அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும்!

“அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள்.-(தொந்திரவாக இருக்கிறது என்று சொன்ன தொண்டர்களிடம் பெரியவா-மேலே சொன்னது)

ஜூன் 10,2017-தினமலர்-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே இருக்கும். மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள். புகழ்பெற்ற மடம் இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

ஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள் தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப் பார்த்த பின் பேசினார்.

‘அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல (மாலை) ஜனங்க அதிகம் வர்றதும், சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ? நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்?

சாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது? அது நல்லதுதானே? அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம்பண்றோமா? மூணுவேளை காயத்ரி ஜெபிக்கிறோமா?? அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப் பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ?’

பரமாச்சாரியார் தொடர்ந்தார்:

‘எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச் சேர்வோம் தானே! எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம்.

ஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா? எல்லா மதமும் சம அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான்? அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.’

சுவாமிகள் தொடர்ந்து சொன்னார்:

‘அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

பெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அன்பர்கள் விழிகளில் பக்திக் கண்ணீர் தளும்பியது

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...