October 17, 2021, 9:27 pm
More

  ARTICLE - SECTIONS

  ருஷி வாக்கியம் (4) – ராமன் வெறும் மானுடனல்ல!

  rama3 - 1

  “ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்திபி:I
  அதிர்தோ மானுஷே லோகே ஜக்ஞே விஷ்ணு: சனாதன:II

  -இது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம், முதல் சர்க்கம், ஏழாவது ஸ்லோகம்.

  இந்த ஸ்லோகத்தில் ராமன் என்றால் யார் என்று வால்மீகி ஸ்பஷ்டமாகக் கூறியுள்ளார்.

  “தேவதைகளால் துதிக்கப்பட்டு கொடியவனான ராவணனை வதைப்பதற்காக மனித உலகில் அவதரித்த சனாதனனான விஷ்ணுவே ராமன்” என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

  பால காண்டத்தில் நாராயணன் ராமனாக அவதரித்தல் போன்றவை மிகத் தெளிவாகவே காணப்படுகின்றன. ஆனால் மீண்டும் அயோத்தியா காண்டத்திலும் கூறுவது சிறப்பான அம்சம்.

  சிலர் பால காண்டத்தில் காணப்படும் புராண சம்பிரதாயங்களைப் பார்த்து, இதை வால்மீகிதான் எழுதினாரா என்று ஆச்சயர்ப்படுவார்கள். அவர்கள் மகரிஷியைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

  அடுத்த காண்டத்திலும் ராமனை சாட்சாத் விஷ்ணுவாகவே காட்டுகிறார் வால்மீகி.

  ஆயின், ராமாவதாரத்தின் சிறப்பு என்னவென்றால், ராமன் மானுடனைப் போலவே நடந்து கொண்டான். ஆனால் மானுடன் அல்லன். வெறும் மனிதனாக இருந்திருந்தால் ராவணனை வதைத்திருக்க இயலாது. ராவணாசுரனுக்குப் பிறவியிலேயே நரனோ, வானரனோ வீழத்த இயலாத சக்தி இருந்தது. தவம் மூலம் சம்பாதித்த சக்தி என்னவென்றால் தேவதைகளோ, கந்தர்வர்களோ, யட்சர்களோ, அரக்கர்களோ இன்னும் யாரெல்லாம் உயர்ந்தவர்களோ…. யாருமே அவனைக் கொல்ல இயலாது என்பது. இயல்பாகவே மனிதனாலோ குரங்குகளாலோ கொல்லப்பட இயலாத வீரப்பிரதாபம் கொண்டவனாக இருந்தான் ராவணன். இன்னும் தவத்தால் பெற்ற வரம் தேவதைகளாலோ, தெய்வங்களாலோ, பிற அரக்கர் போன்றவர்களாலோ மரணமற்ற நிலை.

  அப்படியிருக்கையில் ராவணனை அழிப்பது மகா கஷ்டம். அதனால் ஒரு திட்டம் வகுத்தான் நாராயணன். மனிதர்களிடமிருந்தோ குரங்குகளிடமிருந்தோ தான் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவன் வரம் கோரவில்லை. ஏனெனில் இயல்பாகவே அவனிடம் அந்த சக்தி இருந்ததால் அதனை வரமாகக் கேட்கவில்லை. அங்கே வாய்ப்பு கிடைத்தது. நரனோ வானரனோ அவனைக் கொல்ல முடியும். ஆனால் சாதாரண மனிதனுக்கு அவனை வதைக்கக் கூடிய சக்தி கிடையாது. அதனால் தேவதைகளுக்கே தெய்வமான நாராயணன் மனித வடிவமெடுத்தான். வெறும் மனிதனால் ராவணனை வதைக்க இயலாதென்பதால் நாராயணன் மனிதனாக அவதரித்தான். அதன் மூலம் ராவணன் வதைக்கப்பட்டான்.

  இதனைக் கொண்டு ராமாவதாரம் என்பது நரனாக வந்த நாராயணனின் சரித்திரம் என்பது தெரிகிறது. இந்த விஷயத்தை எப்போது நினைவில் கொள்ள வேண்டும். ராமனைப் பற்றி பேச்சு வரும் போதெல்லாம், ராமன் மனிதனா? தெய்வமா? என்ற சர்ச்சை ஏற்படும் போதெல்லாம், “மனித வடிவில் வந்த நாராயணனே ராமன்!” என்று ஒரு வாக்கியத்தைப் புரிந்து கொண்டால் போதும்.

  அதனையே வால்மீகி ஒரு ஸ்லோகத்தில் “அதிர்தோ மானுஷே லோகே ஜக்ஞே விஷ்ணு: சனாதன:” என்ற வார்த்தைகளால் அழகாகக் கூறியுள்ளார்.

  சனாதனமான, அனாதியான ஸ்ரீமகாவிஷ்ணு மனித உலகில் அவதரித்தார். அதனால் நமக்கு மனித ரூபத்தில் நாராயணன் வந்ததால் சௌகர்யம் எற்பட்டது. எதனாலென்றால் நர ஜாதியான மனித ஜாதியில் மானுடனாக வந்த பகவான் நமக்கு இன்னும் அருகாமையை அளிக்கிறான்.

