― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்!

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்!

- Advertisement -

தமிழகத்தின் தொன்மையான வழிபாடு முருக வழிபாடு. தொன்மைத் தமிழரின் வழிபடு கடவுள் குமரக் கடவுள்! குறிஞ்சிக் குமரன் என்று குறிஞ்சி நிலக் கடவுளாய்க் கொண்டாடிய குமரக் கடவுள் தமிழகத்தில் தான் சிறப்பித்துக் கொண்டாடப் படுகிறார்.

சிவபெருமானின் மைந்தன் என வடக்கே உள்ளவர்கள் சொன்னாலும், சுப்ரமண்யக் கடவுள் என்ற நிலையுடன் நின்றுவிடுவர். ஆனால், முருகன் பழனியின் குடிகொண்டு, வள்ளி தெய்வானையைக் கரம்பிடித்து, தன் அருளாடல்களை நிகழ்த்தியது எல்லாமே தமிழ் மண்ணில்தான். எனவேதான் தமிழ்க் குமரனென்று கொண்டாடப் படுகிறார் செந்தமிழ்க் குமரனார்.

முருகனுக்கு ஆறு படை வீடுகள் அமைந்ததும் இங்கேதான்! பரங்குன்ற மலையும் பழமுதிர்ச் சோலை மலையும், பழனியும் சுவாமி மலையும் தமிழகத்தின் நடுப் பகுதி என்றால், சீர் அலைவாய் எனப் படும் செந்தூரோ தென்னகத்தில்! திருத்தணிகை வடக்கே அமைந்து, தமிழகத்தின் தொன்மை வழிபாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.

முருகப் பெருமானையும் முருகனின் கை வேலையும் சிறப்பித்துக் கொண்டாடும் தமிழகத்தில், முருகப் பெருமானை அடைவதற்கும் அவன் அருளை அடைவதற்கும் உரிய வழிபாடாக கந்த சஷ்டி விரதத்தை கைக் கொண்டிருக்கிறது.

கந்த சஷ்டி விரதம் இருப்பது குறித்த தகவல்களை இங்கே படித்து, அதன் படி செய்ய முயற்சி செய்யுங்கள்…
***
கந்த சஷ்டி விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.

விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவாரங்கள் பாடுதல் வேண்டும்.

கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், சண்முகக் கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம்.

திருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர்

சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்), கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும், ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

விரத பலன்கள்:
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம். கேளாமல் மறந்ததையும் பெறலாம். கேட்ட அளவைவிட கூடுதலாகவும் பெறலாம். எனவே சஷ்டி விரதத்தால் பெறக்கூடிய பயன்களுக்கு ஓர் அளவில்லை.

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.

ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு. 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.

16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு

இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.
சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைபிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும்
அனுஷ்டிப்பவர்களும் உண்டு.இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம்வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு

இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.

இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.

பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷன பஷ்ச சஷ்டி என்று பெயர் பெறும்இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா?

ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.

ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.

ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும் இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.

முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது

சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்றுசிறப்பித்துப்பேசப்படுகிறது.

இதுசுக்லபட்சத்துப்பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும்.
ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version