முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
விளக்கம்: முந்தைய பாட்டில், எங்களைப் புறக்கணித்தல் உன் கருணைத் தத்துவத்துக்கு அழகல்ல என்று கூறி நப்பின்னைப் பிராட்டியை சரண் புகுந்த ஆய்ச்சியர்கள், இந்தப் பாசுரத்தில், தங்கள் நோன்பு கைகூட, விசிறியும், கண்ணாடியும், கூடவே கண்ணனையும் தந்தருள வேண்டும் என்று நப்பின்னையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும்போது, அந்தத் துன்பம் வரும் முன்னரேயே எழுந்தருளி அவர்களின் நடுக்கத்தை நீக்கியருளவல்ல மிடுக்கினை உடைய கண்ணபிரானே! பகைவர்களுக்கு பயமாகிய காய்ச்சலைக் கொடுக்க வல்ல தூய்மையும் வலிமையுமுள்ள குணம் கொண்டவனே. பகைவர்கள் மண்ணைக் கவ்வும் படியான வலிமையுடைய கண்ணபிரானே. பொற்கலசம் போன்ற, விரஹதாபம் பொறுக்க மாட்டாத மென்மையான முலைகளையும் சிவந்த வாயையும் நுண்ணிய சிற்றிடையையும் கொண்ட நப்பின்னைப் பிராட்டியே.
ஸ்ரீமகாலட்சுமியே. நீ படுக்கையில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள் செய்வாய். துயில் எழுந்து, எங்கள் நோன்புக்கு உபகரணமாக உள்ள ஆலவட்டமான விசிறியையும் கண்ணாடியையும், உன் வல்லபனான கண்ணபிரானையும் எங்களுக்குத் தந்து, பிரிவுத்துயரால் மெலிந்துள்ள எங்களை இந்தக் கணத்திலேயே நீராட்டச் செய்! என்று கண்ணனுடன் உள்ளம் கலக்க பிராட்டியின் அருளை வேண்டி நிற்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.
இங்கே, உக்கமும் தட்டொளியும் என்று விசிறியையும் கண்ணாடியையும் வேண்டியது, கண்ணனைப் பெற வேண்டியவர்களுக்கு இது ஒரு குறியீடு. மேலும், இப்போதே எம்மை நீராட்டு என்று கூறியது, இந்தக் கணம் தப்பினால் பின்னர் ஊரார் இசைய மாட்டார்கள் என்றும், நாங்களும் பிரிந்து உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம்; விரஹம் எங்கள் உடலைத் தின்றுவிடும் என்றும் உணர்த்துவதாம்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்
இதையும் படிக்கலாமே..!