“ஆத்துக்கு வா…வான்னு கூப்பிட்டே, வாசலில் நிற்பவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டாயா?”-பெரியவா

“ஆத்துக்கு வா…வான்னு கூப்பிட்டே, வாசலில் நிற்பவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டாயா?”-பெரியவா
 
(வாயிலே கல்கண்டு மெல்லவும் முடியாமல் .,துப்பவும் முடியாமல் பெரிய அவஸ்தை பட்ட பக்தர்)
 
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
காளஹஸ்திக்குப் பெரியவா சென்ற சமயம்.
 
அங்கே மூன்று மலை உண்டு.நடுவில் இருந்த கைலாச கிரியைப் பிரதட்சணம் செய்தார் பெரியவா.
 
அங்கே பெரியவாளின் பரம பக்தர் ஒருவர்,
 
“பெரியவா எங்காத்துக்கு வரணும்!” என்று ஓயாமல் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார். பெரியவாளோ காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. வரவழியாகவுமில்லை.இந்த பக்தர் ராம பக்தரும் கூட, தினமும் பூஜை செய்வார். அதை முடித்துக்கொண்டு பெரியவா பண்ணும் பூஜையைப் பார்க்க அவர் தங்கிய மடத்துக்கு வந்து விடுவார்.
 
 
ஒரு நாள் அப்படி பூஜை பண்ணிட்டு நைவேத்யமாக வைத்திருந்த கல்கண்டை வாயிலே போட்டுக் கொண்டார். அதேசமயம் கண்ணப்பர் இருந்த மலையை தரிசித்துவிட்டு பெரியவா மடத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
 
 
வழியில் இந்த பக்தர் வீடு வந்தது.’அடடா! இவர் வீட்டுக்கு இப்போது போகலாமே…” என்று பக்தர் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டா ர் பெரியவா. பக்தர் அந்த அமளியைக் கேட்டு எட்டிப் பார்த்தார். அவ்வளவுதான் மூச்சே நின்றுவிடும் போல் ஆச்சரியம்! கிடுகிடுவென்று ஓடிவந்தார். ஒரு வார்த்தையும் பேச முடியாமல், வாயிலே கல்கண்டு வேறே. மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் பெரிய அவஸ்தையாகப் போய்விட்டது.
 
 
பெரியவாளோ, “ஆத்துக்கு வா…வான்னு கூப்பிட்டே, வாசலில் நிற்பவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டாயா?” என்றார். வாயில் சுவாமி பிரசாதம்.துப்புவதும் தவறு. பெரியவா முன்னாலே கடமுடவென்று கடிப்பதும் கூடாது. சிறிது நேரம் தவித்துவிட்டு, வந்தது வரட்டுமென்று
கல்கண்டைத் துப்பிவிட்டார். பெரியவாமேல் எச்சில் தெளித்துவிட்டதோ என்று பக்தர் அழுதார்.
 
“தப்பு பண்ணிட்டேனே!” என்று அரற்றினார்.
 
பார்த்துக்கொண்டிருந்த பெரியவா;
 
“எதுக்கு இப்படி பதறறே! இப்ப என்ன நடந்துடுத்து? உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த ஊர் காளஹஸ்தி க்ஷேத்ரம்.இங்கே பக்த சிகாமணி கண்ணப்பர் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினார்? வாயிலேதான் தண்ணீரை நிரப்பி வந்து அபிஷேகம் பண்ணினார்; தலையில் செருக்கிக்கொண்டு வந்த பூவினால் அர்ச்சனை பண்ணினார் ..வாயால் அதக்கிப் பார்த்த மாமிசத்தை நைவேத்யம் பண்ணினார்.
 
பக்தி என்ற அடிப்படையாகத்தான் பரமன் பாராட்டினாரே தவிர மற்ற எதையும் தவறாகவே நினைக்கவில்லை. ஆதிசங்கரரும் சிவானந்தலஹரியில் ஆனானப்- பட்டவர்கள் செய்த பூஜையெல்லாம் பாராட்டாமல், இந்தக் காட்டுவேடனின் களங்கமில்லாத பக்தியைத்தான் பெரிதாகச் சொல்கிறார்.
 
அப்பேர்ப்பட்ட க்ஷேத்ரம் இது. இங்கே எச்சில் தோஷம் உனக்கு வராது.அழாதே!” என்று சமாதானம் செய்கிறார்
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...