கல்விக்கு தென்திசைக் கடவுளான தெட்சிணாமூர்த்தி, நடனத்திற்கு நடராஜமூர்த்தி, உருவமில்லாத அருவ வழிபாட்டிற்கு லிங்கமூர்த்தி என்ற வரிசையில் சிவ மூர்த்தமான பைரவமூர்த்தி காவலுக்கு அதிபதியாய் வணங்கப்படுகின்றனர். சிவபெருமானின் ஐந்து குமாரர்கள், கணபதி, முருகன், பைரவர்,, வீரபத்திரர், சாஸ்தா என நம்பப்படுகிறது. இந்த ஐந்து குமாரர்களுள் பைரவர் எல்லா சிவாலயங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நிர்வாணக் கோலத்தில், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். காலையில் ஆலய வழிபாட்டை ஆரம்பிக்கும்போதும், இரவு ஆலய வழிபாட்டை முடிக்கும்போதும் பைரவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
வழிபாட்டு முறை
அஷ்டமி:
பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒரு சிறப்புப்பெயர் உண்டு. அவை:-
- மார்கழி – சங்கராஷ்டமி
- தை – தேவதேவாஷ்டமி
- மாசி – மகேஷ்வரரஷ்டமி
- பங்குனி – திரியம்பகாஷ்டமி
- சித்திரை – ஸ்நாதனாஷ்டமி
- வைகாசி – சதாசிவாஷ்டமி
- ஆனி – பகவதாஷ்டமி
- ஆடி – நீலகண்டாஷ்டமி
- ஆவணி – ஸ்தழனு அஷ்டமி
- புரட்டாசி – சம்புகாஷ்டமி
- ஐப்பசி – ஈசானசிவாஷ்டமி
- கார்த்திகை – காலபைரவாஷ்டமி (இது எமவாதனை நீக்கம் மகாதேவாஷ்டமி)
சந்தன காப்பு அபிஷேகம்:
பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் (சிவபுராணம்). பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.
பைரவ வழிபாடு:
- காலையில் வழிபட்டால் – சர்வ நோய்கள் நீங்கும்.
- பகலில் வழிபட்டால் – விரும்பியது கிட்டும்
- மாலையில் வழிபட்டால் – அனைத்து பாவங்களும் விலகும்.
- இரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் – எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.
பைரவ தீபம்:
- சிறு துணியில் (வெள்ளை / சிவப்பு நிறம்) மிளகை (18 எண்ணிக்கை) சிறுமூட்டையாகக் கட்டி அக்ல்விளக்கில் வைத்து நல்லெண்ணை தீபத்தை ஏற்றி வழிபட்டால் எல்லா வளமும் பெருகும்.
- தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
- பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் நல்லெண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
வறுமை நீங்க வழிபாடு :
- நெய் தீபம் ஏற்றி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வில்வம், அரளி பூவினால் பைரவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.
- வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு (திருவிசநல்லூர் ) சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது இல்லத்தில் பணப்பெட்டியில் பூஜித்து வந்தால் செல்வம் குறையாது செழிக்கும்.
-
- தினமும் காலையில் “ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமக !”, என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும்.