November 28, 2021, 8:03 am
More

  பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?

  வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

  kanchi mahaperiyava - 1

  சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் –பவார் என்ற காவலாளிக்கு மஹான் அருளிய மகத்தான நிகழ்ச்சிகள் …. நன்றி-அமிர்தவாஹினி-2013

  ஸ்ரீ மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்:

  “இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

  ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

  “தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

  அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

  எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வொருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?”என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

  “சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான்.

  மடத்து நிர்வாகியை அழைத்தார்.

  “நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேளைக்கு சோறு போட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார்.

  நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

  சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

  விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.

  காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?”

  ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

  “இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார்.

  தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

  தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

  அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

  பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

  பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

  “தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

  ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை.

  மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

  “பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா”என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

  மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

  விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

  “பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

  பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன் போகவில்லை” என்றான்.

  சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பி கொண்டான், என்பதும் உண்மை.

  இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.

  இடம் கிடைக்காத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

  ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்து விட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

  ஒற்றையடிப்பாதை வழியாக மலையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

  “உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

  என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

  “இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

  உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

  வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார்.

  கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-