
“சட்டத் திருத்த மசோதா”- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.
சட்டத் திருத்த மசோதா
அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும் அதில் திருத்தம் செய்வதும், அதற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதையும் சகஜமாக இக்காலத்தில் காண்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போன்று, அரசியலமைப்பு சட்டங்கள் மாறுதலுக்கு உட்படுகின்றன. “இத்தகைய மாறுதல்கள் தவிர்க்கவே முடியாதவை“ எனும் கருத்து, எங்கும் பரவலாக உள்ளது.
கணவன்-மனைவி உறவு, முறையற்ற உறவு, விவாகரத்து, இது முதலானவற்றில், நெறிமுறைப்படுத்துவதில் பெரும் தடங்கல்கள், தடுமாற்றங்கள் உண்டாகின்றன. பெருமான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு அல்லது எதிர்ப்புகளினால், நிலையான தீர்மானம் செய்ய முடியாமல் ஆட்சியில் உள்ளவர்கள் தடுமாறுகின்றனர். ஆனால். நமது முன்னோர்கள், இவ்விஷயத்தில் தெளிந்த மனத்துடன், மதிநுட்பத்துடன் சட்டமியற்றி ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். பின்புள்ளோர் தடுமாற்றமில்லாமல் அவ்வழி நடக்க வழிகோலுகின்றனர்.
மாமன்னன் துஷ்யந்தனின் கதையினில் ஒரு நிகழ்வைக் காணலாம்.
அவனது ராஜ்யத்தில் ஒரு பணக்காரன் இறந்துவிட்டான். அவனுக்கோ, வாரிசு இல்லை. “இனி இந்தப் பெரும் சொத்து யாருக்கு உரிமையானது?” எனும் கேள்வி உண்டானது. அப்போது துஷ்யந்த மஹாராஜா ஒரு சட்டமியற்றினார்.
“என் ராஜ்யத்தில், யார் யார் உறவுகள் இல்லாமல் உள்ளனரோ!, அவர்களுக்கு மன்னனாகிய நானே உறவினன்“ – அதாவது வாரிசு இல்லாதவர்களின் சொத்து, அரசாங்கத்திற்குச் சொந்தமானது. அவர்கள் சொத்தை அரசுடைமையாக்குவது என்பதே இதன் பொருள்.
இவ்விதம் வாரிசு இல்லாதவர்களின், அசையும், அசையா சொத்துக்கள், பணம் முதலியவை நாட்டுடைமையாக்கப்படும்போது, மக்கள் இருவகையில் பயனடைகின்றனர். ஒன்று அந்த பொருட்களின் உபயோகம், மற்றொன்று வரிச்சுமை நீங்குவது.
சரி! அதை விடுவோம். விஷயத்திற்கு வருவோம். துஷ்யந்தன் போட்ட சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு. இத்தீர்மானம் நிறைவேறினால், சட்டத்திலுள்ள ஓட்டைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். பின்னர் மறுபடியும் இதில் திருத்தம் கொண்டுவருவது, சில சமயம் இயலாததாகிவிடும். அதனால் துஷ்யந்த மஹாராஜா சட்டம் இயற்றும்போதே, மதிநுட்பத்துடன், பின்னாளில் எவ்வித இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் சட்டம் இயற்றினான்.
ஆம்! உறவுகள் இல்லாதவர்களுக்கு, மன்னன், “நானே உறவு” என்றான் அல்லவா! அதிலொரு அருமையான குறிப்பு (Point) வைத்திருந்தான். அதாவது, “மக்களே! எந்த உறவாக நானிருந்தால், எனக்கும், மற்றவர்களுக்கும் பாவம் நேரிடாதோ! அந்த உறவாக நானிருப்பேன்“ என்கிறான்.
இந்த சட்டம் குறித்த துஷ்யந்தனின் விளக்கவுரையை சபையில் கேட்கலாம்.
