“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)

“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?”

(துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)
-பெரியவா சொன்ன கதை)

கட்டுரையாளர்-நிவேதிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நன்றி-சக்தி விகடன்
06-06-2017 தேதியிட்ட இதழ்

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; “ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?” என்று கேட்டார்.

பக்தருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. காரணம்,, அவருக்குத் தெரிந்து மகா பெரியவா அந்த ஊருக்கு விஜயம் செய்திருப்பதாக நினைவில்லை .ஆச்சர்யம் அடங்காமலே. “ஆமாம் பெரியவா, நீங்க சொல்றாப்போல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு” என்று சொன்னார்.

“அந்தக்கோயில் பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?”மகானின் அடுத்த கேள்வி பெரியவாளே சொல்லட்டும் என்று அந்த பக்தர் அமைதியாக இருந்தார்.

பெரியவாளே தொடர்ந்து, “சரி,ஒன்னோட ஊர்ல துக்கிரிப் பாட்டிங்கற பேர்ல ஒரு பாட்டி இருந்தது நோக்கு தெரியுமோ” என்று அடுத்த கேள்வியையும் கேட்டார்.

அந்த பக்தர்,”அப்படி ஒரு பாட்டி இருந்ததா கேள்வி” என்றார்.

“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையார் கோயில்லதான் அப்பல்லாம் ராம நாமப் பாராயணம் நடக்கும்.அதனாலதான் அந்தப் பிள்ளையாருக்கு ராம பிள்ளையார்ங்கற பேர் வழக்கத்துல வந்துடுத்து. இப்ப துக்கிரிப் பாட்டியைப் பத்தி சொல்றேன் கேட்டுக்கோ” என்ற பெரியவா தொடர்ந்து துக்கிரிப் பாட்டியைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

“ஒன்னோட ஊர்ல ஒரு பாட்டி இருந்தா. அவளோட சின்ன வயசுலயே புருஷன் காலகதியாயிட்டதால, ஊரெல்லாம் அவளை, ‘துக்கிரி,துக்கிரி’ என்று ஏசியது.கடைசியில துக்கிரிங்கற பேரே அந்தப் பொண்ணுக்கு நெலைச்சுடுத்து. அவளும் தன்னோட விதியை நொந்தபடி சதா காலமும் ராம நாம ஜபம் செய்து பகவானின் நெனைப்பாகவே’இருந்தா காலப்போக்கில அந்தப் பொண்ணுக்கும் வயசாகி.
பாட்டியாகிட்டா.அப்பவும் ஊர்ல இருக்கிறவங்க அவளை துக்கிரிப் பாட்டின்னுதான் துரத்திக் கிட்டிருந்தாங்க.

இப்படி இருக்கறச்சே,ஒருநாள் அந்த ஊர்ல இருக்கிற முக்கிய பிரமுகரோட பையனுக்கு திடீர்னு வயத்து வலி வந்துடுச்சு. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகலை அந்த பிரமுகருக்கோ ஒரே கவலையா போயிடுத்து. விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பாட்டி மத்தவங்க என்ன சொல்வாங்களேன் னெல்லாம் கவலைப்படாம, கையில் விபூதி சம்படத்தை எடுத்துண்டு நேரா அந்தப் பிரமுகரோட வீட்டுக்குப் போயிட்டா. (சம்புடம் சம்பூடம்-என்றும் வழக்கு)

அந்தப் பையனோட பக்கத்துல உட்கார்ந்துண்டு ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தா. ஜபம் முடிஞ்சதும், சம்புடத்துல இருந்து விபூதியை எடுத்து அந்தப் பையனோட நெத்தியிலயும் ,வயத்துலயும் பூசிவிட்டா. விபூதியைப் பூசிவிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பையனோட வயத்து வலி கொறைஞ்சு மெள்ளச் சிரிக்க ஆரம்பிச்சான். அந்தப் பிரமுகர் மட்டுமில்லாம,ஊர்ஜனங்க எல்லோருக்கும் ஆச்ச்ர்யமா போயிடுத்து.ராம நாமம் ஜபிக்கும் அந்தப் பாட்டியைப் போய் துக்கிரிப் பாட்டின்னு சொல்லிட்டுருந்தோமேன்னு எல்லோரும் ரொம்பவே வருத்தப்பட்டாங்க.

அதுக்கப்புறம் ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் அந்தப் பாட்டியைத் தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க.புருஷங்காரன் போனதுக்கப்பறம் மனசை அலைபாயவிடாமல் ராம நாமத்தை ஜபம் செய்துண்டு இருந்ததுனாலதான், பிரமுகர் பையனோட வியாதியை சொஸ்தப்படுத்தவும் , அதனால ஊர் மக்களோட மதிப்பையும் அன்பையும் பெற முடிஞ்சது.”

“நீயும் தொடர்ந்து ராம நாமத்தை ஜபம் பண்ணிக்கிட்டே இரு” என்று சொல்லி ஆசீர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...