தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எட்டாம் பாசுரத்தில் நம் நிலை கண்டு இரங்கி அருள்புரிபவன் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டாமோ என்று கூறி தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, நீ என்ன வாய்பேச இயலாதவளோ, காது கேட்காதவளோ, மயக்கத்தில் கிடப்பவளோ என்றெல்லாம் கடுமையாகக் கூறி துயிலெழுப்ப முயற்சி செய்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்.
பரிசுத்தமான மாணிக்கங்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகையில் நாலாப்புறமும் விளக்குகள் பிரகாசமாக எரிகின்றன. அகில், சந்தனம் முதலியவற்றின் வாசனைப் புகையால் அங்கே மணம் கமழ்கிறது. அத்தகைய மாளிகையில் மென்மையான படுக்கையின்மீது நித்திரையில் ஆழ்ந்திருக்கின்ற மாமன் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாயாக! மாமியே! உள்ளே உறங்குகிற உன் மகளை எழுப்ப மாட்டீர்களா? உன் மகள் என்ன வாய் பேச இயலாதவளோ?
அல்லது, காதால் கேட்கத்தான் இயலாதவளோ? அல்லது பேருறக்கம் உடையவளாக இருக்கின்றாளோ? படுக்கையில் விழுந்து நினைவற்றவள் போலே ஆழ்ந்த மயக்கத்தில் கிடக்கின்றாளோ? அல்லது மந்திரவாதத்தால் கட்டுப்பட்டு உணர்விழந்து இருக்கின்றாளோ? அளவிடப்பட முடியாத ஆச்சரியச் செயல்களை உடையவன் அந்த மாயன். திருமகள் கேள்வனான மாதவன் அவன்.
அவனை மாயவனே, மாதவனே, திருவைகுண்டநாதனே என்றெல்லாம் பலவாறு சொல்லித் துதிக்கிறோம். இப்படி எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றையும் வாயாரக் கற்றிருக்கிறோம். இனியாகிலும் உன் மகள் அதனை உணரலாகாதா? பாவையே எழுந்து வா என்று தோழியைத் துயிலெழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
-: செங்கோட்டை ஸ்ரீராம்