January 14, 2025, 1:37 AM
25.6 C
Chennai

குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!

அக்.04 இன்று குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நாளில் அன்பர்கள், குரு பகவானின் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது பழக்கம்தான். ஆனால், குரு என்பவர் எல்லாக்கோயில்களிலும் சன்னிதி கொண்டிருக்கவில்லை. மிகச் சில கோயில்களிலேயே குரு பகவானுக்கு சந்நிதி அமைந்திருக்கிறது.

அப்படி என்றால், குரு யார் தட்சிணாமூர்த்தி யார்? அந்த வேறுபாட்டை இப்போது புரிந்து கொள்வோம்.

நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா?

இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.

ஆனால், நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.  திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

குருவாகிய வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. ஆனால், தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தி யிருப்பவர். ‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.  இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல்தானே அர்த்தம்.!

ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.அதாவது, வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங் களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.

அதுபோல், தேவர்களின் சபையில் ஆசிரியனாக, தேவர்களுக்கு குருவாக இருப்பவர் வியாழன் எனப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியராக இருப்பதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

எனவே, ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.

எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக் குழப்பத்திற்கு என்ன காரணம்?

ALSO READ:  செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை, இனிப்பு வழங்கல்!

ஞான குருவாம் தட்சிணாமூர்த்தியை வழிபட இந்த சுலோகத்தை குழந்தைகள் சொல்கிறார்கள்…

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ குருவே நம:

இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைக்கலாம். ஆனால் இதன் பொருளே வேறு!

ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுப கிரக மாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும். குருவின் அருள் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.

திருமணத் தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு  பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் அந்தக் காலத்தில் ஜோதிடர்களிடம் சென்று, எந்தக் கோயிலுக்கு செல்வது என்று கேட்டிருப்பார்கள். அனைவரும் எளிதில் செல்வதற்கு ஏற்ப குருவின் தலங்கள் இல்லை. எனவே, குரு வீற்றிருக்கும் நவகிரக சந்நிதியில் பரிகாரங்களைச் செய்யச் சொல்லியிருப்பார்கள். ஆனால், நவக்ரகங்களுக்கு சுவாமியான சிவபெருமானின் ஆலயங்களில் கோஷ்டத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானாய், சிவபெருமான் திகழும் கோலம் குருவுக்கு தேவதையான கோலம். எனவே, குருவுக்குப் ப்ரீதி செய்வதற்கு, தட்சிணாமூர்த்திக்குச் செய்தால் போதும் என்று சொல்லிச் சொல்லி, இப்போது அப்படியே ஆகிவிட்டது.

ALSO READ:  சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்கள்! மைசூரில் இருந்து?

எனவே, இந்த குரு பெயர்ச்சி நாளிலும், இனி வரும் வியாழக் கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.  கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம். அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணா மூர்த்தியை வழிபடலாம். வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.

குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். ஞான குரு வேறு, *நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்து கொள்வோம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. எந்தளவுக்கு இந்த கட்டுரை சரியான தகவலை தந்திருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒரு அதிதேவதை உண்டு . உதாரணமாக செவ்வாய் கிரகத்திற்கு அதி தேவதை முருகப்பெருமான் . செவ்வாய் பலம் பெற முருகனை வணங்குதல் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு . அதுபோல நவகிரகங்களில் குரு பகவானின் அதிதேவதை தட்சிணா மூர்த்தியே ஆவார் . ஆதலால் குரு பரிகாரத்திற்கு தக்ஷிணாமூர்த்தி வழிபடு கிரக தேவதை ஆகிறார் . இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை . தயை கூர்ந்து ஜோதிட வல்லுனர்களிடம் விளக்கம் பெற்று வெளியிடவும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week