி, கரன்= செய்பவன்; அதாவது, புஷ்டியை, போஷாக்கைத் தருபவன் என்று பொருள். மழைக் கடவுளான வருணன் தானே, தன்னுடைய பலனாக, ஊட்டத்தை, சக்தியை, புஷ்டியைத்தரவேண்டும்! அதைக் காட்டத்தான், அவனுடைய மகனுக்கு இப்படியொருபெயர் போலும்!) இளமைப் பருவம் எய்தியதும், தவ வாழ்க்கைமேற்கொண்டான் புஷ்கரன். அவன் தவத்தை மெச்சி பிரம்மா எதிர்நின்றதும், “நதிகளையும் நீர்ப்பரப்புகளையும் எப்போதும் தூய்மை செய்பவனாகத் தான்இருக்கவேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிரந்தர அவா’ என்றும்வேண்டினான்.

பிறர் மீது தன் அழுக்கைச் சுமத்த நினைக்காமல், பிறர் அழுக்கைத் தான்ஏற்றுத் துடைக்கவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு உத்தமம்! புஷ்கரன்நதிகளில் பிரவேசிக்கும் போதெல்லாம், அந்தந்த நதிகள் கூடுதல் புனிதம்பெறும் என்ற வரத்தை நல்கிய பிரம்மா, சிருஷ்டியின் தூய்மைகாக்கப்படவேண்டும் என்பதற்காகப் புஷ்கரனைத் தம்முடையகமண்டலத்திலேயே தங்கியிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இப்போது வந்தது சிக்கல்! பிரம்ம கமண்டலத்தில் வீற்றிருந்த புஷ்கரன், வியாழனோடு போக மறுத்தார். காரணம்? கமண்டலத்தை வியாழன்விழைந்த சுயநலம். ஆமாம், வியாழகுரு நல்லவர் தாம்; கோள்களிலேயேசுபகிரஹம் என்று பெயர் வாங்கியவர்; குரு பார்வை கோடி நன்மை என்றுபோற்றப்படுபவர். ஆனாலும், அவருக்குச் சற்றே பேராசை. புஷ்கரனைஉள்ளடக்கிய பிரம்ம கமண்டலம் தன்னிடத்தில் இருந்தால், எல்லாநன்மைகளுக்கும் தாமே அதிபதியாகி, அசுபங்களைத் துடைக்கும்பெருமிதத்தையும் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை; இதைவைத்து தமக்கே முதல் நிலை கிடைத்து, எல்லோரும் தம்மையேபாராட்டவேண்டும் என்கிற பேராசை….

அழுக்குகளை நீக்கும் ஆற்றலைப் பெற்றவராயிற்றே புஷ்கரன், வியாழ குருவின் அகந்தை அழுக்கை அறியமாட்டாரா என்ன?? புஷ்கரனின் புனிதச்சிந்தனையை உணர்ந்த பிரம்மா, புஷ்கரனுக்கும் வியாழனுக்கும்மட்டுமல்லாமல், மானுடம் அனைத்துக்கும் பயன் தரும் அற்புத வழியைக்கண்டுபிடித்தார்….

அதன்படி,

வியாழகுரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் புகுகிறகாலகட்டத்தில் மட்டும், கமண்டலம் அவர் கையில் இருக்கும் என்று வரம்கொடுத்துவிட்டார்.

அதன்படி, ஒரு ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிற முதல் 12 நாட்களும், அந்த ராசியை விட்டு வெளியேறுகிற (அடுத்த ராசிக்குள்பிரவேசிப்பதற்கு முன்னதாக) கடைசி 12 நாட்களும், பிரம்மகமண்டலம்வியாழகுருவின் கையில் இருக்கும்.

ராசிக்குள் பிரவேசித்து சஞ்சரிக்கும் வியாழன், அந்தந்த ராசிக்கு உரித்தானபுனித நதியிலேயும் அந்தந்தக் காலகட்டத்தில் தங்குகிறார்.

புனித நீராடித் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம் இல்லையா? அதுபோல, குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட நதியில், பிரம்ம கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடியே புனித தீர்த்தமாடி, அந்தக்குறிப்பிட்ட ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிறார்.

