அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
மாரிமலை முழைஞ்சில் பாசுரத்தில் சீரிய சிங்காசனம் ஏறி கம்பீரமாக அமர்ந்து, நாங்கள் வேண்டும் பறையைக் கேட்டு, அதனை அளித்தருள் என்று கூறிய ஆய்ச்சியர்கள், இந்தப் பாசுரத்தில், கண்ணனின் குண நலன்களையும் வீரத்தையும் புகழ்ந்து போற்றி அவன் மனத்தை அடியார்க்கு அருளத் தயார்படுத்துகிறார்கள்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் மஹாபலியால் பெரும் சிரமங்களைச் சந்தித்தது. அன்று, நீ உன் ஈரடியால் இந்த உலகங்களை அளந்து அனைவருக்கும் அருளினாய். உன்னுடைய அந்தத் திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ராவணனின் பட்டணமாகிய தென்னிலங்கைக்கு எழுந்தருளி, அந்த அழகிய லங்காபுரியை அழித்து அருளினவனே.
உன்னுடைய மிடுக்கு பல்லாண்டு வாழ்க. சகடாசுரன் அழியும்படி அந்தச் சகடத்தை உதைத்து அருளியவனே உன்னுடைய புகழானது பல்லாண்டு வாழட்டும்! சீதா பிராட்டியைக் களவாடிச் சென்ற ராவணன் இருக்கும் இடத்தில், கன்றாக நின்ற வத்ஸாசுரனை எறிகின்ற தடியாகக் கொண்டு கபித்தாசுரன் மீது எறிந்தாய். உன் திருவடிகள் போற்றி. கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தூக்கியவனே. உன்னுடைய சீர்மையும் சீலமும் நிறைந்த குணங்கள் போற்றி.
பகைவர்களுடன் பொருதி அவர்களின் பகைமையை வென்று அழிக்கின்ற உனது திருக்கையிலுள்ள வேல் வாழ்க… என்று இப்படிப் பலவாறாக மங்களாசாசனம் செய்துகொண்டு உன்னுடைய வீரியங்களையே புகழ்ந்துகொண்டு உன்னிடம் பறைகொள்வதற்காக இன்று நாங்கள் வந்தோம். எங்களுக்கு இரங்கி அருள் புரியவேண்டும்… என்று கண்ணன் புகழைப் பாடி, பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்ததுபோல், ஆண்டாளும் போற்றிப் பாடுகிறார்.
வெறும் கையைக் கண்டே போற்றி என்பவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி எனக் கூறாதிருப்பரோ? இங்கே, “அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!” என்று இவர்கள் கண்ணனைப் போற்றுதற்கே அமையப் பெற்ற நாவின் சுவையை வெளிக்காட்டுகின்றார் ஸ்ரீஆண்டாள்.
– விளக்கம் .. செங்கோட்டை ஸ்ரீராம்