“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”

(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன?)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஆத்தூர் அஞ்சல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் முகுந்தராஜ்.சென்னையிலிருந்து பதவி உயர்வின் காரணமாக ஆத்தூர் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் அவருக்கு ஒரே மகன். எம்.டெக். வரை படித்திருக்கான்.

அந்தப் படிப்புக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தந்தை நினைத்தார்.வேலைக்கு முயற்சிப்பதை ஒத்திப் போட்டு மகனின் ஜாதகம் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல்.

அப்போது பெத்தநாயக்கன் பாளயத்தில் ஓர் ஆந்திர  ஜோசியர் இருந்தார்.ராமபட்லு சாஸ்திரிகள் என்பது  அவரது பெயர். முகுந்தராஜ் தன் உதவியாளர்  சீனிவாசனிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து,  ஜோசியரிடம் அனுப்பினார். அந்த ஜோசியர்,  சீனிவாசனுக்கு நன்கு அறிமுகமானவர்.

“பையனுக்கு அமெரிக்காவில் நிச்சயம் வேலை  கிடைக்கும்.இங்கு தனக்குச் சொந்தமான  பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வான்.  இன்னும் நான்கு மாதங்களில் இவை நடக்கும்”  என்று ஜோசியர் எழுதியே கொடுத்துவிட்டார்.

அதை வாங்கித் தன் பையில் பத்திரப்படுத்திக்  கொண்ட சீனிவாசன் ஊர் திரும்பியபோது,  போஸ்ட் மாஸ்டர் வேறு வேலையாகச் சென்னை  சென்று விட்டார். ‘வந்தபிறகு கொடுத்துக்
கொள்ளலாம்’ என்று இவரும் அதைப் பத்திரமாகத்  தன் பையில் வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் சீனிவாசன் வழக்கப்படி, மாதம்  ஒருமுறை காஞ்சி மகானைத் தரிசிக்கப் போவதுண்டு அந்த மாதமும் போயிருந்தார். மகான் அமர்ந்திருக்க சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அமைதியாக ஒவ்வொருவராக எழுந்து தங்களது வேண்டுதல்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.

தன் முறை வந்தபோது, ஒரு பெண்மணி எழுந்து தன்  மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் விரைவில் திருமணமும் ஆகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மகான் முகத்தில் லேசான புன்முறுவல். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சீனிவாசனைப் பார்த்தார். இந்தப்பெண்மணிதான் போஸ்ட் மாஸ்டர் முகுந்தராஜின் மனைவி என்பதே சீனிவாசனுக்குத் தெரியாது.

“பையில் பத்திரமா வெச்சுண்டு இருக்கியே……  அந்த ஜாதகத்தை இப்படிக் கொடு!” என்று கேட்கிறார்.  சீனிவாசன் ஜாதகத்தை எடுக்க “அதை அந்த  அம்மாளிடம் கொடு” (ஜோதிடர் எழுதிய பலனோடு)  என்று உத்தரவு போடுகிறார்.அந்த இருவருக்கும்  ஒரே நொடியில் விவரம் புரிகிறது.

அது சரி…..தன் பையில் வைத்திருந்த ஜாதகக் குறிப்பு  பற்றி மகானுக்கு எப்படித் தெரியும்? முகுந்தராஜின்  மனைவி அங்கே வருவார் என்பதும் இவருக்குத்  தெரியாதே!

மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும்  நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும்  அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத்  தெரிந்துகொள்ள முடியாதா என்ன?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...