இதிஹாஸ – புராணங்களில் அரக்கர் எனப்படுவோர் திராவிடர்களே; அவர்களை அழிப்பவர் ஆரியர்கள். தேவ – அசுரப் போர் என்பது ஆரிய – திராவிடர்க்கிடையே நடந்த மோதல்களையே. திராவிட ஒடுக்கு முறையே அவற்றின் மையம் எனப் பலவிதமான பிரசாரங்கள்.
அரக்கரே எம் முப்பாட்டன்கள் எனும் எழுச்சிமிக்க பேச்சு ஒருபுறம்; நீ அரக்கனின் வாரிசு என்றால் தன்படியே ரிஷி – முனிவர்களுக்கும் வாரிசு ஆகி விடுகிறாய்.
உண்மையில் புராணம் சொல்லும் தேவ அசுரர் யார்? அவர்களிடையே என்ன பூசல்? அவை அசுரரைத் தாழ்ந்தோர் எனக் கட்டம்கட்டி ஒதுக்குகின்றனவா? இறையவர் அரக்கருக்கு அருள் செய்வதில்லையா?
புராணங்களோ, வேதமோ அரக்கரின் ஆற்றலை மறைப்பதில்லை. தைத்தியனான விரோசனனை மறை எடுத்துப் பேசுகிறது. விரோசனன் மஹாபலியின் தந்தை. பிரகலாதனின் மைந்தன். இறையவர் அமரர்களுக்கு அருள் செய்ததுபோல் அரக்கருக்கும் அருள் செய்தனர். வேறுபாடு காட்டவில்லை. சிவ பக்தர் பாணனையும் , இராவணனையும் தியானித்த பின்னரே சிவ பூஜையை நிறைவு செய்கின்றனர். பாகவதர் குழாத்தில் பாடப்படும் பிரகலாதாழ்வானும், வீடணாழ்வானும் தேவர்களல்லர்.
பாகவதத்திலேயே மாலவனுக்கு அமரர் செய்த துதிகளும் உள்ளன; விருத்திரன் என்பான் ஓர் அரக்கன் செய்த உள்ளத்தை உருக்கும் துதியும் உள்ளது. பிரகலாதாழ்வார் செய்த துதியும் உள்ளது; அவர் தேவ குலத்தைச் சேர்ந்தவரல்லர்.
மேலும் விரிவாக ………..
இராமபிரான் X இராவணன்
கண்ணபிரான் X நரகாசுரன்
இதிஹாஸ – புராணங்களிலிருந்து விளக்கம் பெறலாம்; நம்பிக்கை இருக்குமானால் அனைத்தையும் ஒப்புக்கொண்டு, அவற்றின் ஸாரத்தைக் கிரஹிக்க வழியுள்ளது; முற்போக்கு பஹுத் அறிவு தடுக்குமானால் அனைத்தையும் கற்பனை எனப் புறந்தள்ளலாம். அதிலும் தவறுகாண வழியில்லை.
இரண்டிலும் சேராமல் தமக்கு சாதகம்போல் தோன்றும் ஒரு பகுதியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஏதோ ஓர் ஆதாயத்துக்காக யாரையோ, எதையோ எதிர்த்தேயாக வேண்டும் எனும் கட்டாயத்தைத் தம்மீது செயற்கையாகத் திணித்துக்கொண்டு அட்டைக் கத்தி சுழற்றுவதில் பயனில்லை. இத்தகைய அரை வேக்காட்டுப் பிதற்றல்கள் இறை நம்பிக்கையாளரை இம்மியளவும் மாற்றும் திறனற்றவை.
கண்ணன் நரகாசுரனைக் கொன்றான் எனும் பழிச்சொல் பரப்புகின்றனர்.கண்ணபிரான் அரக்கனான பாணனின் மகளை யாதவ குல மருமகளாக்கிக் கொண்டான் என்பதையும் அதே நூல்கள்தான் சொல்கின்றன . பாணன் மகள் உஷா, கண்ணபிரானின் பேரன் அநிருத்தனின் மனைவி. ‘உஷா பரிணயம்’ என்றே ஒரு கண்ட காவ்யம் [குறுங்காப்பியம்] உள்ளது.
தேவ – தானவ – யக்ஷ – ராக்ஷஸர் அனைவரும் கச்யப ப்ரஜாபதியின் வழித்தோன்றல்களே. அதிதியின் மக்கள் ஆதித்யர்கள்; திதியின் மக்கள் தைத்யர்கள். கருடனும், பாம்புகளும் சக்களத்தி மக்கள். நூல்கள் நெடுகிலும் தேவர்களைச் சுட்டும்போது கூடவே அரக்கரையும் சொல்கின்றன, ‘ஸுர – அஸுரகணம்’ எனும் ஒரே பிரிவாக.