அந்த சமயத்தில், கமண்டலத்தைவிட்டு வெளி வந்து, வியாழனுடையகையைப் பற்றிக் கொண்டுத் தாமும் நதியில் இறங்குகிறார் “புஷ்கரன்”. இதனால், அந்த நதியானது, பலமடங்கு புனிதம் அடைவதோடு, அந்தசமயத்தில் அதில் நீராடும் ஜீவர்களின் மாசுகளும் பாவங்களும்அகற்றப்படுகின்றன. இந்தக் கோலாகலத்தைக் காண்பதோடு,தாங்களும் புனிதம் சேர்த்துக் கொள்வதற்காக, தேவர்களும்ரிஷிகளும்கூட அந்த நதியில் நீராடி, அதன் கரைகளில் தங்குகிறார்கள்.

இவ்வாறு, குருவாலும் புஷ்கரனாலும் புனிதம் கூட்டப்பெறுகின்றநிகழ்வே, “ஆற்றுப் புஷ்கரம்’ (நதிப் புஷ்கரம்) ஆகின்றது.

தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் எப்பொழுது ?

தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் 2018 நிகழும் ஸ்ரீவிளம்பி ஆண்டு, புரட்டாசி 25ஆம்நாள், அதாவது அக்டோபர் மாதம் 11ஆம் தேதி (திருக்கணிதப்பஞ்சாங்கப்படி), வியாழகுரு (துலா ராசியில் இருந்து) விருச்சிக ராசிக்குள்பிரவேசிக்கிறார். விருச்சிக ராசிக்கான நதி தேவதை, “தாம்ரபர்ணீ” ஆவாள். (தாம்ரபர்ணீ விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் தோன்றியவள் அல்லவா ? )
அக்டோபர் 11 பூர்வாங்க பூஜைகள் “பாபநாசத்தில்” ஆரம்பித்து 12 முதல்23 வரை “தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்” அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று 24 அன்று தீர்த்தவாரி பூஜைகளோடு “முறப்ப நாடு” குரு ஸ்தலத்தில் நிறைவு பெற இருக்கின்றது… ஆகவே 2018 அக்டோபர் 11ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் “தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்” மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது…

குறிப்பிட்ட ராசியில் குரு சஞ்சரிக்கும் ஓராண்டுக் காலம் முழுவதுமே, குறிப்பிட்ட நதியிலும் தங்குகிறார். இந்த வகையில், 2019ம் ஆண்டு நவம்பர்4ஆம் தேதிவரை தாம்ரபர்ணீத் தாய் சிறப்படைகிறாள் என்றாலும், குருபிரவேசிக்கும் முதல் பத்து நாட்கள் “ஆதி புஷ்கரம்’ என்றும், குரு அகலும் பத்துநாட்கள் “அந்த்ய புஷ்கரம்’ என்றும் பெருமை கொள்கின்றன.

இந்த புஷ்கரம் மட்டும் ஏன் “மஹா புஷ்கரம்” என்று அழைக்கப்படுகிறது ?

வியாழகுருவானவர், குறிப்பிட்ட ஒரு ராசிக்குள் பிரவேசித்து சஞ்சாரம்செய்வது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.. இப்போது விருச்சிகராசிக்குள்ளும் தாம்ரபர்ணீக்குள்ளும் சஞ்சரிக்கப் புகுகிற வியாழன், இன்னும்12 ஆண்டுகளுக்குப் பின்னரே, மீண்டும் இங்கு வருவார்…

இது மட்டுமின்றி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, (12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை = 12 x 12 வருடங்கள் = 144 வருடங்கள் ) இவ்வகையில், வியாழ குரு மீண்டும் விருச்சிகத்திற்கு வருவதும், 12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை வரும் மஹா புஷ்கரம் மீண்டும் “தாம்ரபர்ணி” நதிக்கரையில் நடப்பதற்கும் 144 ஆண்டுகள் ஆகும்…
ஆகவே, இது மஹாபுஷ்கரம் ஆகிறது…

எனவே, உண்மையிலேயே இது தான் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு அல்லவா ?…

நமது மற்றும் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்காத ஒரு மாபெரும் வாய்ப்பு இது … மீண்டும் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்குமா ?

இந்த ஜென்மாவில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் அல்லவா இது ?

எனவே, உங்கள் மஹா புஷ்கர் பயணத்தை இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள்….

இப்பேற்பட்ட மஹா புஷ்கர் நிகழ்வில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் நதி தீர்த்த கட்டங்கள் எவ்வாறு பிரிக்க பட்டுள்ளது என்பதையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்….

தாம்ரபரணீ மாதா கி ஜெய் …. ஓம் நம ஷிவாய ….

  • கட்டுரை: சிறியவன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version