‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்”- ஸ்பெயின்  பிரமுகர்

( தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார் பெரியவா.. ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து போயிற்று).

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் வந்து மகானைத் தரிசனம் செய்கிறார். அவர் ஸ்பானிஷ் மொழியில் பேசியதை மகானுக்கு ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம். இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிகை வாயிலாக எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு.

ஆனால் மகான் இதைப் பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.

அவர் என்ன கேட்டார் பாருங்கள்.

“உங்கள் அரண்மனையில் நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு இருக்கோ?”

“ஆமாம்”

“இப்ப நீங்க எந்த ‘விங்’லே இருக்கீங்க?”

“நியூவிங்” என்கிறார் அவர்.

“அங்கே தண்ணீர்,மத்தவசதி எல்லாம் இருக்கோ?”

“ஆமாம் நியூவிங் மிகவும் வசதியாக இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்.”

அடுத்து மகான் அவரிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

“அப்போ அந்த உபயோகப்படாம இருக்கிற ஓல்ட்விங்கை இடிச்சுட்டு, நந்தவனமா பண்ணிடலாமே” என்று அந்த மகான் சொன்னதைக் கேட்டதும் ஸ்பெயின் பிரமுகருக்கு ஒரு பலமான சந்தேகம் மனதில் எழுந்தது.

இப்படி தன் நாட்டின் ஒரு குறிப்பட்ட இடத்தைப் பற்றி இத்தனை விரிவாகச் சொல்லி, அதை இப்படி மாற்றலாம் என்று அறிவுரை வேறு கூறுகிறாரே என்று நினைத்த அவர், மொழிபெயர்ப்பாளரிடம், “மகான் எப்போது ஸ்பெயின் நாட்டிற்கு விஜயம் செய்தார்?” என்று கேட்டார்.

மொழிபெயர்ப்பாளர் அதை மொழிபெயர்ப்பு செய்து பதில் கேட்பதற்கு முன்பே சாட்சாத் பரமேஸ்வரரான மகான், ஒரு சைகையின் மூலம் அந்த ஸ்பெயின் பிரமுகருக்கு பதிலளித்து விட்டார்.

தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார். ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து போயிற்று.

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்” என்று தெரிந்து கொண்ட அவருக்கு மெய்சிலிர்க்க, கீழே விழுந்து வணங்கி எழுந்து, மகானின் ஆசியைப் பெற்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...