அமரரின் தவப்பயன் அவர்களை திக்பாலகர்கள் ஆக்கியது, அவர்கள் பதவிகளும் பெற்றனர். யக்ஷர்கள் அளவற்ற செல்வத்தை நாடினர்; யக்ஷனான குபேரன் வடதிசைக்கும் அதிபதியானான். ராக்ஷஸர்களின் நோக்கம் அளவற்ற ஆற்றலும், உடல் வலிமையும். அரக்கர் பலர் வேத நூலறிவு பெற்றிருந்தனர்; அரக்கரின் புரோஹிதர் வேதியரான சுக்ர ஆசார்யர். தேவர்களைச் சார்ந்த ‘கசன்’ என்பான் சுக்ரருக்குப் பணிவிடை புரிந்து அவரிடமிருந்து கல்வி பெற்ற வரலாறும் உள்ளது. அரக்கர் நான்முகனை முறையாக உபாஸித்து , ஸித்திகளையும் வரங்களையும் பெற்றனர். சிவபிரானும், நான்முகனும் அரக்கருக்கும் வரமருளினர்;
திருமால் ஸுதல உலகில் மஹாபலிக்கு இன்றும் கேட் கீப்பராக நின்று பணி செய்து கொண்டுள்ளார். ஹிரண்ய கசிபுவின் வதத்துக்குப்பிறகு விஷ்ணு எந்த ஒரு தைத்யரையும் வதம் செய்யவில்லை.
அரக்கர் சிவ பக்தராக இருப்பதால் அவர்களைத் திருமால் அழிக்கிறார் என ஒரு குற்றச்சாட்டு; இதற்கும் ஆதாரமில்லை. சிறந்த விஷ்ணு பக்தனான விருத்திரன் விஷ்ணுவின் எதிரிலேயே கொல்லப்பட்டு மடிந்தான். அவன் செய்திருக்கும் அற்புதமான துதி அவனது நிகரற்ற ஞான – பக்தி -வைராக்யங்களை வெளிப்படுத்துகிறது.
சிவபெருமான் – புராரி, ஜலந்தராரி
அம்பிகை – மஹிஷாரி
கார்த்திகேயர் – தாரகாரி
இந்திரன் – வலாரி
தேவர்கள் செய்த பிழைகளையும் நூல்கள் மறைப்பதில்லை; பிழைகள் செய்து சாபம் பெற்ற யக்ஷரின் வரலாறுகளும் உள்ளன. அரக்கர் இயற்றிய கோரமான தவங்களையும் நூல்கள் ஒளிப்பதில்லை.
அரக்கர்களே எப்போதும் தண்டனைக்குள்ளாகின்றனர் என்பதும் தவறான கருத்து; செருக்குத் தலை தூக்கினால் அமரர் – முனிவர்க்கும் தண்டனை கிடைக்கிறது.
பாகவதர்கள் போற்றிப் புகழும் வீடணனும், பிரகலாதனும் தேவ குலத்தவர் அல்லர்; சிவனடியார்களில் சிறந்தவராகச் சொல்லப்படும் பாணனும், ராவணனும் அரக்கரே. இராவணன் மனையாள் மந்தோதரியும் கற்பிற் சிறந்த நாரீமணிகளுள் ஒருவராகப் போற்றப் படுகிறார்.
ஆன்மஞானம் பெற்ற ‘கர்க்கடி’ எனும் அரக்கியை முன்மாதிரியாக எடுத்துக்காட்டி, இராமபிரானுக்கே உபதேசமாக ’யோக வாஸிஷ்ட மஹா ராமாயணம்’ சொல்கிறது. [இது ‘ஞானவாசிட்டம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் கண்டுள்ளது]
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
[குறள் எண்:505]
பரிமேலழகர் உரை:
மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.
அவரவர் கர்மமே உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம். பிளவுகளை ஏற்படுத்தி, கைக்கூலிகள் வாயிலாக இந்துக்களை வலிமை குன்றச் செய்வது அன்னிய மதத்தினரின் சதிச் செயல்.
பங்காளிகளான அமரரும், அரக்கரும் ஒரே கூட்டமாகச் சுட்டப்படும் இடங்கள் சில –
அமரா அஜராஶ்சைவ கதம் ஸ்யாம நிராமயா: …
[அமரா: – மரணரஹிதா:,
அஜரா: – ஜராரஹிதா:, ..
தேஷாம் *தேவாஸுராணாம்]
– வால்மீகி ராமாயண உரை
*தேவாஸுரேப்யோ ஹீயந்தே
த்ரீந் பாதாந் வை பரஸ்பரம் ….
– ப்ரஹ்மாண்ட புராணம்
கங்கா ஜலே க்ரீடதி விஷ்டசேதா:
*ஸுராஸுரேப்யோ பகவாநுவாச ।
– ஸ்கந்த புராணம்; வைஷ்ணவ கண்டம்
பாதௌ மஹர்ஷே: கில கச்யபஸ்ய
குலாதிவ்ருத்தஸ்ய *ஸுராஸுராணாம் …..
– குமார ஸம்பவம்
*தேவாஸுராணாம் அந்யோந்யம் அஹோராத்ரம் விபர்யயாத்…
– ஸூர்ய ஸித்தாந்தம் [சோதிட நூல்]
….ப்ரணத *ஸுராஸுர மௌலிமணிஸ்புரதம்ஶுல
ஸந்நக சந்த்ரருசே…..
– மஹிஷாஸுர மர்தனி ஸ்தோத்ரம்
|| யஸ்யாந்தம் ந விது: *ஸுர – அஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||
[யாருடைய இறுதியை அமரரும், அரக்கரும் கூட அறியமாட்டார்களோ அந்த தேவனை வணங்குகிறேன்]