  ஆயின், சிறந்தவன் எந்த வேடம் தரித்தாலும் அதற்குச் சிறப்பான நியாயத்தை அளிப்பான். சிறந்த புகழுடையவன், சிறந்த திறமையுடையவன் எந்த பாத்திரத்தை ஏற்றாலும் அதற்கு பரிபூரணமான முழுமையை அளிக்கக் கூடியவனாக இருப்பான். சாமானியர்கள் அவ்வாறு செய்ய இயலாது.

  rama2 - 2

  உயர்ந்தவனான நாராயணன் மானுடனாக அவதாரமெடுத்த போது மானுடனாகக் கூட உயரந்தவனானான். அதனால்தான் நாம் ராமாவதாரம் மனிதர்களுக்கு ஆதர்ஷ அவதாரம் என்று கூறுகிறோம். காரணம் என்னவென்றால் சிறந்தவனான இறைவனே மானுடனாக வந்தாதால் சிறந்த மனிதனாக நடந்து கொள்ள முடிந்தது. ஆனால் சாமானிய மனிதர்கள் சிறப்பாக நடந்து கொள்வதென்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

  சிலருக்கு வயது அறுபது தாண்டியிருக்கும். அப்போதும் சிறப்பாக வர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் முயற்சி நிலையிலேயே இருப்பார்கள். எப்போது அவர்கள் சிறப்பானவராக ஆவார்கள்? நான் கவனித்திருப்போம். பரிபூரணமான தனியாளுமை எழுபது, எண்பது வயதைத் தாண்டினால் கூட வருவது கடினம்.

  பிறரை வசைச் சொற்களால் கடிந்து பேசி வருத்துவார்கள். பலவீனங்களுக்கு இடம் கொடுப்பார்கள். வாய்ச் சவடால், கர்வம் போன்றவற்றைப் பற்றி இனி கூறத் தேவையில்லை. ஊழல், பிறரை ஏமாற்றுதல் போன்ற தீய குணங்களும் தென்படும். அறுபது எழுபது வயது தாண்டியவர்களிடமே இத்தனை துர்குணங்கள் தென்படுகின்றன என்று கூறும் போது இனி அவர்கள் திருந்துவார்கள் என்ற ஆசைக்கே இடமில்லை.

  அதனால் மனிதர்களில் உயர்ந்த மனிதர் கிடைப்பது மிகக் கடினம். ஒருவர் நடத்தையில் சிறந்தவராகத் தென்படலாம். ஆனால் அவரிடம் ஞானம் இருக்காது. ஒருவர் ஞானத்தில் சிறந்திருக்கலாம். அவரிடம் நன்னடத்தை இருக்காது. இரண்டும் ஒருவரிடம் இருந்தால் அவருக்கு சரீர பலம் இருக்காது. மூன்றும் ஒருவரிடமிருந்தால் அவர் தர்மத்திற்கு கட்டுப்பட்டு இருக்க மாட்டார். நான்கும் ஒருவரிடமிருந்தால் அவரால் உலகிற்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்திருப்பதென்பது மனிதர்களுக்கு சாத்தியமில்லை. மிக மிகக் கடினம்.

  ஆயின் மனிதனாக இருந்தபடியே அனைத்திலும் சிறப்பான திறமையைக் காட்ட வேண்டுமென்றால் இறைவன்தான் இறங்கி வர வேண்டும். அவ்வாறு இறங்கி வந்த பரபிரம்மம்தான் ராமன்.

  அதனால் ராமன் மனிதனாக வந்தவுடன் நரனுக்கு இருக்க வேண்டிய சகல யோக்கியதைகளையும் அவன் நூற்றுக்கு நூறு பங்கு பரிபூரணமாக செய்து காண்பித்தான். அதனால்தான் வால்மீகி மகரிஷி மனித உலகிற்கு ராமனை ஒரு ஆதர்ஷ மனிதனாகக் காண்பிக்கிறார். இங்கு அத்தகைய பரிபூரணமான மனிதனாக எந்த மனிதனும் இருக்க இயலாது என்பதால் பரிபூரணமான மனிதனாக வந்த பரமாத்வாவைக் காண்பித்தால் அவனையே நாம் உபாசனை செய்து, வழிபட்டு, தியானம் செய்து வந்தால் அத்தகு பரிபூரணத்துவத்தை அடையாவிடினும் பூரணத்துவ நிலையையாவது நாம் அடைய முடியும்.

  அத்தகு ராமச்சந்திர மூர்த்தியை உபாசனை செய்ய வேண்டும். உபாசனை என்பது இரண்டு விதங்கள். மந்திர ஜபம், ஸ்தோத்திர ஜபம் செய்வது ஒரு வழிமுறை. அவனுடைய தனிப்பட்ட ஆளுமையை, குணநலன்களை, மகிமைகளை, லீலைகளை நிரந்தரம் படிப்பதும், நினைத்துப் பார்ப்பதும் இன்னொரு வழிமுறை.

  ராம லீலைகள், ராமனின் நன்னடத்தை, ராமனின் பேச்சு இவற்றை நாம் பிரமாண கிரந்தங்களாக இருக்கக் கூடிய மகரிஷிகள் எழுதிய ராமாயணத்தின் மூலம் படித்துணர வேண்டும்.

  அதிலும் வால்மீகி ராமாயணத்தில் ராமனின் குண நலன்களையும், நடவடிக்கைகளையும் நாம் காண்கையில், “ஓகோ…! வாழ்க்கை இப்படி இருக்கும் போலும்! உத்தம மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் போலும்!” என்றறிய முடியும்.

  தனிமனித ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான அம்சங்களை கற்றுத் தர வேண்டுமென்றால் ராமாயணத்தைக் கற்றுத் தர வேண்டும். ராமாயணத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களாக வைக்கக் வேண்டும்.

  அத்தகைய ராமாயணத்தை நமக்களித்த வால்மீகி மகரிஷிக்கு வந்தனம்.

  தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
  தமிழில் – ராஜி ரகுநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-