“எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்.”-ஒரு அம்மாள்.

(“புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா”.-பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-129
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

வெளியூர் அம்மாள் அடிக்கடி தரிசனத்துக்காக ஸ்ரீ மடத்துக்கு வருபவர். அதனால்,பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் தொண்டர்களுக்கு நன்றாக அறிமுகமானவர். அவர் ஒரு தடவை தரிசனத்துக்காக வந்தபோது வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்பவர் பெரியவாளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார். வந்த அம்மையார் அவரிடம் குசலம் விசாரித்துவிட்டு, பெரியவாளிடம் ஒரு கேள்வி கேட்கப் போவதாகத் தெரிவித்தார்.

“என்ன கேள்வி?”

“எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்.”

வித்யார்த்திக்குக் கோபம் வந்தது.

“பெரியவாளிடம், ஆன்ம விஷயங்கள்,ஈசுவர பக்தி, பூஜை – புனஸ்காரம் பற்றிப் பேசலாம். உங்கள் வீட்டுப் புளியமரங்கள் காய்க்கவில்லை என்றால், அவர் என்ன செய்வார்? இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது” என்று கடிந்து கொண்டார்.

பெரியவாள் பக்கத்தில் இன்னொரு சிஷ்யர் இருந்தார்

“அந்த அம்மா என்ன சொல்றா? கேளு என்றார் பெரியவாள்.

அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்.

“அவா தோப்பிலே புளிய மரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கலையாம்”

பெரியவாள் சொன்னார்கள்.

“புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா”.

“கேள்விப்பட்டிருக்கேன். தோப்புப் புளிய மரங்களிலே பிசாசு இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்வார்கள்.”

“அந்த அம்மையார் குடும்பத்தில்,முன்னொரு தலைமுறையில், ஒரு பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த விவ்ரம் இந்த அம்மாளுக்குத் தெரியுமான்னு கேளு..”-பெரியவா

“கேள்விப்பட்டிருக்கேன். என் மாமனார் அப்பா, தன் மூத்த சம்சாரத்தை ரொம்பவும் கொடுமைப் படுத்தினாராம். இம்சை பொறுக்காமல் அவர் கிணற்றில் குதித்து உயிரை விட்டாராம்.”-அம்மாள்.

இந்த மாதிரி ரகசியமான குடும்ப சமாசாரங்களேல்லாம் பெரியவாளுக்கு எப்படித் தெரிகிறது என்று கூட வந்தவர்கள் ஆச்சர்யமும் அவமானமும் அடைந்தார்கள்

பெரியவாள், அப்போது பிரசித்தமாக இருந்த ஒரு மந்திரவாதியிடம் (ஆனந்த தாண்டவபுரம் அய்யங்கார்) சென்று,பரிகாரம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தில் தில – ஹோமம் பண்ணச் சொன்னார்கள்.

இவ்வளவையும் செய்து முடிந்த பிறகு, புளிய மரங்கள் நன்றாகக் காய்க்கத் தொடங்கின.

முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்களில் ஒரு கூடை நிறைய எடுத்து வந்து பெரியவாள் முன்பு வைத்தார் அம்மையார்.

இனிப்பான புளியம்பழங்கள்!

பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

“பெரியவாள் அனுக்ரஹத்தால் என்னோட மாமியாரின் மாமியாருக்கு நல்ல கதி கிடைச்சுது” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார் அம்மையார்.

துர் மரணம் ஏற்பட்டால் அந்த உயிர் ஆவியாக அலைந்து தவிக்கிறது. அதற்கான பரிகாரங்களைச் செய்து விட்டால் , தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...