குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் “சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்” என்று நப்பின்னையை இந்தப் பெண்கள் வேண்டினர். உடனே அவளும் எழுந்து கதவைத் திறக்க வந்தாள்.
அப்போது கண்ணன், நம் திருவடி பற்றின அடியாரைத் தன் அடியாராகவே இவள் எண்ணுவதுபோல, இந்த ஆய்ச்சியரையும் எண்ணி அவர்களுக்கு உதவப் போகிறாளே என்று நினைத்தான்.
உடனே நப்பின்னை கதவைத் திறக்காதபடி அவளைத் தடுத்து இழுத்து பஞ்சணையில் தள்ளி அவள் மீது மயங்கிக் கிடந்தான். நப்பின்னையும் ஆய்ச்சியர் வந்த காரியத்தை மறந்து கிடந்தாள்.
அதனால் நம் முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சியரின் வெறுப்புக்கு நம்மை ஆளாக்கிவிட்டானே கண்ணன் என்று வாய்திறக்காது கிடந்தாளாம் நப்பின்னை. அவளிடம் இந்தப் பாசுரத்தில் மீண்டும் வேண்டுகிறார்கள் ஆய்ச்சியர்கள்!
நிலை விளக்குகள் நாற்புறமும் ஒளிபரப்ப எரிகின்றன. யானைத் தந்தங்களினால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டில். அதன் மீது மெத்தென்று இருக்கும் படுக்கை. அந்தப் படுக்கையும் அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமள மணம், வெண்மையான தூய்மை என ஐந்து குணங்களை உடையதாக உள்ளது. அதன் மீதேறி சயனித்தபடி, கொத்துக்கொத்தாக அலர்கின்ற மலர்களை அணிந்த கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத் தடங்களை தன் மேல் வைத்தபடி பள்ளி கொள்கின்ற கண்ணா..! அகன்ற திருமார்பினை உடைய பிரானே! உன் வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் அருளிச் செய்ய வேண்டும்.
மையிட்டு அலங்கரிக்கப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய, அகல விரித்த கண்களை உடைய நப்பின்னையே. நீ உன் மணாளன் கண்ணபிரானை ஒரு நொடிப்பொழுதும் படுக்கையை விட்டு எழ விடுகிறவளைப் போல் தெரியவில்லை!
கண நேரமேனும் அவன் உன்னைப் பிரிந்து இருக்காத நிலையை நீ ஏற்படுத்தியிருக்கிறாய். ஆஹா!! நீ இப்படி இருப்பது உன் தகுதிக்குப் பொருத்தமே. ஆனால், நீ எங்கள் மீது பாராமுகமாக இருப்பது உன் கருணை உள்ளத்துக்குத் தக்க தத்துவமோ? அன்று! எனவே எங்களுக்கு கருணை காட்டு! என்கிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்
இந்தக் கட்டுரைகளையும் படிக்க…