அதாவது ஒருவருக்குப் பிள்ளை இல்லையென்றால், அவரின் புத்திர ஸ்தானத்தில் மன்னன் இருக்கலாம். மற்றொருத்தருக்கு சகோதரன் அல்லது தந்தை இல்லையெனில் அந்த நிலையில் மன்னன் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்குக் கணவன் இல்லையென்றால் – அதாவது அவள் கணவனால் கைவிடப்பட்டோ! அல்லது கைம்பெண்ணாகவோ இருந்தால், அதே உறவாக மன்னன் இருப்பதாகச் சொன்னால், அது இருவருக்கும் (பெண்ணுக்கும், அரசனுக்கும்) பெரும் பாவமன்றோ!
அத்தகைய பாபம் நேரிடாமல், அப்பெண்ணின் மகனாக, சகோதரனாக, தந்தையாக இருந்து காப்பாற்றுவது, அரசனுக்குப் பெருமைதானே! இதைத்தான் துஷ்யந்தன் அரசாணைக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டான்.
அதாவது, முறையற்ற உறவு முதலானவற்றால் ஏற்படும் பாபத்தை இவ்வுலகம் அறியவேண்டும், தனது ஆட்சியில் மக்களும் பாபங்கள் செய்யாதவர்களாகவும், பாபம் செய்ய பயப்படுபவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைத்து அதைச் செயல்படுத்திய மாமன்னன்.
திருத்தமே தேவையில்லாத தீர்மானமான இதை, மஹாகவி காளிதாசன் வர்ணிக்கிறார்:
யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா: ஸ்நிக்தேந பந்துநா |
ஸ ஸ பாபாத்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் ||
ஸ்ரீக்ருஷ்ணனின் கீதாசாஸ்த்ரத்திற்கு அத்புதமான வ்யாக்யானம் அமைத்த வேதாந்த தேசிகர், இதே பாணியில், பதினெட்டு அத்யாயங்களின் செழும்பொருளை, ஒரேயொரு ச்லோகத்தினால் அழகாக விளக்குகிறார்.
ஸுதுஷ்கரேண சோசேத் ய: யேந யேந இஷ்ட ஹேதுநா |
ஸ ஸ தஸ்யாஹம் ஏவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ ||
“இவ்வுலகிலுள்ள மக்கள், நிலையற்ற பல பலன்களை வேண்டி அலைகின்றனர். அவைகளைப் பெற முடியாமல் மேன்மேலும் இன்னலுறுகின்றனர். குறிப்பாக, ‘யாரிடம் சென்று கேட்பது? எப்படிக் கேட்பது‘ என்பதும் தெரியாமல், திகைக்கின்றனர். இம்மை மற்றும் மறுமை எனும் அனைத்து பலன்களையும் அளிப்பவன் நானே! எனவே, என்னைச் சரணடைபவன், அனைத்துத் துன்பங்கள் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறான். பதினெட்டு அத்யாயமுள்ள கீதையின் திரண்டபொருள் இதுவே“ என விளக்குகிறார்.
அதாவது கண்ணனைச் சரணடைவதே நமது அனைத்துத் துக்கங்களினின்றும் விடுதலையளிக்கும் என்பதினை உணர்ந்து அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு மேலான சுகம் எய்தலாம்.
இத்தகைய மேலான சட்டம் நம்மைத் திருத்துவதற்காகவே கண்ணனால் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, இன்னமுமா நாம் திருந்தாமல் இருப்பது?
மன்னன் துஷ்யந்தன் “பாவம் ஏற்படாமல்“, படு ஜாக்கிரதையாக சட்டம் இயற்றினான். மாமாயன் கண்ணன், “பாவங்களைப் போக்குகிறேன்“ எனும் சட்டத்தை ஏற்படுத்தினான். இவ்விரண்டுமே திருத்தங்கள் தேவைப்படாதது. ஆனால் நமது உள்ளத்தைத் திருத்தக் கூடியது.
அன்புடன்
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி
Sri #APNSwami.
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…