உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்: பதிமூன்றாம் பாசுரத்தில் கண்ணனுடன் கூடிக் குலவ வாய்த்த இந்தக் காலத்தில் நீ மட்டும் அவனின் சேட்டைகளை நினைத்து தனித்துக் கிடக்கும் கபடத்தைக் கொண்டிருக்கிறாயே! அதைக் கைவிட்டு எழுந்து வா என்று தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில், எங்களை முன்னம் எழுப்புவதாகச் சொல்லி இப்போது உறங்குகிறோமே என்ற நாணம் இல்லாமல் இருப்பவளே இனியாவது எழுந்துவா என்று அழைக்கிறார்.
உங்கள் வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்தில் அழகான தடாகம் இருக்கிறது. அதில் செங்கழு நீர்ப் பூக்கள் வாய் திறந்து அழகாகப் பூத்து வாவென அழைக்கின்றன. ஆம்பல் மலர்களின் வாயோ மூடிப் போய் குறுகி நிற்கின்றன.
காவிப் பொடியில் தோய்த்து எடுத்த வஸ்திரங்களை உடுத்தியவர்கள் இந்த தவசிகள். அவர்கள் வெண்மை நிறமுள்ள தூய பற்களை உடையவர்கள். அத்தகைய தூய்மை நிறைந்த சந்நியாசிகள், மூடப்பட்டிருக்கும் தங்கள் திருக்கோயில்களின் கதவுகளைத் திறவுகோல் கொண்டு திறந்து திரைவிலக்கச் செல்கின்றனர்.
நாங்கள் எழுவதற்கு முன்பே எழுந்து, எங்களை வந்து எழுப்புவதாகச் சொல்லிச் சென்றவளே! வீறாப்பு மிகுந்த பேச்சால் எங்களை மயக்கிய நங்கையே! நாம் அவர்களிடம் சொன்னபடி முன்பே சென்று அவர்களை எழுப்பிவிடாமல், அவர்கள் நம் வீட்டு வாசலில் நிற்க இப்படி படுக்கையில் இருக்கிறோமே என்ற வெட்கம் கொஞ்சமும் இல்லாதவளே! இனிமையான பேச்சினை வெளிப்படுத்தும் நாவினை உடையவளே! சங்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டுள்ள விசாலமான திருக்கைகளை உடையவன் கண்ணன். தாமரை மலர் போன்ற திருக்கண்களைக் கொண்டஅந்தக் கண்ணனைப் பாடுவதற்காக நீ விரைந்து எழு… என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்